கீரைகளை எல்லா காலத்திலும் நம் உணவோடு பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் உடலுக்கு தேவையான பல சத்துக்களையும் அளிக்கும். இரும்பு சத்துக்களும், சுண்ணாம்பு சத்துக்களும் கீரைகளில் அதிகளவும் இயற்கையான முறையில் உள்ளது. அதனால் கீரைகளை அன்றாடம் உணவில் பானமாகவோ. பொரியல், கடையல், கூட்டு, மசியலாகவோ செய்து உண்ண நல்ல பலன் கிடைக்கும். மேலும் கீரைகளைப் பற்றி தெரிந்துக் கொள்ளவும், கீரைகளின் வகைகளை தெரிந்துக் கொள்ளவும் இந்த பதிவில் இணையவும்.
எல்லா காலத்திலும் கீரைகளை உட்கொள்ள வேண்டும் என்றாலும் சில கீரைகள் சில காலங்களிலேயே கிடைக்கும். மேலும் கீரைகளில் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் கீரை, உஷ்ணத்தை அளிக்கும் கீரை, உடலின் வெப்பத்தை சமநிலைப்படுத்தும் கீரை என அவற்றின் தன்மைகளுக்கு ஏற்ப கீரைகளை நாம் அந்தந்த காலத்தில் உண்ண சிறந்த பலனை பெறலாம்.
பங்குனி முதல் சித்திரை மாதம் வரை
பின்பனிக்காலம் எனப்படும் பங்குனி முதல் சித்திரை மாதத்தில் காலை உணவில் முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, பசலைக் கீரை என எளிமையாக கிடைக்கும் கீரைகளில் ஒரு பானம் தயாரித்தோ அல்லது உணவாக செய்தோ காலையில் உண்ணலாம்.
அதே போல மதிய உணவில் முளைக்கீரை, சிறு கீரை, அரைக்கீரை, கீழாநெல்லி கீரை, பருப்பு கீரை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
வைகாசி முதல் ஆனி மாதம் வரை
இளவேனிற் காலம் எனப்படும் வைகாசி முதல் ஆனி மாதம் வரை காலையில் முருங்கைக் கீரை, கரிசலாங்கண்ணி கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, லட்ச கொட்டை கீரை, தவசி கீரை, சக்கரவர்த்தி கீரை, வெந்தயக் கீரை, பாற்சொறி கீரை, குப்பைக் கீரை, தூதுவளை ஆகியவற்றை காலையில் பானம் தயாரித்து அல்லது உணவு செய்து சேர்த்துக் கொள்ளலாம்.
மதிய உணவில் அரைக்கீரை, சிறு கீரை, வல்லாரைக் கீரை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
ஆடி முதல் ஆவணி மாதம் வரை
முதுவேனிற் காலம் எனப்படும் ஆடி முதல் ஆவணி மாதம் வரையுள்ள காலத்தில் ஆரக்கீரை, அரைக்கீரை, தூதுவளை, முசுமுசுக்கை, வள்ளி கீரை, வல்லாரை, மூக்கிரட்டை, கானம் வாழை கீரை, முடக்கத்தான், பண்ணை கீரை, லட்ச கொட்டை கீரை, குப்பைக் கீரை, புதினா, கொத்தமல்லி, முருங்கைக் கீரை ஆகியவற்றை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
மதியத்தில் முருங்கைக் கீரை, கொத்தமல்லி, வல்லாரை, தூதுவளை கீரை ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.
புரட்டாசி முதல் ஐப்பசி மாதத்தில்
கார்காலம் எனப்படும் புரட்டாசி முதல் ஐப்பசி மாதத்தில் காலை உணவில் கொத்தமல்லி, கரிசலாங்கண்ணி, முருங்கைக் கீரை, துத்திக் கீரை, ஆரக்கீரை, அரைக்கீரை, அம்மான் பச்சரிசி, முசுமுசுக்கை, சுக்கான் கீரை, லட்ச கொட்டை கீரை, குப்பைக் கீரை, வள்ளி கீரை, புதினா, முடக்கத்தான் கீரை ஆகியவற்றை காலையில் சேர்த்துக் கொள்ளலாம்.
மதிய உணவில் அரை கீரை, அகத்திக் கீரை, குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, முருங்கைக் கீரையையும்
இரவில் பிரண்டை, புதினாவையும் சேர்த்து கொள்ளலாம்.
கார்த்திகை முதல் மார்கழி வரை
கூதிர் காலம் எனப்படும் குளிர் காலத்தில் அதாவது கார்த்திகை முதல் மார்கழி வரை காலை உணவில் தினமும் மதிய உணவில் பொன்னாங்கண்ணி, முருங்கைக்கீரை, அரைக்கீரை, வல்லாரைக் கீரை, முள்ளி கீரை, குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, துத்திக் கீரை, முசுமுசுக்கை, ஆரக்கீரை, தூதுவளையை காலையில் அல்லது மதிய உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இதுவரை உள்ள எல்லா காலங்களிலும் இரவு உணவில் பிரண்டை, முட்டை கோஸ், கொத்தமல்லி, புதினாவை சேர்த்துக் கொள்ளலாம்.
தை முதல் மாசி வரை
முன் பனி காலம் எனப்படும் தை மாதம் முதல் மாசி மாதம் வரை உள்ள காலத்தில் காலையில் கரிசிலாங்கண்ணியை உட்கொள்ளலாம். மதிய உணவில் புளிச்ச கீரை, பசலை கீரையை உண்ணலாம். இந்த காலத்தில் இரவில் எந்த கீரையையும் உண்ணக் கூடாது.