குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான ஒரு இனிப்பு சுவை கொண்ட கிழங்கு வகை என்றால் அது இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு என்று கூறலாம். இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை பற்றி தெரியாதவர்கள் அறியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க மாட்டார்கள் என்று கூட கூறலாம். ருசியான இந்த கிழங்கை அவித்து உண்ணாதவர்கள் இருக்கமாட்டார்கள்.
பொதுவாக பொங்கலுக்கு, அதாவது தை மாதத்தில் அதிகமாக கிடைக்கக்கூடிய ஒரு கிழங்கு வகை இது. தை திருநாள் பொங்கலுக்கு இந்த சர்க்கரை கிழங்கை வைத்து படைப்பதும் நமது தமிழகத்தின் வழக்கம். மிதமான வெப்பநிலை உள்ள இடங்களில் எளிதாக பயிரிடக்கூடிய ஒரு கிழங்கு வகை இந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு. மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் அதிகமாகக் கிடைக்கும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கின் இனத்தை சேர்ந்தத சிறு வள்ளிக்கிழங்கு குடற்புழுக்களை அழித்து வெளியேற்றும் இயல்புடையது. இதன் இலைகளை குடிநீராக்கி கொடுத்தால் வயிற்றுக் கோளாறுகள் விலகும். இதன் இலைச் சாறோடு கருஞ்சீரகம், வில்வ இலை ஆகியவற்றை சேர்த்து காய்ச்சிக் கொடுத்தால் நெடுநாள் ஆறாத ரணங்கள் ஆறும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கின் இனத்தை சேர்ந்த மற்றொரு கிழங்கு செலவள்ளி கிழங்கு. கரப்பான் பிணிக்கு இது நல்ல மருந்து. இதன் இலைச் சாற்றை கரப்பான் புண் மீது தொடர்ந்து தடவி வர வேண்டும். குஷ்ட நோயைத் தீர்க்கத் தயாரிக்கப்படும் மருந்துகளில் இந்த கிழங்கையும் சேர்ப்பது உண்டு.
அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்ட கிழங்கு இந்த சக்கரவள்ளி கிழங்கு. இதனை அவித்து அப்படியே உண்ணலாம். இதில் சிறிது உப்பு சேர்த்து தாளித்து உண்ண சுவை கூடும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்தும் தாளித்து சாப்பிடலாம்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை, பாண்டு ரோகம் மறையும்.
சக்கரவள்ளி கிழங்கிற்கு உடல் சூட்டைத் தணிக்கும் குணம் உண்டு. வெட்டைச் சூட்டையும் இது தீர்க்கும். சர்க்கரைவள்ளிக் கிழங்கின் இலையை அரைத்து தேள் கொட்டிய கொட்டு வாயில் தடவினால் தேள் விஷம் உடனடியாக இறங்கும்.
மூல நோயால் அவதியுறுபவர்களும் வயிற்றுக்கோளாறுகள் உள்ளவர்களும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடாமல் விலக்குவது நல்லது.