உலகளவில் இன்று பெருவாரியான மக்கள் ஆரோக்கியம், உடல் நலம், தொற்று நோய் என வகைக் காரணங்களால் நல்ல உணவுகளைத் தேட தொடங்கியுள்ளனர். அதில் மிக முக்கியமான ஒன்று சிகப்பரிசி. ஒவ்வொரு நாட்டிலும் அந்த சூழல், சுற்றுப்புறம், தட்பவெப்பம், மண்வளம், நீர் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு தானியங்கள் விளைவதுண்டு. இந்தியாவிலும், தமிழகத்திலும் அவ்வாறே பல வகையான உணவு தானியங்கள் விளைவதுண்டு.
பெருந்தானியமான நெல் அரிசி, சிறுதானியங்கள் என்றும் அவற்றிலும் பல வகைகள் உள்ளன. சிறுதானியங்களில் வரகு, சாமை, தினை, குதிரைவாலி, பனிவரகு, கம்பு, சோளம், கேழ்வரகு என பல வகைகள் உள்ளதைப் போல் பெருந்தானியமான அரிசியிலும் பல வகைகள் உள்ளன. ஆனால் பலராலும் பார்த்த மாத்திரத்தில் அரிசியை அதன் நிறத்தைக் கொண்டு அடையாளம் கூற முடியும். வெள்ளை அரிசி, சிவப்பரிசி, கருப்பரிசி என அரிசியைப் பார்த்தவுடன் அதன் நிறத்தை வைத்துக் கூறுவதுண்டு. இவற்றில் இன்று மிக பிரபலமாக இருக்கும் அரிசி சிவப்பரிசி தான்.
சிவப்பரிசியில் பல வகைகள் இருந்தாலும், பொதுவாக அதன் நிறத்தைக் கொண்டே அழைக்கும் பழக்கம் பல நூறு ஆண்டுகளாக நம் மண்ணில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் அதன் பட்டத்தை வைத்தும் நம் முன்னோர்கள் அரிசியைக் அடையாளம் கண்டார்கள். அவற்றில் சிவப்பரிசியைப் பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம். இன்னும் நிறையபேர் சிவப்பரிசியைப் பார்த்தவுடன் மட்டை அரிசி அல்லது கேரளா அரிசி என்பார்கள். ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு நிலத்திற்கும் சிவப்பு அரிசி வகைகள் இருந்தாலும் அவை தமிழகத்தில் சில காலங்கள் புழக்கத்தில் இல்லாமல் போனதும், கேரளாவில் எல்லா காலமும் அவை புழக்கத்தில் இருந்ததுமே இதற்கு காரணம்.
சிவப்பு நிறத்தில் இருக்கும் அரிசி சிவப்பரிசி. அரிசியின் மேல் பகுதி சிவப்பு நிறமி சத்துக்களைக் கொண்டது. அந்தோசயனின், நார் சத்துக்கள், புரதம், எண்ணெய் சத்துக்கள், வைட்டமின் சத்துக்கள் மற்றும் தாது சத்துக்களும் அரிசியின் மேல் தோலில் உள்ளது. இவையே தொண்ணூறு சதவீதம் இந்த அரிசியின் சத்துக்கள் பட்டியலுக்குக் காரணமாகிறது. பாதி அல்லது முழுவதும் தவிடு நீக்கப்பட்ட சிகப்பரிசிகளும் சக்கைகளே, மேலும் இந்த தவிட்டு பகுதியிலிருந்து ரைஸ் பிரான் எண்ணெய், ப்ரோடீன் பவுடர், நார்சத்துக்கள் கொண்ட பிஸ்கட் அதிக விலையுடன் விற்பனைக்கும் வரும். அதனால் சக்கையை தவிர்த்து தவிடு நீக்காத அரிசியைப் பயன்படுத்துவது சிறந்தது.
