சாமை அரிசி
சாமை – பெண் நலம்
பெண்கள் வீட்டின் கண்கள் மட்டுமல்ல அவர்கள் நாட்டின் இருதயத் துடிப்புமாவார்கள். நாட்டிலும் வீட்டிலும் உள்ள அனைத்து செயல்பாடுகளும் பெண்களைச் சார்ந்தே உள்ளது.
பெண்மை என்பது பொதுவாக வெளிப்படையாக பகிரும் தன்மை கொண்டது அல்ல. முழுக்க முழுக்க பகிர்ந்து கொள்ள முடியாத ஒரு அனுபவம். அன்பு, பாசம், பகிர்வு, பாதுகாப்பு, பொறுமை, அரவணைப்பு, கண்டிப்பு, பிணைப்பு, பகுத்தறிவு, ஆறுதல், சக்தி, ஆத்மா பலம், செயல்பாடு என இவைதான் பெண்மை என்று பிரித்து கூற இயலாத தன்மைகளைக் கொண்டது. இவ்வாறான ஒவ்வொரு செயல்பாடுகளும் தனியாகவும் ஒருங்கேயும் அமைந்த ஒரு அற்புத சக்தியே பெண்கள்.
என்ன தான் நவீனம் பலவற்றைக் கண்டுபிடித்தாலும், உருவாக்குதல் அல்லது படைத்தல் என்ற ஒன்றை இயற்கையிலேயே அமையப்பெற்றவள் தான் பெண். ஈடு இணையற்ற ஆக்கசக்தியையும், பல வருடம் தியானத்திலும் யோகத்திலும் கூட பெறமுடியாத ஆத்மா பலத்தையும் பெற்றிருபவர்களே பெண்கள்.
பெண்களுக்கு பாதுகாப்பு தேவை என்று கொக்கரிக்கும் சமூகத்தின் மத்தியில் பாதுகாப்பை வாய்திறக்காமல் பத்துமாதம் அளிக்கும் உணர்வு செயல்பாட்டில் உள்ளது. சொல் செயல் இரண்டிலும் வலிமை வாய்ந்தது செயல் மட்டுமே. அனைத்திலும் அதை செய்து காட்டுபவர்களும் பெண்கள் மட்டுமே.
செயல்பாட்டில் உள்ளவற்றை சில பல நேரங்களில் வெளிப்படுத்தவும் வேண்டும் என்ற சமுகமே இன்று நம் மத்தியில் உள்ளது. சிந்திக்க மறந்த நம்மவர்களுக்கு சொன்னாலே பல நேரங்களில் புரிவதில்லை பின் செயல்பாடு எங்கு புரியப்போகிறது. மேலும் பெண்களும் இன்று தங்கள் நிலையை மறந்து மாயையில் உள்ளனர்.
பெரிய மரங்களைக்கூட வேரோடு பெயர்த்து எடுக்கும் சக்தியுள்ள யானையைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். குட்டியாக இருக்கும்போது மிகவும் பலமுள்ள வடம் அல்லது சங்கிலியால் மரத்தில் கட்டி வைப்பார்கள். வடத்தை அறுத்துக் கொண்டோ, மரத்தை வேரோடு சாய்த்தோ கட்டிலிருந்து விடுபடும் சக்தி குட்டியானைக்கு இல்லை.
காட்டில் சுதந்திரமாகத் திரிந்து பழகிய குட்டியானை, கட்டிலிருந்து விடுபட தன்னால் இயன்றவரை முயற்சி செய்யும். கட்டிலிருந்து விடுபடத் தேவையான அளவு பலம் தனக்கில்லை என்று அறியும்போது, அது தனது முயற்சிகளை எல்லாம் கைவிட்டு விடும். அவ்வாறு பழகிவிட்ட குட்டி யானை வளர்ந்து பெரியதாகும்போது, அதை சிறிய மரத்தில், அதிக வலுவில்லாத கயிற்றினால் கூடக் கட்டி வைப்பார்கள்.
அந்த யானை நினைத்தால் மிக எளிதில் மரத்தை வேரோடு சாய்த்து விட்டோ, கயிற்றை அறுத்துக்கொண்டோ கட்டிலிருந்து விடுபட முடியும். ஆனால் குட்டியாக இருந்தபோது அதற்கு ஏற்பட்ட பழைய அனுபவமானது, அதன் மனதைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. மனதில் ஏற்பட்டுவிட்ட முன்பதிவால், அது விடுதலை பெற முயற்சி செய்வதில்லை.




இன்று பெண்களின் நிலையிலும் இதுதான் நடந்து வருகிறது. ஆத்ம சக்தி விழிப்படைவதை அனுமதிக்க நாம் மறுக்கிறோம். அந்த மகாசக்தியை அணை கட்டித் தடுத்து நிறுத்துகிறது இன்றைய சமூகம்.
ஒரு குழந்தையை (கருவை) அதாவது கண், காது, மூக்கு, இதயம், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் என எல்லா உறுப்புகளையும் எந்த சிரமமும் இல்லாமல் உருவாக்கும் தாய் இன்று தன் உடலில் ஏற்படும் சிறு சிறு தொந்தரவுகளை கூட சரிசெய்து கொள்ள எளிதில் முடியும் என்ற நம்பிக்கை இல்லாமல் இருகின்றனர்.
புதிதாக ஒரு உடலையே உருவாக்கக் கூடிய பெண் தன் உடலை எளிதில் சரிசெய்து கொள்ள முடியும் என்ற உண்மையை யானை வளர்ந்தாலும் தன் தன்மையை மறந்தார்ப்போல் மாயையில் மறந்து விட்டனர். உடலும் அவ்வாறே பழகியும் விட்டது.


