எண்ணெய் வித்துக்கள் அதிக சத்துக்கள் கொண்டவை. ஆற்றிலிருந்து எண்ணெய்யை பிரித்து எடுத்தப்பின் மாடுகளுக்கும், மண்ணுக்கும் நம் முன்னோர்கள் அதன் புண்ணாக்கை அளித்தனர். அதனால் மண் வளம் அதிகரிப்பதும், அனைத்து வகை பயிர்களிலும் பூக்கள் உதிராமல் காய்ப்பதும் சத்தியமானது. இன்று அதிகளவில் கடலைப் புண்ணாக்கு மலிவான விலையில் கிடைப்பதில்லை என்பதால் கிடைக்கும் புண்ணாக்கை வைத்து கரைசல் தயாரித்து புண்ணாக்கு கரைசல் பயன்படுத்த சிறந்த பலனைப் பெறலாம்.
விவசாய நிலங்களில் மட்டுமல்லாமல் வீடுகளில் இருக்கும் மரங்கள், மாடித் தோட்டத்து இருக்கும் செடிகளுக்கும் சிறந்த கரைசல் இது. வீடுகளில் குறைந்த இடத்தில் வளர்க்கப்படும் மரங்களில் பூக்கள் பூத்தாலும் அவை உதிர்வதும், காயப்பிடிக்காமல் உதிர்வதையும் அதிகம் பார்க்கலாம். அவற்றிற்கு மிக சிறந்த கரைசல் இந்த புண்ணாக்கு கரைசல். மேலும் தேனிக்கள் மற்றும் நன்மை செய்யும் பூச்சிகளை அதிகரிக்கும் சிறந்த கரைசலும் இது. அதனாலும் மகசூல் அதிகளவில் பெருகும்.
நகரங்களில் இருபவர்களும் எளிதாக இந்த புண்ணாக்கு கரைசலை தயாரித்து செடிகளுக்கு தெளிக்கும் வண்ணம் இதன் தயாரிப்பும் மிக எளிமையானது. இவற்றை தயாரித்து பூ பூக்கும் பருவத்தில் தெளிக்க நல்ல மகசூலைப் பெறலாம். மேலும் நல்ல விளைச்சலையும் அதிக மகசூலையும் சிறப்பாக அளிக்கும்.
புண்ணாக்கு கரைசல் தயாரிக்க தேவையானவை
கடலை புண்ணாக்கு தூள் – 50 கிராம்
வெல்லம் – 50 கிராம்
முற்றிய தேங்காய் – 1/2 மூடி
தயிர் – 10 மில்லி
கனிந்த வாழைப்பழம் – 1
தண்ணீர் – 1 லிட்டர்
புண்ணாக்கு கரைசல் செய்முறை
முதலில் தேங்காயை உடைத்து அதிலிருக்கும் தேங்காய் தண்ணீரை எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அரை மூடி தேங்காயை மிக்ஸியில் தேங்காய் தண்ணீர் பயன்படுத்தி தேங்காய்ப் பால் எடுக்க வேண்டும். தேங்காய் தண்ணீர் இல்லையானால் சாதாரண நீரையும் பயன்படுத்தலாம்.
பின் ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் கனிந்த வாழைப் பழத்தை நன்கு மசித்து அதனுடன் வெல்லம், கடலைப் புண்ணாக்கு தூள், தேங்காய்ப் பால், தயிர் ஆகியவற்றையும் கலந்து அதனுடன் ஒரு லிட்டர் நீரையும் சேர்த்து நன்கு கலந்து விட்டு ஒரு நிழலான இடத்தில் ஒரு நாள் வைக்க வேண்டும்.
புண்ணாக்கு கரைசல் பயன்படுத்தும் முறை
ஒரு இரவு, ஒரு பகல் என இருபத்தி நான்கு மணி நேரத்திற்குப் பின் இந்த கரைசலில் இருந்து நல்ல மணம் வரும். அவ்வளவுதான் புண்ணாக்கு கரைசல் தயார். இதனுடன் ஐந்து லிட்டர் நீர் கலந்து மாலை நேரத்தில் செடிகளுக்கு தெளிக்கலாம். இரண்டு மூன்று நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.