பகுதி — 1
நாயகன் பட ஸ்டைல்ல நீ நல்லவனா? கெட்டவனா? என்று ஒவ்வொருவரும் சந்தேகத்துடன் பார்க்கக் கூடிய வில்லனாக இன்று விஸ்வரூபம் எடுத்திருக்கும் உணவு தானியம் தான் நம் அரிசி.
அரிசி என்றவுடன் அனைவரும் தங்கள் கருத்துக்களை அள்ளி விசிக்கொண்டே இருகின்றனர்.
ஆரோக்கியமற்ற உடல் நிலைக்கு அரிசி தான் காரணம் என்றும், உடல் பருமனுக்கு காரணம் அரிசி சோறு என்றும், ஐந்து வெள்ளை பொருட்களை தவிர்த்தால் ஆரோக்கியமாக வாழலாம் அதுவும் அதில் முக்கியமான அரிசியை தவிர்த்தாலே பல நோய்களில் இருந்து தப்பிக்கலாம் என்று சரமாரியாக அரிசியை தூற்றும் சமுதாயம் இன்று அதிகரித்து விட்டது.
அதிலும் நீரிழிவு நோயின் தலைநகரம் இந்தியா என்று பெயர் வாங்கியதோ இல்லையோ இவை அனைத்திற்கும் காரணம் அரிசி தான் என்று அரிசியின் மீது பலி சுமத்தும் நிலை உருவாகியுள்ளது.
நடந்து செல்லும் ஒருவர் கல்லை காணாமல் கல்லால் அடிபட்டுக்கொண்டு கல் இடித்துவிட்டது என்று கல்லைக் குறைகூறுவது போல் நம்மீதும் நம் பழக்க வழக்கங்கள், சோம்பேறித்தனத்தில் இருக்கும் குறைகளை அரிசியின் மேல் சாடுகிறோம்.
மணமகனுக்கு ஒரு அரிசி,
திருமணத்திற்கு ஒரு அரிசி,
திருமணமான பெண்ணிற்கு ஒரு அரிசி,
குழந்தைபேருக்கு ஒரு அரிசி,
சுகப்பிரசவத்திற்கு ஒரு அரிசி,
பால் கொடுக்கும் தாய்க்கு ஒரு அரிசி,
கைக் குழந்தைக்கு ஒரு அரிசி,
தாலிக்கயிறு மாற்ற ஒரு அரிசி,
விருந்தினருக்கு ஒரு அரிசி,
விசேசங்களுக்கு ஒரு அரிசி,
பண்டிகைக்கு ஒரு அரிசி,
பலகாரத்திற்கு ஒரு அரிசி,
கைமணக்கும் மணப்பாறை முறுக்குக்கு ஒரு அரிசி,
பொங்கலுக்கு ஒரு அரிசி,
ஊன் சோறுக்கு (Biriyani) ஒரு அரிசி,
பருப்பு சோறுக்கு ஒரு அரிசி,
கட்டழகை மீட்க ஒரு அரிசி,
கல்விக்கு ஒரு அரிசி,
நோயிலிருந்து மீண்டு வர ஒரு அரிசி
என வாழ்வின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒவ்வொரு அரிசி நம் தமிழகத்தில் உள்ளது. அதுதான் நம் பாரம்பரிய அரிசிகள்…
இவ்வாறான அரிசிகள் நம்மை உடலாலும், மனதாலும், சமூகத்தாலும் பின்னிப் பிணைந்துக் கொண்டிருக்கின்றன. பிறப்பு முதல் இறுதிவரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும் அரிசிகளை தான் இன்று நாம் வில்லனாக பார்க்கத் தொடங்கியுள்ளோம்.
என்ன தான் பலப்பல பலிச்சொற்களையும் அவதூறுகளையும் அரிசியின் மேல் நாம் அள்ளித்தெளித்தாலும் பத்து நாட்கள் அரிசி உணவு இல்லாமல் நம்மால் இருக்க முடியுமா என்றால், இல்லை முடியவே முடியாது.
காலை இட்லி, மதியம் அரிசி சாப்பாடு, இரவு ஏதாவது பலகாரம் அதனுடன் சிறிது சாதம் என்று மூன்று வேளையும் அரிசியை மாற்றி மாற்றி உண்ணும் நம்மால் அரிசி இல்லாத ஒரு நாளைக் கடப்பது சற்று சிரமமே. பலப் பல வெளிநாட்டு உணவுகள் நம்மை சுற்றி படையெடுத்தாலும் அரிசி இல்லாத ஒரு நாளை பலரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
அரிசி, இன்று பல நோய்களுக்குக் காரணமாக இருக்கிறது என்று சப்பாத்தியை உண்ணும் புது கலாச்சாரத்தில் சுழலும் பலர் வெளிநாடுகளுக்கும் வடமாநிலங்களுக்கும் சென்று நம்மவர்கள் தென்னிந்தியாவில் விளைந்த அரிசிகளை தேடும் நிலையிலிருந்தே தெரிந்து கொள்ளலாம், அரிசியின் அவசியத்தை.
