சிலந்தி நாயகம் – நம் மூலிகை அறிவோம்

Ruellia Patula; கிரந்தி நாயகம்; சிலந்தி நாயகம்

கிராமங்களில் சாதாரணமாக காணப்படும் ஒரு மூலிகை இந்த சிலந்தி நாயகம். ஆங்காங்கே நிறைய பூக்கள் பூத்திருக்கும் இந்த மூலிகையை வயல்வெளிகள், ஈரமான இடங்களில் அதிகம் பார்க்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான ஒரு மூலிகை என்றும் இதனைச் சொல்லலாம். காரணம் இதன் கனிகள்.. வெடித்து சிதறும் தன்மைக் கொண்டது இதன் கனிகள். இதனைக் குழந்தைகள் விரும்பி ஆர்வத்துடன் பார்ப்பதும், இந்த மூலிகையை அவர்கள் தேடவும் வைக்கும். இது பட் என்ற சத்தத்துடன் வெடிப்பதால் இதற்கு பட்டாசுகாய் செடி என்ற பெயர் உண்டு. மேலும் கிரந்தி நாயகன், கிரந்தி நாயகம், சிலந்தி நாயகன், பட்டாஸ்காய் செடி, கட்டிப்பூண்டு என பல பெயர்கள் இந்த செடி வகை மூலிகைக்கு உண்டு.

கைப்பு சுவைக்கொண்ட கிரந்தி நாயகம் செடியின் இலைகள் மத்தியில் அகலமாகவும் இலைகாம்பு மற்றும் முனையிலும் குறுகி எதிரிலைக் குறுக்கு மறுக்கு அடுக்கத்திலும் அமைந்திருக்கும். வெள்ளை நிறத்தில் தனி மலர்களாக இதன் மலர்கள் இலைக் கோணத்தில் காணப்படும். மேலும் சில வகைகளில் ஊதா, கருஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும். இந்த பூக்களுக்கு பட்டம்பூச்சிகளும், தேனீக்களும் அதிகமாக வரும். காய் பச்சை நிறத்தில் இருக்கும். இதன் கனி வெடித்து சிதறும் பண்புடையது. இந்த விதைகளின் மூலமே இதன் இனப்பெருக்கமும் அதிகமாக இருக்கும்.

பல நோய்களுக்கும் சிறந்த சிலந்தி நாயகம்

நுண் கிருமிக்கொல்லியாக இந்த மூலிகை நமக்கு பயன்படுகிறது. மேலும் கண் நோய்கள், பல் நோய்கள், நகச்சுற்று, கழுத்து வலி, வயிற்று வலி, சிரங்கு, புண், குடல் புண், விஷக்கடி உட்புண் போன்ற நோய்க்கும் சிறந்த பலனை அளிக்கும். சிலந்தி நாயகம் இலையை அரைத்து ஒரு சுண்டக்காய் அளவு எடுத்து பசுவின் வெண்ணெயுடன் கலந்து காலை, மாலை 2 வேளை எடுக்க குறிப்பிட்டிருக்கும் தொந்தரவுகள் மறையும்.

விஷக்கடிகளுக்கு

சிலந்தி நாயகம் இலைகள் ஐந்தை எடுத்து நன்கு மென்று விழுங்குவதால் பாம்பு, தேள்கடி விஷங்கள் நீங்கும். மேலும் இலையை அரைத்து கடிவாயிலும் பூசலாம் பலன் கிடைக்கும். மேலும் சிலந்தி நாயகம் இலையை அரைத்துப் பூச புண், சிரங்கு, நகச்சுற்று ஆகியனவும் மறையும்.

(1 vote)