பிறந்தது முதல் ஓரிரு வயது வரை குழந்தைக்கு கட்டாயம் கொடுக்க வேண்டிய முதல் உணவு தாய்ப்பால். அதிலும் பிறந்தது முதல் ஆறு மாதம் வரை குழந்தைக்கு வேறு எந்த உணவும் தேவையில்லாத அளவுக்கு சிறந்த ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கும் உணவாகவும் இது உள்ளது. பொதுவாக முதல் வயதிற்குள் குழந்தையின் வளர்ச்சி சீராகவும் சிறந்த முறையில் இருக்கவும் உதவும் உன்னத உணவும் இதுவே.
குழந்தைக்கு கொடுக்கும் தாய்ப்பால் மிகவும் உன்னதமான உணவு என்றால் அது மிகையாகது. தாய் குழந்தைக்கு அளிக்கும் தாய்ப்பால் எப்பொழுதுமே ஒரே அளவு சத்துக்களையும் ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளதா? என்றால் இல்லை. நேரத்திற்கு நேரம், பாலூட்டும் பொழுது என பல நிலைகளில் தாய்ப்பால் மாறுபடுகிறது.
தாய்ப்பாலில் பிறந்த குழந்தையின் ஜீரண உறுப்புகள் மற்றும் செரிமான பாதை நன்கு வளர்ச்சி அடையவும், மூளை வளர்ச்சிக்கு தேவையான வளர்ச்சி பொருட்களும் உள்ளன. ஒமேகா கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளது.
காலை, உணவுக்குப் பின், மாலை, இரவு என தாய்ப்பாலின் சத்துக்கள் மாறுபடுகிறது. இவற்றில் இரவில் சுரக்கும் பால் கொழுப்பு சத்துக்கள் அதிகம் கொண்டதாக உள்ளது.
ஒவ்வொரு வேளையும் தாய்ப்பால் சுரக்கும் பொழுது முன் பால், பின் பால் என அவற்றை வகைப்படுத்தலாம். அவற்றில் நீர் சத்துக்கள் மற்றும் மாவு சத்துக்கள் முன் பாலில் அதிகமாக உள்ளது. கொழுப்பு சத்துக்கள் பின் பாலில் அதிகம் உள்ளது.