அதனால் சிகப்பரிசியைப் பயன்படுத்த நினைப்பவர்கள் அவற்றின் முழு பலனையும் பெற தவிடு அதாவது மேல் தோல் பகுதி நீக்காத அரிசியையே உபையோகிப்பது நல்லது. அதை விடுத்து இன்று சிவப்பரிசிகள் சமைக்கக் கடினமாக உள்ளது என்று பட்டை தீட்டிய சிகப்பரிசியை அதாவது சிவப்பரிச்யையே வெள்ளையாக வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் சத்துக்கள் நீக்கிய அரிசியையே மீண்டும் நாம் அதிக விலைக்கு வாங்கி உண்கிறோம் என்பதை மறக்கக் கூடாது.
பட்டை தீட்டாத சிவப்பரிசி தரும் பயன்கள்
நுண்ணூட்ட சத்துக்கள் மற்றும் பெரூட்ட சத்துக்கள்
நம் உடல் ஆரோக்கியமாக இயங்க புரதம், நார்சத்துக்கள், எண்ணெய் சத்துக்கள், மாவு சத்துக்கள் மட்டும் போதாது, அவை உடலால் சீராக உட்கிரகிக்கவும், செயல்படவும் நுண்ணூட்ட சத்துக்களும் மிக அவசியம். இவை அனைத்துமே பட்டை தீட்டாத சிவப்பரிசியில் சீராக உள்ளது. இதனால் சத்து குறைபாடு என்ற பாதிப்பு ஏற்படாது.
இரத்த சோகை
இரும்பு சத்துக்கள், வைட்டமின் சத்துக்கள் கொண்டதால் இரத்த சோகை ஏற்படாமல் பாதுகாக்கும், இரத்த சோகை உள்ளவர்களை அந்த பாதிப்பிலிருந்து வெளிவர உதவும்.
குழந்தைகளுக்கு
ஊட்டசத்துக்கள் நிறைந்த இந்த சிவப்பரிசி குழந்தைகளுக்கு மிகவும் அவசியமானது. சிவப்பரிசியில் தயாரிக்கும் உணவுகளை குழந்தைகளுக்குக் கொடுக்க மூளை வளர்ச்சி, நினைவாற்றல், உடல் வளர்ச்சி, சீரான எடை, வலுவான எலும்புகளை அளிக்கும்.
மலச்சிக்கல் / மூலம்
நார்சத்துக்கள் நிறைந்த சிவப்பரிசிகள் மலச்சிக்கல், மூலம் போன்ற தொந்தரவுகளுக்கு சிறந்த பலனை அளிக்கும். மலச்சிக்கலை விரட்டும்.
உடல் எடை
இன்று பலருக்கும் இருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை உடல் பருமன். அதிக எடையையும், தேவையில்லாத சதையையும் கரைக்கும் சிறந்த ஆற்றல் கொண்டது சிவப்பரிசி.
நீரிழிவு
நீரிழிவு உள்ளவர்கள் தொடர்ந்து சிவப்பரிசியை உட்கொள்ள விரைவில் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.
மலட்டுத் தன்மை / குழந்தையின்மை மறையும்
சிவப்பரிசியை தொடர்ந்து உட்கொள்ள அதன் புரதம் உடலுக்கு தேவையான வலுவையும், குழந்தைப்பேறுக்கும் தேவையான ஊட்டத்தையும், அளிக்கும். உடலின் செல் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் புரதம் மலட்டுத் தன்மையை போக்கும் சிறந்த உணவாகவும் இருக்கும்.
சிவப்பரிசியில் இன்று பாரம்பரிய அரிசி, ஹைப்ரிட் (ஒட்டு ரகம்) ரக அரிசிகளும் உள்ளது. இவற்றில் பாரம்பரிய அரிசிகளே சிறந்தது. பாரம்பரிய அரிசிகளைப் பற்றியும் அதன் வகைகளைப் பற்றியும் பாரம்பரிய அரிசி பகுதியில் தெரிந்துக் கொள்ளலாம்.