சிகப்பரிசி புட்டு

குழந்தையின்மை, உடல் பருமன், நீரிழிவு என பல பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்க கூடியது பாரம்பரிய சிகப்பரிசிகள். அதிலும் மாப்பிள்ளை சம்பா அரிசி பல உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களையும், வைட்டமின், தாது சத்துக்களையும் கொண்டுள்ளது. For English Red Rice Puttu Recipe.

குழந்தைகளுக்கும் ஏற்றது. குழந்தைகள் விரும்பி உண்பார்கள். மாலை நேரத்துக்கு ஏற்ற ஒரு உணவாகும். மேலும் மாப்பிள்ளை சம்பா அரிசியின் பயன்கள் மற்றும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் சிகப்பரிசி மாவு ((மாப்பிள்ளை சம்பா அரிசி))
  • ¾ கப் நாட்டு சர்க்கரை
  • ¼ கப் தேங்காய்த் துருவல்
  • ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூள்
  • 2 ஸ்பூன் நெய்

செய்முறை

  • நான் பயன்படுத்திய சிகப்பரிசி மாவு மாப்பிள்ளை சம்பா அரிசி மாவு.
  • இந்த மாவை தயாரிக்க மாப்பிள்ளை சம்பா அரிசியை இரண்டு முறை கழுவி இரண்டு மூன்று மணி நேரம் ஊறவைத்து பின் சிறிது உலர்த்தி ஈரம் இருக்கும் பொழுது மிக்ஸியில் அல்லது ஈர மாவு அரைக்கும் மிஷினில் கொடுத்து புட்டுக்கு என அரைத்துக் கொண்டு அதனை காய வைத்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை அதிகமாக செய்தும் ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு அதிகமாக தயாரித்து சேமித்து வைத்துக் கொள்ள சட்டேன்று மாலை வேளையில் சுவையான சத்தான ஒரு சிற்றுண்டியை தயாரிக்கலாம்.
  • இவ்வாறு தயாரித்து வைத்திருக்கும் மாப்பிள்ளை சம்பா மாவை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இந்த சிகப்பரிசி மாவில் லேசாக தண்ணீர் தெளித்து பிசறிக் கொண்டு ஒரு மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். புதிதாக மாவினை அரைப்பதானால் நேரடியாக பயன்படுத்தலாம்.
  • பிறகு இட்லி பானையில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.
  • வேகவைத்த பின் அந்த புட்டு மாவில் தேங்காய்த் துருவல், நாட்டு சர்க்கரை, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து கிளறவும்.

  • அவ்வளவுதான் சுவையான சிவப்பரிசி இனிப்பு புட்டு தயார்.
  • மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு பதிலாக சிவப்பு கவுனி அரிசி, பூங்கார் அரிசி, காட்டுயானம் அரிசி, கருங்குருவை அரிசி என எந்த பாரம்பரிய சிவப்பரிசியை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். சத்துக்கள் அதிகம் கொண்ட ஒரு சிறந்த அரிசி இந்த பாரம்பரிய சிகப்பரிசிகள்.

(1 vote)