அரிசியையும் நம்மையும் பிரிக்கவே முடியாது. பத்து நாள் அரிசி இல்லாத உணவை உண்ணும் நிலை ஏற்பட்டால் உடலும் மனமும் புரியாது தவிப்பதையும், புரிந்து அதற்கு அரிசி உணவு இல்லாதது தான் காரணம் என்று அதனை அடைய வெறும் தயிர் சாதத்தையும் ரசம் சாதத்தையுமாவதும் உண்ணத் துடிப்பவர்களும் நம்மில் அதிகம்.
இன்னும் பலர் உடல் பருமனாக இருக்கிறது, தொப்பை அதிகமாக இருக்கிறது அல்லது சர்க்கரை நோய் இருக்கிறது என்று அரிசி உணவிற்கு பதில் சப்பாத்தி சாப்பிடுபவர்கள் கடைசியாக சிறிதாவது அரிசி உணவை உட்கொள்வது வாடிக்கையாக உள்ளது.
அப்படி என்னதான் இருக்கிறது அரிசியில்? இப்படி நம்மை கட்டிப்போட்டிருக்கிறது என்கிறீர்களா.. ஆம், அரிசி நம்மை கட்டிதான்ப் போட்டிருக்கிறது. இன்று நேற்றுப் பழக்கம் அல்ல அரிசிக்கும் நமக்கும்…
குறைந்தது 10000 ஆண்டுகளாக இந்தியாவில் பயிரிடப்படும் ஒரு தானியம் தான் அரிசி. பத்தாயிரம் ஆண்டுகளாக நமது மூதாதையர் வழியில் அரிசியும் வந்துகொண்டே இருக்கிறது. என்னதான் மல்லுகட்டி அரிசி உண்பதினை நிறுத்த இயன்றாலும் முடியாததற்கும், அதனால் உடலும் மனதும் பெரிதாக எதையோ இழந்ததைப் போல் தவிப்பதன் காரணமும் இதுதான்.
சில பல ஆண்டுகள் நமது பழக்க வழக்கத்திலும், உணவிலும் ஏற்படும் மாறுதல்களால் உடலமைப்பும், குணமும், தன்மையும் புதுப் பழக்க வழக்கத்திற்கு ஏற்றார்ப் போல் மாறுவதனைக் கண்டிருக்கின்றோம். அப்படி இருக்க பத்தாண்டு, இருவது ஆண்டு பழக்கம் அல்ல இந்த அரிசிக்கும் நமக்குமான சம்பந்தம்.
தலைமுறை தலைமுறையாக எத்தனைத் தலைமுறை என்று கணக்கிட முடியாத அளவு கடந்து நம்மை நம் உடலை பின்னிப் பிணைந்திருக்கிறது. குணங்கள், தன்மைகள், பழக்க வழக்கங்கள், உடல் கூறுகள் என அனைத்தும் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் DNA மூலம் கடத்தப்படுவதைப் போல் அரிசியின் பத்தாயிர வருட தாக்கம் நமது ஒவ்வொரு cell லிலும் உள்ளது. இதுதான் நம்மை இப்படி கட்டிப்போடுகிறது.
பலப்பல ஆயிரம் ஆண்டுகளாக அரிசியை உண்டு உலகிற்கு எதார்த்தமாக பல மெய் ஞானத்தை விளக்கிச் சொன்னவர்கள் உண்டதும் இந்த அரிசியைத்தான். வெறும் 500 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்த அமெரிக்காவில் நடக்கும் ஆய்வுகள் பலவற்றிக்கு விடையை இரண்டு அடியில் உலகிற்கு சொன்னவர்கள் உண்டதும் இந்த அரிசியைத் தான்.
உலகமே இன்று மனதை ஒரு நிலைப்படுத்த யோகத்தையும் தியானத்தையும் மேற்கொள்ள அதனை அன்றாடம் எதார்த்தமான வாழ்வியல் மூலமும் அமைதியின் மூலமும் வெளிப்படுத்துகின்றனர். பெரிதாக பழங்களும் காய்கறிகளும் இல்லாத காலத்திலும் ஆரோக்கியத்துடன் இருத்த சமூகம் உண்ட உணவும் நம் அரிசிதான்.
தொண்ணூறு வயதையும் கடந்து பரிபூரணமாக அரிசி கஞ்சியினை பருகி தோட்டத்தில் வேலை செய்யும் இளைங்கர்களையும் கவனித்திருக்கிறோம். நமது உடலும் உள்ளமும் எதை வெளிப்படுத்துகிறது என்று அறிந்துகொள்ள முடியாத நிலையில் புதுப்புது உணவுகள் சத்துகள், சுவைகள் என்ற பார்வையில் நம்மை சுற்றி பட்டியலிட ஆரோக்கியம் முப்பது வயதிலேயே காணாமல் போய் நோய்கள் பட்டியலிட தொடங்குகிறது.
அரிசி நல்லதா? இல்லையா? –பகுதி 2