எவ்வாறு கேழ்வரகு கூழ் தயாரிப்பது?
கேழ்வரகு கூழில் அபாரமான சத்துக்கள் உள்ளது. அவற்றை தெரிந்துக்கொள்ள கேழ்வரகு கூழ் பயன்கள் என்ற பகுதியை பார்க்கவும். முன்னோர்கள் இந்த கூழை எவ்வாறு தயார் செய்தனர் என்று பார்ப்போம். இன்று நாம் சேர்க்கும் நொய் அரிசியை அன்று அவர்கள் பயன்படுத்தவில்லை, அதற்கு பதிலாக நாட்டு கம்பை உடைத்து பயன்படுத்தினர். முதலில் 1 கப் கேழ்வரகு மாவை தோசை பதத்திற்கு கட்டியில்லாமல் கரைத்துக்கொண்டு.
அதை அப்படியே 8 மணி நேரம் ஊற்ற வைக்கவும்.
காலையில் ஊற வைக்க மதியம் அடி கனமான பாத்திரத்தில், 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும். கொதிவந்ததும், உடைத்து வைத்திருக்கும் 1/2 கப் நாட்டுக் கம்பை சேர்த்து வேகவிடவும். வெந்தவுடன் அதில் மேலும் 1 கப் தண்ணீர் ஊற்றி ஊறவிட்ட கேழ்வரகு மாவை சேர்த்து மிதமான தீயில் கிளறிக்கொண்டே இருக்கவும். பிறகு கூழ் நல்ல வாசனையுடன் நன்கு பளபளப்பாக, கெட்டியாகி வரும். சுமார் 20 நிமிடங்கள் ஆகும். அதனை இறக்கி ஆறவிடவும் .
ஆறியவுடன் அப்படியே 8 மணி நேரம் வைத்து, பிறகு கரைத்தும் பரிமாறவும். இதில் வெங்காயம், பச்சைமிளகாய், துருவிய மாங்காய், பசுந்தயிர், தண்ணீர் சேர்த்து கரைத்து பரிமாறவும்.
இப்போது சுவையான ஆரோக்கிய பானம் தயார். இந்த பானம் உடல் ஆரோக்கியத்தை மீட்டு கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கேழ்வரகு மட்டும் இல்லாமல் கம்பு, சோளம் உள்ளிட்ட பல்வேறு தானியங்களில் கூழ் தயாரித்து கொள்ளமுடியும். ஒவ்வொரு தானியத்திலும் தயாரிக்கப் படும் கூழ் வகைகள் தனிச்சிறப்பு மிக்கவை. ஒவ்வொரு வகைக்கும் தனித்தனியான மருத்துவ குணங்கள் உண்டு.
யார் யார் கூழ் பருகலாம்
கூழைப் பொறுத்தவரை பருகுவதற்கு வயது வரம்பு கிடையாது. சிறு குழந்தைகள் முதல் வயதானவர் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு கூழ் என்று சொல்லலாம். சத்துள்ள உணவை மறந்து மருந்து மாத்திரைகள் வழியாக சத்துக்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகிறோம். உணவே மருந்தாக வாழ்த்த பாரம்பரியத்தை சார்ந்தவர்களுக்கு கூழ் என்ன செய்கிறது என்பதனை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. பச்சை காய்கறிகள் பழங்கள் போன்ற இயற்கை உணவிற்கு இணையான சமைத்த உணவுகளில் கூழும் முதன்மையானதே.
சர்க்கரை நோய், உடல் பருமன், குடல் புண்கள், எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பெரும் நோய்கள் மனித ஆரோக்கியத்திற்கு சவால் விடும் இந்த வேளையில் எல்லா நோய்களுக்கும் மருந்தாகும் உணவாக என்றும் நம்முடன் கூழ் வலம் வருகிறது.