சீரக சம்பா அரிசி / Seeraga Samba Rice

உணவு… வாழ்வாதாரத்திற்கும் உயிர் வாழ்க்கைக்கும் அவசியமான ஒன்று. உலகில் உள்ள மனிதர்களை இரண்டு பிரிவுகளாக உணவைக்கொண்டு பிரிக்கலாம்.

வாழ்வதற்காக உண்பவர்கள், உண்பதற்காக வாழ்பவர்கள். இதில் ஒரு பிரிவினர் உடலின் வெளிப்பாடான உணவின் தேவையை அறியாதவர்கள். மற்ற பிரிவினரோ உடலின் தேவையை அவ்வப்போது உணர்ந்து அதற்கு ஏற்றாற்போல் செவிசாய்ப்பவர்கள்.

பசிப்பிணி

எப்படி இருந்தாலும் உணவு இரு பிரிவினருக்கும் அவசியம் தான். அப்பேர்ப்பட்ட உணவின் தேவையையும் உடல் பசியின் மூலம் வெளிப்படுத்துகிறது. பசி என்பது உணவின் தேவையை உடல் வெளிப்படுத்துவது மட்டுமல்ல ஒவ்வொரு உயிரின் முதல் நோயும் அதுதான் என்கிறது தமிழும் சங்க இலக்கியம்.

அதாவது பசியை ‘பசிப்பிணி’ என்பதன் மூலம் அதனை அறிந்து கொள்ளலாம். 

பசி வந்திடப் பத்தும் பறந்து விடும்

‘பசி வந்திடப் பத்தும் பறந்து விடும் அல்லவா?’ அதில் பத்தும் என்பது எதோ அன்றாடம் வீடுகளில் நடக்கும் பிரச்சனைகள், போராட்டங்கள், எதிர்கால கனவுகள், பணத்தேடல், கவலை, சண்டை சச்சரவுகள், கோபம் போன்றவைகளை மறந்து உணவினை உட்கொள்வோம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையோ இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டதாகவும், மேலானதாகவும் இருக்கிறது. 

உயிர் வாழ்வதற்கும், வாழும் வாழ்க்கை ஆரோக்கியமானதாக இருப்பதற்கும் அவசியமான ஒன்றையே அந்த வரிகள் கூறுகிறது.

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது, நமது கவலைகளும் கஷ்டங்களும் அல்ல. நமது உடலில் இருக்கும் பிணியும் நோயும் தான். அதாவது இதனையே வள்ளுவப் பெருந்தகை 

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது 
அற்றது போற்றி உணின்.
– என்கிறார்.

அதாவது உண்ட உணவு உடலில் ஜீரணித்து தன் வயப்பட்ட பின் பசி என்ற உணர்வு உடலில் மீண்டும் தோன்றியவுடன் உண்ணும் உணவினால் அந்த உடலுக்கு எந்த மருந்தும் மருத்துவமும் தேவையில்லை என்பது தான்.

பசி என்ற பிணி

பசி என்ற பிணி தோன்ற அதன் பின் உணவினை உட்கொள்வோமானால் எந்த நோயும் நம்மை அடையாது. ஆக பசியை அறிந்து உணவினை உண்ண பசிப்பிணியை தவிர வேறு நோய்கள் மனித இனத்தையே அண்டாது. 

இன்றோ பல பல நோய்களுக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது பசி இல்லாததும், பசிப்பதற்கு முன் உணவருந்துவதும், நேரத்தை தவறவிட்டு நேரத்திற்கு உணவருந்துவதும், சேரக்கூடாது உணவுகளை சேர்த்து உண்பதும், தவறான உணவுகளை உண்பதும், உணவல்லாத பல செயற்கைப் பொருட்களை உண்பது என்று பல பல தவறான பழக்கங்களும், சீரான ஜீரணமின்மையும் தான்.     

நோய் எவ்வாறு உருவாகிறது

ஜீரணமின்மையின் காரணமாக உணவு உடலில் புளித்து பல்வேறு வேதியியல் மாற்றங்கள் அடைவதால் பல நோய்கள் உருவாகிறது. மேலும் உணவு உடலில் சேராது கழிவாக மாறி சிரமப்பட்டு வெளியேறுவதால் ஜீரணமண்டலமே பாதிப்புக்குள்ளாகிறது. இதுவும் காலப்போக்கில் தொடர பல வித நோய்களுக்கு காரணமாகிறது.

நேரத்திற்கு உறங்காது நேரத்திற்கு விழிக்காது உணவினை மட்டும் மூன்று வேளை அதுவும் நேரம் தவறாமல் உண்பதால் உடலில் பல உபாதைகளும் நாள்ப்பட்ட நோய்களும் உருவாகிறது.

