புரசு மரம் – நம் மூலிகை அறிவோம்

Butea Monosperma; Bastard Teak; Sacred Tree; புரசு மரம்

புனிதமான மரம், சர்வரோக நிவாரணி என பல பெருமைகளைக் கொண்ட மரம் புரசு மரம். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாக காணப்படும் மரம். பளிச்சென சிவந்த நிறத்திலிருக்கும் மலர்களைக் கொண்ட மரம். பிரமதாரு, பலாசு, பலாசம், புரைசு, முருக்கு, கிஞ்சுகி, கிருமிநாசம், சீரா, புனமுருக்கு, வாத பேசதம், வன பத்தியம் என பல பெயர்களைக் கொண்ட மரம்.

புரசு மரத்தின் பூக்கள் தீயில் உண்டாகும் சிவப்பு ஜுவாலையின் நிறத்தில் கொத்துக் கொத்தாகப் கொண்டைப்போல் பூக்கும். இந்த மலர்களை இயற்கை சாயம் தயாரிக்க பயன்படுத்துவதுண்டு. சிறகு வடிவத்தில் கூட்டிலைகளை மாற்றிலையடுக்கில் கொண்டிருக்கும். நீளமான கனிகளின் உள்ளே வரிசையாக விதைகளைப் கொண்டிருக்கும். இந்த விதைதான் முருக்கன் விதை என்ற பெயரில் மருத்துவத்திற்கு உதவும் விதைகள். இந்த விதையிலிருந்து தயாரிக்கப்படும் கொழுப்பு எண்ணெய்க்கு kino tree oil அல்லது MUDUGA OIL (Moodooga Oil) என்று பெயர். தோல் நோய், கண் நோயையும் போக்கும் மேலும் வாத நோய்க்கு இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய கை, கால்கள் வலுபெறும்.

இந்த மரத்தின் இலை, பூ, விதை, பட்டை, பிசின் போன்றவை பல நோய் தீர்க்கும் மருந்தாகும்.

துவர்ப்பு சுவையைக் கொண்ட புரசு சிறந்த மலமிளக்கியாகவும், புழுக்கொல்லியாகவும் உள்ளது. மேலும் மலச்சிக்கல், வயிற்று நோய், வயிற்றுப்புழு, ஆண்மையின்மை, உடல் பலஹீனம், சிறுநீர்க்கட்டு, உடல் குடைச்சல், பேதி முதலிய தொந்தரவுகள் தீரும்.

புரசு இலை

  • வயிற்று நோய், பேதி போன்றவை நீங்க புரசு இலையைக் குடிநீரிலிட்டு அல்லது உலர்த்திப் பொடி செய்து சாப்பிட தீரும்.
  • புற்று நோயின் வளர்ச்சியைத் தடுக்கும் தன்மை கொண்டது புரசு இலைகள். புரசு இலையை நீர் விட்டு அரைத்துப் கட்டிகள் மீது பூச கட்டிகள் வற்றும். புற்று நோயின் வளர்ச்சியையும் தடுக்கும்.

புரசுப் பூ

  • விரவீக்கத்திற்கு புரசு பூ சிறந்த பலனை அளிக்கும். புரசுப் பூவை நசுக்கிக் கொதிக்க வைத்துப் பற்றிட விரைவீக்கம் குறையும்.
  • இந்த புரசுப்பூவை வேகவைத்துக் குடிநீராக்கி சிறிது வெடியுப்புச் சேர்த்து மருந்தாக தயாரித்து வைத்துக் கொண்டு மூன்று ஸ்பூன் அளவு கொடுத்துவர சிறுநீர்க்கட்டு நீங்கி சிறுநீர் நன்கு பிரியும்.
  • புரசு பூ தங்கச்சத்து கொண்டது. உடலை உரமாக்கும், உடலில்லுள்ள சப்த தூதுகளையும் சீராக்கும், உடலில்லுள்ள கழிவுகளை வெளியேற்றும்.
  • உடலில் எங்காவதும் கட்டிகள் இருந்தால் அதற்கு புரசுப் பூவை நீர்விட்டு வேக வைத்து கட்டிகள் மீது வைத்துக் கட்ட விரைவில் அமுங்கும்.
  • புரசு இலை மற்றும் மலர்களை வெந்நீரில் போட்டு சூடாக்கி அடிவயிற்றில் கட்ட நாள்பட்ட வயிற்றுவலி மற்றும் வீக்கம் மறையும்.

புரசு விதை

  • புரசு விதையை நீரில் ஊற வைத்து தோலை நீக்கி உள்ளிருக்கும் பருப்பை உலர்த்திப் பொடி செய்து கால் லிட்டர் அளவு தேனில் கலந்து வைத்துக் கொண்டு தினமும் 3 வேளைகள் 3 நாட்களுக்கு சாப்பிட்டு பின் நான்காம் நாள் காலையில் விளக்கெண்ணெய் சாப்பிட பேதியாகி குடலிலுள்ள புழுக்கள் வெளியேறும்.
  • பொடி செய்த புரசு விதையை பழச்சாறுடன் கலந்து சருமத்தில் பூச படை, சொறி போன்ற தோல் நோய்கள் மறையும்.

புரசுப் பட்டை

  • பாம்புக் கடி விஷ நஞ்சு நீங்க புரசுப் பட்டையை இடித்து சாறாக்கி அத்துடன் இஞ்சிச் சாறு கலந்து கொடுக்க வெளியேறும்.
  • நீர்க் கோவை, தலைக்கனம், இருமல் போன்ற தொந்தரவுகளுக்கு புரசுப் பட்டையைக் குடிநீராக எடுக்கலாம்.
  • சிறுதுண்டுகளாக புரசு பட்டையை எடுத்து அதனுடன் கற்கண்டு சேர்த்து வாயிலிட்டு உமிழ்நீர் கலந்து ஊறவைத்து மெதுவாக மென்று வர தாக வறட்சி அடங்கும்.

புரசுப் பிசின்

  • உலர்ந்தப் புரசுப் பிசின் பொடியுடன் லவங்கப் பொடியை கலந்து மருந்து தயாரித்துக் கொடுக்க சீதக்கழிச்சல், ரத்தவாந்தி, ரத்தப் போக்கு தீரும்.
  • தொண்டைப்புண்ணுக்கு சிறந்த மருந்து இந்த பரசு பிசின். இதனை நீரில் கரைத்து தொண்டையில் பூச தொண்டையில் ஏற்படும் வலி, எரிச்சல் தீரும்.
(4 votes)