பாரம்பரியத்தையும் நம் உடலின் இயல்பையும் மறந்த நம் பெண்களுக்கு தங்கள் நிலையை எளிதில் பெறவும் உடலில் உள்ள தொந்தரவுகள், நாள் பட்ட உபாதைகலில் இருந்து விடுதலைப் பெறவும் ஏற்ற உணவு தானியம் நம் சிறுதானியங்களில் ஒன்றான சாமை தானியம்.
பெரும்பாலான இன்றைய பெண்களின் மிகப்பெரிய உடல் தொந்தரவு மாதவிடாய் தொந்தரவுகள். குழந்தையை உருவாக்கும் சக்தியைப் படைத்த பெண்களுக்கு படைப்பின் கருவிலே தொந்தரவு. தன்னிலையை மறந்தது தங்கள் உணவை மறந்ததுமே இதற்கு காரணம்.
மாதவிடாய் தொந்தரவுகளுக்கு காரணமாக இருக்கும் சத்துப் பற்றாக்குறையையும், இரத்த சோகையையும், உயிர் சக்தியின்மையையும் இந்த சாமை அரிசி எளிதில் குணமாக்குகிறது.
சாமை அரிசி என்பது நம் இந்திய மண்ணில் விளையும் ஒருவகை சிறு தானிய வகையைச் சேர்ந்தது. எல்லா சிறு தானியங்களை விடவும் மிக சிறியதாக இருக்கும் இந்த சாமையை ஆங்கிலத்தில் Little Millet என்பர். கிழக்காசிய நாடுகளில் விளையும் இந்த சாமை தென் இந்தியாவில் அதிக அளவில் காணப்படுகிறது.
மாணவரி நிலங்களிலும் எந்த பராமரிப்புமின்றி விளையும் இந்த சாமை அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டது. எந்த இரசாயனமும், பூச்சிகொல்லிகளும், களைகொல்லிகளும் இன்றி விலையக் கூடிய இந்த சாமை உடலில் உள்ள இரசாயன நச்சுக்களை நீக்க வல்லது. உமி நீக்கிய சாமை அரிசி தவிடோடு சற்று சம்பல் நிறத்திலும், தவிடு நீக்கியது பழுப்பு நிறத்திலும் காணப்படம்.


வைட்டமின் பி சத்து குறிப்பாக நியாசின், B6, போலிக் அமிலம் போன்றவையும் டிரிப்டோபென், கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகமும் சீராக உள்ளது. அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சீராக கொண்டுள்ள இந்த சாமை அரிசி கர்ப்பப்பையை பலப்படுத்துவதோடு வளர்சிதை மற்றதையும் சீராக்கி கழிவுகளையும் வெளியேற்ற உதவுகிறது.
ஊட்டச்சத்து பற்றாக்குறையால் மாதவிடாய் சமையங்களில் ஏற்படும் வாயிற்று வலி, அதிக உதிரப்போக்கு, சோம்பல், உடல் அசதி போன்றவற்றிற்கு மாமருந்து நம் பாரம்பரிய சிறு தானிய வகையான சாமை அரிசி.


குழந்தையையே உருவாக்கும் திறனைக்கொண்ட பெண்களின் உடலில் ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை சாமை அரிசி கொண்டு எளிதில் குணமாக்கலாம்.
பெண்களுக்கு மட்டுமில்லாது ஆண்களின் விந்து எண்ணிக்கையையும் அதிகரிக்க சாமை அரிசி உணவுகள் துணைசெய்கிறது. நார்சத்து அதிகம் கொண்ட இந்த சிறுதானியம் மலச்சிக்கலை நீக்குவதோடு சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு சக்கரையின் அளவை இரத்தத்தில் உடனடியாக ஏறாதவாறு பாதுகக்கவும் செய்கிறது.
மாதவிடாய் தொந்தரவுகளில் இருந்தும் விடுபடவும், உடல் உறுப்புகளை பலப்படுத்தவும் அன்றாட உணவுகளில் கருப்பு உளுந்து, சாமை அரிசியை கொண்டு எளிதில் இட்லி செய்து உண்ண விரைவில் சிறந்த பலன்கிடைக்கும்.
மாயையிலும், மற்றவர்கள் பேச்சிலும், சமூகத்தின் சூழ்ச்சியிலும் சிக்கிக் கொள்ளாமல் பெண்மையையும் பெண்ணின் ஆக்க சக்தியினையும் சிறந்த நம் பாரம்பரிய உணவுகளின் துணைக்கொண்டு மீட்டேடுப்போம். நம் சத்தான உணவின் மூலம் உறுப்புகளின் ஆக்க சக்தியின் துணைகொண்டு சிறந்த ஆரோக்கியம் பெறுவோம்.
ஆமைக்கு பத்து அடி என்றால் நாய்க்கு நாலு அடி.
சமீபத்திய கருத்துகள்