சீமையகத்தி – நம் மூலிகை அறிவோம்

Cassia Alata; Broad Leaved Cassia; சீமையகத்தி

தமிழக கிராமங்களில் புதர் நிலங்களில் அதிகமாக வளர்ந்திருக்கும் ஒரு மூலிகை சீமையகத்தி. சரும நோய்களுக்கு சிறந்த பலனை அளிக்கும் தன்மை கொண்டதும் இந்த மூலிகை. பேயகத்தி, மலைத் தகரை, வண்டுக் கொல்லி, வண்டுக் கடியிலை என பல பெயர்கள் இந்த சீமையகத்திக்கு உண்டு.

இது ஒரு பெருஞ்செடி வகையைச் சேர்ந்த மூலிகைத் தாவரம். இதன் இலைகள் நீள்வட்டவடிவத்தில் கூட்டிலைகளாகக் காணப்படும். தண்டின் நுனியில் மேல்பகுதிகாளாக பொன்மஞ்சள் அல்லது செம்மஞ்சன் நிறமான பெரிய பூக்கள் கொத்தாகக் காணப்படும். இதன் கனிகள் முற்றியப்பின் வெடித்து சிதறும் தன்மைக் கொண்டது. அவை நீளவாக்கில் வெடிப்பவை.

கைப்பு சுவை கொண்ட பேயகத்தி என்னும் சீமையகத்தியின் இலை, வேர், பூ ஆகியவை பயன்படும் பகுதிகள். உடல் கழிவுகள், குடல் புழுக்களை அழிக்கும் மிக அற்புதமான இந்த மூலிகை படர்தாமரை, படை, அரிப்பு, விஷக்கடி, வண்டுகடி, மேகக்கட்டிகள் ஆகியவற்றிற்கு சிறந்தது.

படர்தாமரை, படை, அரிப்பு, விஷக்கடி நீங்க

  • சீமையகத்தி இலையை அரைத்துப் போட்டாலேயே போதும் சிலநாட்களில் நோயின் வீரியத்திற்கு ஏற்ப இவை மறையும்.
  • விரைவாக நல்ல பலன் கிடைக்க சீமையகத்தி இலையை எலுமிச்சம் பழச்சாறு அல்லது சுண்ணாம்புத் தெளிநீர் விட்டரைத்து மேலுக்குத் தேய்க்கநீங்க விரைவில் இந்த நோய்கள் நீங்கும்.
  • அரைத்துப் அப்படியே பற்றுப் போட முடியாதவர்கள் இந்த சீமையகத்தி இலையை அரைத்து தேங்காயெண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் குழைத்துப் போடவும் இந்த நோய்கள் விரைவாக மறையும்.
  • அதுவும் முடியாது நாங்கள் வேலைக்கு செல்பவர்கள் என்பவர்கள் இதனை ஒரு களிம்பாக (cream) தயாரித்து மிக சுலபமாகப் பயன்படுத்தலாம். ஒரு சிறு பங்கு தேன் மெழுகு எடுத்து அதனுடன் இரண்டு பங்கு தேங்காய் எண்ணெய் கலந்த அதனை ஒரு இரும்பு வாணலியில் உருக்கி சூடேற்றி எடுக்கவும். பின் சூடு குறையும் முன், இரண்டரைப்பங்கு அல்லது மூன்று பங்கு சீமையகத்தி இலை சாறினை விட்டு மெழுகு போல் தயாரித்து ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட இடத்தில் அவ்வப்பொழுது தேய்க்க விரைவில் படர்தாமரை, படை, அரிப்பு, விஷக்கடி, வண்டுகடி, மேகக்கட்டிகள் நீங்கும்.
(23 votes)