ரோஜா பூ – மருத்துவமும் பயன்களும்

ரோஜாபூ, பெண்கள் விரும்பி தலையில் சூடிக்கொண்டு அழகுபார்க்கும் மலர்களில் மல்லிகைக்கு அடுத்து இருக்கும் மலர். ரோஜாவிற்கு செந்தாமரை, பன்னீர் பூ, குலாப் பூ என பல பெயர்கள் உள்ளது. ஒரு செடி வகையைச் சேர்ந்தது இந்த ரோஜா. செடி முழுவதும் முட்களை காணலாம். முட்கள் நிறைந்த இந்த செடியின் உள்ளுக்குள் மிக அழகாக இளஞ் சிவப்பு நிறத்தில் இருக்க கூடிய பூ ரோஜா பூக்கள். இந்த பூக்கள் நல்ல மணம்மிக்கது.

இதனுடைய சுவை இனிப்பும் துவர்ப்பும் கலந்த ஒரு சுவை. சிவப்பு ரோஜா இதழ்கள் வாசனையுள்ள நறுமண எண்ணெயை கொண்டு இருக்கக் கூடியதாக உள்ளது. ரோஜா பூக்களை கொண்டு நறுமண எண்ணெய்கள் பல தயாரிக்கப்படுகின்றன. ரோஜாவின் தன்மை குளிர்ச்சியை உண்டாக்கக்கூடியது. ரோஜாவின் சுவை துவர்ப்பு சுவை கொண்டது.

ஆசனவாயில் வரக்கூடிய எரிச்சல், அஜீரணம், காய்ச்சல், தாகம், உடலில் ஏற்படும் சூடு, வெள்ளை, மலச்சிக்கல், வயிற்று வலி என பல தொந்தரவுகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படக்கூடியது.

இந்த பூ இதழ்களை கொண்டு பன்னீர், குல்கந்து அத்தர், ஊழல் நீர் என பல பொருட்களையும் தயாரிக்க முடியும். நோய்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கக்கூடிய இந்த ரோஜா இதழ்களை பல வழிகளில் பயன்படுத்தலாம்.

மிக எளிதாக ரோஜா இதழ்களை அவ்வப்பொழுது உண்டு வர வாயில் வரக்கூடிய தொந்தரவுகள், குடலில் ஏற்படும் பிரச்சனைகள், மலச்சிக்கல் அகலும்.

ரோஜா எண்ணெய் / Rose Oil

ரோஜாவை தேங்காய் எண்ணெயில் சேர்த்து வெயிலில் நன்கு காயவைத்து எடுக்க எளிமையாக ரோஜா எண்ணெய்யை பெறமுடியும். இந்த ரோஜா எண்ணெய்யை பிறந்த குழந்தைக்கு உடல் முழுவதும் அன்றாடம் தேய்த்துவர குழந்தை மேனி பளபளப்பாகும், சருமம் பாதுகாக்கப்படும். குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களும் இதனை பயன்படுத்த உடல் புத்துணர்வுடன் பிரகாசிக்கும்.

பேதி நிற்க

சிவப்பு ரோஜா இதழ்களை சிறிதளவு எடுத்து வெந்நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி அதனுடன் இந்துப்பு கலந்து பருகுவதால் பேதி உடனே நிற்கும். பேதிக்கு சிறந்த ஒரு மருந்து இது. இதனுடன் வேப்பங் கொழுந்தையும் அதனுடன் சில பொருட்களை சேர்த்துக் கொடுக்க குமட்டல், காய்ச்சல், தாகம், ஒக்காளம் போன்ற பிரச்சனைகளும் தீரும்.

உடல் சூடு, வயிற்றுவலி தீர

உலர்ந்த ரோஜா இதழ்களை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி இனிப்பு கலந்து பதமாகக் காய்ச்சி பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு தொடர்ந்து குடித்து வர வயிற்றுவலி, உடல் சூடு போன்ற தொந்தரவுகள் தீரும். இது உடல் பலத்தையும் அளிக்கும்.

ரோஜா குல்கந்தை

சிவப்பு ரோஜா இதழ்களை எடுத்து சிறிது இடித்து தேன் கலந்து ஊறவைத்து மெழுகு பதத்திற்கு ரோஜா குல்கந்தை தயாரித்து எடுத்து வைத்துக் கொண்டு அன்றாடம் உண்டு வர வயிற்றில் வரக்கூடிய வலிகள், மலச்சிக்கல், எரிச்சல் நீங்கும். இந்த குல்கந்தை தொடர்ந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்டுவர உடல் ஆரோக்கியம் மேம்படும். பலவிதமான நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கவும் முடியும்.

முகப் பொலிவிற்கு

உலர்ந்த ரோஜா இதழ்களை பொடியாக அரைத்து வைத்துக் கொண்டு வாரம் ஒரு முறை சிறிதளவு எடுத்து அதனுடன் பசும்பால் சேர்த்து முகத்தில் தடவி அரைமணிநேரம் ஊறவைத்து பின் கழுவ முகப் பொலிவு கூடும். சருமம் பிரகாசிக்கும்.

குளியல் பொடி

உலர்ந்த ரோஜா இதழ்களுடன் பச்சைப்பயறு அல்லது கடலைப் பருப்பு சேர்த்தரைத்து குளியல் பொடியாக தயாரித்து வைத்துக் கொண்டு குளிக்க பயன்படுத்த சருமத்தில் வரும் நோய்கள், தொந்தரவுகள் மறையும்.

ரோஜா நீர் / Rose Water

ரோஜாபூவை வெந்நீரில் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவி வர முகம் பிரகாசமாகும். முகத்தில் வரக்கூடிய கருந்திட்டுக்கள், பருக்கள், கட்டிகள் போன்ற தொந்தரவுகளும் மறையும்.

(2 votes)