புளியாரை கீரை – நம் கீரை அறிவோம்

Oxalis corniculata; புளியாரை கீரை

மூன்று இலைகளின் கூட்டாக கொண்ட ஒரு கீரை வகை இது. புளிப்பு சுவையை கொண்டிருக்கும் கீரை இந்த புளியாரைக் கீரை. தமிழகத்தில் நீர்வளம் உள்ள இடங்களில் பொதுவாக காணப்படக்கூடிய ஒரு நிலப் படர் கொடி தான் இந்த புளியாரைக் கீரை. சில இடங்களில் சந்தைகளிலும் இந்த கீரையை பார்க்க முடியும். இதன் இலைகள் மருத்துவ குணம் கொண்டது. மஞ்சள் நிறத்தில் இடன் பூக்கள் இருக்கும்.

வெப்பத்தை தணிக்க கூடிய ஆற்றலும் சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும் குணமும் கொண்ட ஒரு அற்புதமான கீரை இந்த புளியாரை கீரை. மூலம், உஷ்ணம், வெட்டை, இரத்த சோகைக்கும் மிக சிறந்த மருந்து.

புளியாரை இலையுடன் வாழைப்பூவை சேர்த்து சமைத்து குழந்தைகளுக்கு கொடுப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் கழிச்சல் தீரும்.

இந்த கீரையுடன் பருப்பு சேர்த்து கூட்டு செய்து உண்பதால் மூலவாயு, பித்த மிகுதி, சுவையின்மை மயக்கம் போன்ற தொந்தரவுகளும் அகலும்.

புளிப்பு சுவை கொண்ட இந்த கீரையை சமைத்து உண்பதால் கிராணி உட்பட பல வியாதிகளும் குணமாக்கும்.

வாத நோய்க்காரர்கள், பித்த சம்பந்தமான வியாதியினால் பாதிக்கப்பட்டவர்கள் மூல வாய்வினால் கஷ்டப்படுபவர்கள் தினசரி ஆகாரத்துடன் இந்த புளியாரைக் கீரையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட நோய்கள் பூரணமாக குணமாகும்.

புளியாரை அஷ்ட மூல லேகியம்

புளியாரைக் கீரையை கொண்டு தயாரிக்கப்படும் இந்த லேகியம் எட்டு விதமான மூல ரோகங்களையும் குணமாக்கும் தன்மைக் கொண்டது. இலையை நிழலில் காய வைத்து கடைசியில் வெயிலில் ஒருநாள் மட்டும் சறுகு போல காய வைத்து அதனை உரலில் போட்டு இடித்து சலித்து அந்த தூளில் ஒரு பலம் கடுக்காய்த் தோல் தூள், தான்றிக்காய் தோல் தூள் 1 1/2 ரூபாய் எடை, வால் மிளகுத்தூள், சிறுநாகப்பூ தூள், லவங்கப்பட்டை அரை ரூபாய் எடை என இவற்றின் தூள்களை எல்லாம் தயார் செய்து கொள்ள வேண்டும்.

அதன்பிறகு கருணைக்கிழங்கை தோல் சீவி அதனை தேங்காய் துருவலில் தேங்காய் துருவுவது போல துருவி எடுத்து அதில் ஒரு பலம் படை எடுத்த ஒரு சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து சிறிது நெய் விட்டு சிவக்கும் படி வறுத்து எடுத்து அம்மியில் வைத்து கொஞ்சம் பசும்பால் விட்டு மை போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆறு ரூபா எடை பனங்கற்கண்டை ஆழாக்கு பசும்பாலில் போட்டு கரைத்து சுத்தமாக வடிகட்டி இந்த பாலை ஒரு சுத்தமான களிம்பு ஏறாத பாத்திரத்தில் விட்டு அத்துடன் அரைத்து வைத்திருக்கும் கிழங்கைப் போட்டு கலக்கி புளியாரை தூள் மற்றும் மற்ற பொருட்கள் அனைத்தையும் இதில் போட்டு நன்றாக கலக்கி விட வேண்டும்.

அதன் பிறகு இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து காய்ச்சினால் மருந்து வெந்து பாகு போல மெழுகு பதம் வரும் சமயம் நல்ல வாசனை வரும் பொழுது அரைப் பலம் பசு நெய் விட்டு மேலும் நன்றாக கலந்து கரண்டியை கொண்டு பிசைந்து இறக்கி ஆற விட வேண்டும். ஆறிய பிறகு சுத்தமான கண்ணாடி பாத்திரத்தில் போட்டு மூடி வைத்து விட வேண்டும்.

மூல நோயினால் கஷ்டப்படுகிறவர்கள் தினசரி காலை மாலை ஒரு கொட்டைப்பாக்கு அளவு இதனை சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இந்த விதமாக நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் எந்த மூலரோகம் பூரணமாகக் குணமாகும். இந்த லேகியம் சாப்பிட்டு வரும் போது அதிக காரம், புளிப்பு, பூசணிக்காய் சேர்க்கக்கூடாது. புளிப்பும் காரமும் தேவையானால் எலுமிச்சம்பழமும் மிளகும் சேர்த்துக் கொள்ளலாம்.

வெள்ளை ஒழுக்கு குணமாக

சில ஆண்களும் அதிக அளவில் பெண்களும் வெள்ளை ஒழுக்கு ஏற்பட்டு கஷ்டப்பட்டு கொண்டிருப்பார்கள். வெளியிலும் சொல்ல மாட்டார்கள். ஆண் குறியிலும், பெண் மர்ம ஸ்தானத்திலும் சதா வெண்ணிற நீர் கசிந்து கொண்டிருப்பதையே வெள்ளை ஒழுக்கு என்பார்கள். இந்த நோயினால் கஷ்டப்படுகிறவர்கள் இந்த புளியாரைக் கீரையை தினமும் சாப்பாட்டுடன் சேர்த்து அதிக அளவில் இரவு பகல் சாப்பிட்டு வந்தால் இந்த நோய் படிப்படியாக குறைந்து பூரணமாகக் குணமாகும். இதோடு புளியாரை லேகியத்தையும் தயாரித்து சாப்பிட்டு வந்தால் சீக்கிரமே குணம் காணலாம். அதனால் ஆனால் புளி சேர்க்கக் கூடாது.

ஆண்குறியில் ஏற்பட்ட புண் பெண்கள் மர்மஸ்தானப் புண் ஆற மேலே சொல்லப்பட்ட படியே புளியாரைக் கீரையைத் தினசரி சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். அதோடு புளியாரை லேகியத்தையும் தினசரி சாப்பிட்டு வந்தால் ஆண், பெண் மர்மஸ்தானப் புண் விரைவில் குணமாகும். இந்த சமயம் புளி மட்டும் சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் எவ்வித பலனும் காணமுடியாது.

(4 votes)