இவ்வாறு உணவு உடலுக்கு கழிவாகவும் நஞ்சாகவும் மாற உடல் மிகுந்த சிரமப்படுவதுடன் ஜீரண மண்டலமும் அதிக அளவு பாதிக்கப்படுகிறது. இதனை உடல் துர்நாற்றத்துடனான ஏப்பமாகவும், வாய் துர்நாற்றமாகவும், வியர்வை துர்நாற்றமாகவும், வயிறு உப்புசமாகவும், உணவு உணவுக்குழாயில் மேல்நோக்கி வருவதனாலும், சோர்வு, மந்தத்தன்மை போன்றவற்றால் அறிந்து கொள்ள முடியும்.

இவற்றில் ஏதோ ஒரு அறிகுறியோ அல்லது பல அறிகுறியோ தொடர்ந்து வெளிப்படுமானால் அதனை எளிதாக எளிய உணவுகள் உட்கொள்வதன் மூலம் சீராக்கவும் முடியும்.

பாரம்பரிய உணவுகள்

இந்த எளிய உணவுகளின் வரிசையில் பல மருத்துவகுணங்கள் கொண்ட நமது பாரம்பரிய காய்கள், பழங்கள், மூலிகைகள் இருந்தாலும் அன்றாடம் உண்ணும் அரிசியும் அதில் இடம் பெற்றுள்ளது சிறப்பு வாய்ந்ததே.

அரிசி உணவு இல்லாத உணவு நம்மவர்களுக்கு என்றுமே மனநிறைவையும், உண்ட நிறைவையும் அளிக்காது. பண்டைய நூல்களும் மருத்துவ குறிப்புகளும் எளிதாக சீரணமாகும் அரிசி வகைகளில் நமது சீரக சம்பா அரிசியினை சிறப்பாக குறிப்பிட்டுள்ளது. 

சீரக சம்பா அரிசியின் பெருமை

சீரக சம்பா என்றதும் பலருக்கு அதன் மருத்துவகுணம் தெரிந்திருக்கிறதோ இல்லையோ அந்த அரிசியின் மணமும் சுவையும் நினைவுக்கு வந்திருக்கும்.  

இன்று அனைவருக்கும் விருப்பமான பிரியாணி, புலாவ் போன்ற உணவுகளில் அதிகமாக பயன்படுத்துவது இந்த சீரக சம்பா அரிசியை தானே. சாதாரண சீரக சம்பா அரிசி பிரியாணியே தனி சுவையுடனும் மணத்துடனும் இருக்கின்றதென்றால்  2000 வருட பாரம்பரிய சீரக சம்பா அரிசியைப் பற்றி சொல்லவா வேண்டும்.

சீரகச் சம்பா அரிசி பயன்கள்

சுவையும் மணமும் இல்லாத உணவு சீரணத்தை சற்று தாமதப்படுத்தும். அதிலும் ஏற்கெனவே அஜீரண கோளாறு உள்ளவர்களுக்கு மேலும் தொந்தரவுகளை அதிகப்படுத்தும்.

ஒரு உணவை தயாரிக்கும் பொழுதும், அதன் இயற்கையான சுவையை மணக்கும் பொழுதும் அந்த உணவு நம்மை சுவைத்து உண்ணத் தூண்டும். 

பக்கத்துக்கு வீட்டில் மணமான உணவு தயாராக அதன் வாசனையை பிடித்த சுகத்திலேயே நமது நாக்கில் எச்சில் ஊறுவதனை யார்தான் மறக்க முடியும். எச்சில் மட்டுமா ஊறும் நமது ஜீரண மண்டலத்தின் ஜீரண சுரப்பிகள் எல்லாம் அணிவகுத்து அல்லவா ஊரும்.

பசியைத் தூண்டும். இதிலிருந்து ஒன்று புரிந்திருக்கும். நாம் அனைவரும் இந்த மணத்திற்கும் சுவைக்கும் தான் அடிமைப்பட்டிருக்கிறோம் என்பது.

உணவு என்பது நல்ல மணத்துடனும் சுவையுடனும் இருக்க உடலும் மணமும் ஆரோக்கியமாகவும் தெம்பாகவும் இருக்கும். இந்த சூட்சமத்தை அறிந்த இன்றைய வணிக உலகம் இயற்கை மணத்தையும் சுவையையும் கொண்ட நமது பண்டைய உணவுகளை மறக்கடித்து செயற்கை சுவையூட்டிகளையும் மணமூட்டிகளையும் கொண்ட உணவுகளை தயாரிக்க தொடங்கியது. இதனால் வந்தது தான் இன்றைய நவீன நோய்கள் பலவற்றிற்கு காரணம்.

