Sathakuppai Benefits tamil, dill, Anethum Graveolens

சதகுப்பை / சதகுப்பி – நம் மூலிகை அறிவோம்

Anethum Graveolens; Dill; சதகுப்பை

நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும் ஒரு நாட்டு மருந்து சதகுப்பை. கொத்தமல்லியைப் போல் இருக்கும் இந்த சதகுப்பை செடியின் விதைகளே சதகுப்பை. உடலில் தங்கும் கழிவுகளால் குப்பைகளால் ஏற்படும் தொந்தரவுகளை வெளியேற்றும் தன்மை கொண்டதால் கூட இந்த அழகிய பூக்கும் சிறு செடிக்கு சதகுப்பை என பெயர் வந்திருக்கலாம். இந்த செடியின் கீரைகளை சமைத்தும் உண்ணலாம். இதில் நறுமண எண்ணெய் உள்ளது. அவையும் சந்தைகளில் மிக பிரபலம். சதகுப்பி, பதுரிகை. சோயிக்கீரை விதை என்றும் இதற்கு பெயர்கள் உண்டு. அளவோடு தேவைக்கேற்ப பயன்படுத்த சிறந்த மூலிகை இது. அளவிற்கு மிஞ்ச சில உடல் உபாதைகளையும் ஏற்படுத்தும்.

Sathakuppai Benefits tamil, dill, Anethum Graveolens

இனிப்பு, கார்ப்பு சுவை கொண்ட இந்த சதகுப்பையின் இலை, பூ, விதை ஆகியவை மருத்துவத்தில் பயன்படுகிறது. உடலுக்கு நல்ல பலத்தையும், உடல் தேற்றும் பண்புகளும் இந்த சதகுப்பைக்கு உண்டு. மேலும் இரத்தப் போக்கு, காதுவலி, தலைவலி, வாத நோய்கள், அஜீரணம், மூக்கு நீர் ஒழுகுதல், மாதவிடாய் கோளாறுகள், ஈரல், நுரையீரல், இரைப்பையில் ஏற்படும் பாதிப்புகளையும் நீக்கி சிறந்த பலனை அளிக்கும். அதேசமயம் பித்த உடலுக்கு ஆகாது. உடல் சூட்டை அதிகரிக்கும். மேலும் வாந்தி, தலைச்சுற்றல், விக்கல் ஆகியவற்றையும் ஏற்படுத்தும். இதனை முறிக்க புளிப்பு மிகுந்த எலுமிச்சை, மாதுளை சாறு / சர்பத் பருகலாம். சதகுப்பைப் பூவையும் குடிநீர் செய்து கொடுக்க பல நோய்கள் தீரும்.

சதகுப்பை இலை

  • காக்கை வலிப்பு தொந்தரவு நீங்கவும் குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்த நோய்க்கும் இந்த சதகுப்பை சிறந்த பலனை அளிக்கும்.
  • சதகுப்பை இலையை சாறெடுத்து அல்லது ஆமணக்கு எண்ணெயிலிட்டுக் காய்ச்சி எடுத்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்த நோய் தீரும்.
  • உடலில் ஏற்படும் வீக்கங்களுக்கு சதகுப்பை இலையை எடுத்து எண்ணெய் தடவி வதக்கி வீக்கங்களில் கட்ட வீக்கங்கள் விரைவாக பழுத்து குணமாகும்.
  • சதகுப்பை இலையை சுத்தம் செய்து உலர்த்திப் பொடி செய்து சர்க்கரை கலந்து ஒரு சிட்டிகை வீதம் எடுக்க கபநோய்கள், தலை நோய்கள், காதுவலி, பசி மந்தம், மூக்கு நீர் ஒழுகுதல் ஆகியன தீரும்.
  • பிரசவித்த பெண்களுக்கு சதகுப்பை இலையைக் குடிநீர் செய்து கொடுக்க இரத்த சிக்கல் நீங்கும்.

சதகுப்பை விதை

  • அதிக வயிற்றுவலி, பொருமல், குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம் போன்றவற்றிற்கு சதகுப்பை விதையைப் பொடி செய்து அதில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து ஒன்றரை கப் வெந்நீரில் ஊற வைத்து எடுக்க இந்த தொந்தரவுகள் தீரும். இதனை சுண்ணாம்புத் தெளிநீருடனும் சேர்த்துக் கொடுக்கலாம், அதிக பலன் அளிக்கும். தேவைகேற்ப மட்டும் எடுப்பது சிறந்தது.
  • சதகுப்பை விதையுடன் கருஞ்சீரகம், மரமஞ்சள், வெல்லம் சேர்த்து மருந்தாக காலை, மாலை எடுத்து சோம்பு நீர் எடுக்க இரத்தச் சிக்கலை நீக்கி கருப்பையை பலப்படுத்தும். அடிக்கடி அல்லது நாட்டு மருத்துவரின் பரிந்துரையின்றி எடுக்கக் கூடாது.
(8 votes)