Chenopodium album; White goosefoot; சக்கரவர்த்திக் கீரை
அதிக சத்துக்களையும், சக்தியையும் அளிக்கக் கூடிய ஒரு அற்புதமான கீரை இந்த சக்கரவர்த்திக் கீரை. இந்த கீரையில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, தாதுசத்து, நார்ச் சத்து, மாவுச் சத்து, சுண்ணாம்புச் சத்து, மணிச்சத்து, இரும்புச் சத்து என பலவிதமான சத்துக்கள் உள்ளன.
சக்கரவர்த்திக் கீரை உடலுக்கு குளிர்ச்சி உண்டாகக்கூடியது. இத்தோடு ரத்தம், தாது ஆகியவற்றையும் பெருக்கி உடலுக்கு தேவையான சக்தி, அழகு, வலிமையை அளிக்கும் ஒரு அற்புதமான கீரை.
வைட்டமின் சத்துக்கள் அதிக அளவில் இருக்கும் இந்த சக்கரவர்த்திக் கீரையில் பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் உள்ளது. தமிழ்நாட்டில் இது அதிக அளவில் வளர்க்கப் படும் கீரை.
பல்லுபல்லாக ஓரங்களை கொண்ட இந்த கீரையின் நடுப்பாகம் கருஞ்சிவப்பு நிறமாகவும், இலையின் பின்புறம் இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும். இந்த கீரையில் தங்கச் சத்தும், இரும்புச்சத்தும் ஒருங்கே இணைந்துள்ளது. இந்த கீரை நம் நாட்டு மருத்துவத்தில் கை கண் மருந்து மூலிகையாக பயன்படுகிறது.
பொருமல், வயிற்றுப்போக்கு, சிறுநீர் தொந்தரவு முதலியன நீக்க இந்த கீரையை பயன்படுத்துவது சிறந்தது. தாது விருத்தியை உண்டாக்கக்கூடியது. பசியைத் தூண்டக் கூடிய ஒரு அற்புதமான கீரை.
சக்கரவர்த்திக் கீரை உணவு
சக்கரவர்த்திக் கீரையை நெய்விட்டு வதக்கி, பருப்பு கலந்து உண்ணலாம். பருப்போடு இதனை சேர்த்து தேங்காய் துருவல் கலந்து பொறியல் செய்தும் அல்லது குழம்பு வைத்தும் கூட சாப்பிடலாம்.
சக்கரவர்த்திக் கீரை எண்ணெய்
சக்கரவர்த்திக் கீரையின் விதைகளிலிருந்து எடுக்கக்கூடிய எண்ணெய் உடலில், குடலில் தோன்றக்கூடிய கொக்கிப் புழு, நாக்குப் பூச்சி இவைகளை அழித்துவிடும்.
சிறுநீர் தொந்தரவு
சிறுநீர் கழிக்க வழியில்லாமல் வயிறு உப்பி சிரமப்படுபவர்களுக்கு இந்தக் கீரை சிறந்தது. வாரந்தோறும் இந்தக் கீரையை உண்டு வர இந்த தொந்தரவு விரைவில் நீங்கும்.
உடலுக்கு வலிமை அளிக்கும்
சக்கரவர்த்திக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து உண்டு வர உடலுறவில் ஆர்வமும், விருப்பமும் அதிகரிக்கும். உடலுக்கு வலிமை உண்டாகும் கீரை.
ஜீரண உறுப்பை பலப்படுத்தும்
சக்கரவர்த்திக் கீரையில் உயிர்ச்சத்து மிகவும் அதிகமுள்ளது. இது மலத்தை இளக்க வல்லது. ஜீரண சக்தியை அளிக்கக் கூடிய கீரை.
சக்கரவர்த்திக் கீரையை பயன்படுத்தும் பொழுது பச்சை மிளகாய், உப்பு, புளி ஆகியவற்றை அதிக அளவில் சேர்க்கக்கூடாது. புளியையும் பச்சை மிளகாயை அறவே சேர்க்க கூடாது. இவை சேரும் பொழுது இந்த கீரையில் உள்ள சத்துக்கள் முழுமையாக மாறக் கூடிய தன்மையும் உள்ளது. அதனால் காரத்திற்கு மிளகு, சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம், புளிப்பிற்கு தக்காளி, எலுமிச்சை, நெல்லிக்காய் ஆகியவற்றை பயன்படுத்தலாம். நல்ல ஒரு ருசியான கீரை.