அதுவும் குறிப்பாக உணவு சீராக ஜீரணிக்காது, கழிவுகளாக உடலை வேதியியல் மாற்றமடைய செய்து உடலைக் துர்நாற்றம் கொண்ட குப்பை தொட்டியாக மாற்றுவதற்கும் காரணம் இதுதான். இவ்வாறான செயற்கை உணவுகளை தவிர்த்து இயற்கையான சீரக சம்பா போன்ற இயற்கை மணம் கொண்ட பாரம்பரிய அரிசிகளை உண்ண பல தொந்தரவுகள் தீரும்.

சீரக சம்பா அரிசியின் வேதியல்

சீரக சம்பா அரிசியின் இயற்கையான மணம் அளிக்கக் கூடிய 2-அசிட்டைல்- 1-ப்ய்ரரோலினி என்ற இயற்கை வேதியல் பொருள் இருப்பதால் அதன் மணம் ஒரு உணவை உண்ணத் தூண்டுகிறது.

சன்ன ரக அரிசியான இதனை சமைக்கும் பொழுது இந்த வேதியல் பொருள் அபாரமான மணத்தினை கொடுப்பதுடன் உண்பவருக்கு சீரான ஜீரணத்தையும் அளிக்கிறது.

சீரக சம்பா அரிசி ரகங்கள்

சீரக சம்பா அரிசியில் பல ரகங்களும், பல வாசனையையும் கொண்ட அரிசிகள் உள்ளது. துளசி, ஜீரகம், மசாலா மணம் என பல மணத்துடன் நமது பாரம்பரிய சீரக சம்பா அரிசி இன்று நடைமுறையில் உள்ளது.

பாரம்பரிய சீரக சம்பா அரிசியின் தனித்தன்மை என்னவென்றால் பல விவசாயிகள் இதனை இயற்கை முறையில் பயிரிடுவது. எந்த செயற்கை ரசாயனமும், பூச்சிக்கொல்லியும் இல்லாது இன்று இந்த சீராக சம்பா அரிசி கிடைக்கிறது. அதிலும் கைக்குத்தல் முறையில் உமியை மட்டும் நீக்கி தவிட்டுடன் கூடிய அரிசியில் பல பல சத்துக்கள் உள்ளது.

GI குறைவான அரிசி

அன்றாடம் உண்ணும் வெள்ளை அரிசியை விட இதன் GI குறைவாக உள்ளது. இதனால் சர்க்கரை வியாதி உள்ளவர்களும் இதனை உண்ணலாம். மேலும் இதில் புரதம், நார்ச்சத்துக்கள், மற்றும் வைட்டமின் சத்துக்களும் உள்ளது. 

சீரக சம்பா அரிசியில் சிற்றண்ணம்

இந்தியாவின் பெருமையான பாரம்பரிய பாசுமதி அரிசியைப் போல நமது தமிழகத்தின் பெருமையான சீரக சம்பா அரிசியினை அந்த காலத்தில் சிற்றண்ணம் படைத்து வளைகாப்பு நேரத்தில் கருவுற்றிருக்கும் பெண்களுக்கு கொடுப்பது வழக்கம். இதில் கலவை சாதம் என்று இன்று நாம் சொல்லும் எலுமிச்சை சாதம், புளியஞ்சாதம், தேங்காய் சாதம், வெண்பொங்கல், கூட்டாஞ் சோறு போன்றவற்றை தயாரித்து உண்டு மகிழ்ந்தனர்.

சீரக சம்பா அரிசியுடன் நாட்டு காய்கறிகளையும் நாட்டுப் பருப்பையும் கொண்டு தயாரிக்கும் கூட்டாஞ் சோறின் சுவை தனி சுவை தான்.

சீரக சம்பா அரிசி பிரியாணி

மேலும் ஊன்சோறு என்று நமது ஊர்களில் சீரக சம்பா அரிசியுடன் இஞ்சி, பூண்டு கொண்டு தயாரான உணவு இன்று மேற்கத்திய உணவான பிரியாணியுடன் சேர்ந்து பல வகைகளில் இன்று அனைவருக்கும் பிடித்த உணவாக வளம் வருகிறது. இன்றும் பல பிரத்தியேக பிரியாணி தயாரிப்பாளர்கள் தங்களின் உணவு விடுதிகளில் இந்த சீரக சம்பா அரிசியினை கொண்டே பிரியாணி தயாரிக்கின்றனர். அவர்களின் உணவின் சுவைக்கும், மணத்திற்கும் காரணமும் இதுவே.

சீரக சம்பா அரிசியில் பிரியாணி மட்டுமல்லாது அன்றாடம் உணவிற்கும் இதனை பயன்படுத்தலாம். 

(10 votes)