புதினாவின் மணமே நம்மை சாப்பிட வைக்கும் அற்புதமான தன்மைகொண்டது. மணம் மட்டுமல்ல சாப்பிடுவதற்கு நல்ல சுவையாக இருக்கும். இந்த புதினாவை பயன்படுத்தி புதினா சட்னி, புலாவ், சாறு, பானம் என பல உணவுகளை தயாரித்து உண்ணும் பழக்கம் நமது தமிழகத்தில் உள்ளது. புலாவ் வாசனையாக இருக்க இதனைச் சேர்ப்பார்கள்.
ஜீரண சக்தியை அதிகரிக்கும் புதினா கீரையில் உள்ள உயிர்சத்துக்கள், இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்துக்கள் ஏராளமாக இருப்பதுதான் இதன் சிறப்பே.
புதினாக் கீரையை கையளவு எடுத்து கொத்தமல்லி, பூண்டு, பெருங்காயம், உப்பு, மிளகு, மிளகாய், சீரகம், கொடம்புளி, உளுத்தம் பருப்பு சேர்த்து இவைகளை எல்லாம் வாணலியில் எண்ணெய் ஊற்றி லேசாக வறுத்து எடுத்து அம்மியில் வைத்து அரைத்து தாளித்து சட்னியாக செய்து சுடுசோற்றில் கலந்து சிறிது பசு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதால் மலச்சிக்கல், வாயுத்தொல்லை, குடல்புண், வயிற்று எரிச்சல், வயிற்றுப் பொருமல் ஆகியவை நீங்கும். உடல் நலம் பெறும்.
புதினாக்கீரையை சுத்தமாக கழுவி உரலில் போட்டு நன்றாக இடித்து கால் லிட்டர் அளவு சாறெடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் சிறிது இஞ்சி, சுக்கு, பூண்டு, பெருங்காயம் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்ததும் வடிகட்டி எடுத்துக்கொண்டு அதில் தேவையான அளவு தேன் கலந்து தினசரி காலையில் சாப்பிட்ட பின் சூடான பால் குடித்து வர வேண்டும். இதனால் இருதய நோய், நுரையீரல் சம்பந்தமான நோய்கள், வாதம், வயிற்று கோளாறு போன்ற நோய்களில் இருந்து குணம்பெறலாம்.
மேற்கண்ட முறையில் தயாரித்து மாதவிலக்கால் கஷ்டப்படும் பெண்கள் மாதவிலக்கு ஏற்பட்டுள்ள ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் சூதகச் சிக்கல் தீர்ந்துவிடும். அக்னி மாந்தம், வயிற்று குமட்டலுக்கு இந்த கீரையை சாப்பிடலாம். ஆண்மை அதிகரிக்க இதனை உணவில் அடிக்கடி பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
வீட்டிலேயே புதினாவை எளிமையாக வளர்த்து பயன்படுத்துவது சிறந்த பலனையும் பல நண்மைகளையும் அளிக்கும். வீட்டில் புதினா வளர்த்து அதனிலிருந்து ஒவ்வொரு நாளும் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு இலைகளை பச்சையாக எடுத்து மென்று திண்பதால் இரத்த சோகை தீரும், உடலுக்கு தேவையான பல சத்துகளையும் உயிர் சத்துக்களையும் எளிமையாக பெறலாம். உடல் கழிவுகளை எளிமையாக வெளியேற்றவும் அது உதவும்.