இயற்கை முறையிலும் எளிமையாகவும் நமது விதைகளின் முளைப்புத்திறனை அதிகரிக்க இயற்கையான விதை நேர்த்தி எவ்வாறு செய்வது என்று பார்ப்போம். விதை நேர்த்தி என்றால் என்ன? இதற்கு பெரிதும் நமக்கு உதவுவது நமது நாட்டு மாட்டின் சாணம்.
பஞ்சகவ்யா, அமிர்த கரைசல் போன்ற இயற்கை வளர்ச்சி ஊட்டிகளைக் கொண்டு எளிதாக விதைநேர்த்தி செய்யலாம்.
விதைநேர்த்தி செய்வதால் ஏற்படும் பயன்கள் / Benefits of Organic Seed Treatment
- விதைகள் நோய்த்தாக்குதல், பூச்சித்தாக்குதல் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கப்படும்.
- மண், காற்று, நீர், விதை போன்றவற்றால் பரவும் பூஞ்சாண நோய்களிலிருந்து காக்கப்படும்.
- செடியின் நோய்யெதிர்ப்புத்திறனை அதிகரிக்கும்.
- விதைகளின் முளைப்புத்திறனை அதிகரிக்கும்.
- செடிகளின் வளர்ச்சி, விளைச்சலை அதிகரிக்கும்.
- பலவகையான விதைநேர்த்திக்கும் நமது நாட்டு மாட்டின் சாணத்தில் தயாரான பஞ்சகவ்யமும், அமிர்த கரைசலுமே போதுமானது. விதைகள் பாதுகாக்கப்படும்.
எவ்வாறு விதை நேர்த்தி செய்வது
விதைக்க தேவையான விதைகளை முதலில் தயாராக எடுத்துக்கொள்ளவும். (உதாரணத்திற்கு ஏதேனும் பத்து விதைகள்). அமிர்தக்கரைசல் அல்லது பஞ்சகவ்யத்தினை இரண்டு மில்லி அளவு எடுத்துக்கொள்வோம். (விதைகளின் அளவிற்கு ஏற்ப அளவினை மாற்றிக்கொள்ளலாம்).
ஒரு சிறு கப்பில் இந்த இரண்டு மில்லி (இரண்டு மூன்று சொட்டுக்கள்) அமிர்தக்கரைசல் அல்லது பஞ்சகவ்யத்தினை எடுத்துக்கொண்டு அதனுடன் இருபது மில்லி நீரினை சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும். பின் அதனில் இந்த விதைகளை ஊறவைக்கவும். காய்கறி விதைகளை இவ்வாறு விதைநேர்த்தி செய்தாலே போதும்.
கடினமான விதைகளான பாகல், சுரை போன்றவற்றை ஐந்தாறு மணிநேரமும், லேசான விதைகளை ஓரிரு மணிநேரமும் ஊறவைத்தால் போதும்.
பின் அவற்றை ஒரு காகிதத்தில் அரை மணிநேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை உலர்த்தி மண்ணில் விதைத்து விடலாம்.
பஞ்சகவ்யத்திலும், அமிர்தக்கரைசலிலும் செடிகள், விதைகளுக்கு தேவையான அனைத்து நுண்ணூட்ட மற்றும் பேரூட்ட சத்துக்களும், உயிர் உரங்களும் அதிகளவில் உள்ளது.
இவை எதுவுமே இல்லையென்றாலும் பரவாயில்லை நாட்டுமாட்டின் சாணத்தில் ஒரு துளியினை எடுத்து அதனுடன் இருபது மடங்கு நீரினை கலந்து அதிலும் விதைகளை விதைநேர்த்தி செய்யலாம்.