கருவுற்றிருக்கும் பெண்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கீரையை உணவோடு எடுத்துக் கொள்வது அவசியமானது. அன்றாடம் கீரைகளை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு தேவையான இரும்பு சத்துக்களும் சுண்ணாம்பு சத்துகளும் கிடைப்பதோடு கருவிலிருக்கும் குழந்தைக்கு தேவையான பல பல சத்துக்களையும் எளிதாக பெறலாம்.
சரி எந்தெந்த காலங்களில் என்னென்ன கீரைகளை எடுத்து கொள்ளலாம் என்று பார்ப்போம்.
எல்லா காலங்களிலும்
முருங்கைக் கீரை, புளிச்சக் கீரை, கொத்த மல்லி கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, கறிவேப்பிலை, பருப்புக் கீரை உட்கொள்ளலாம்.
கோடைக் காலமாக இருந்தால்
மணத்தக்காளிக் கீரை, பசலைக் கீரை, சிறு பசலைக் கீரை, முளைக்கீரை, தும்பைக் கீரை, காசினிக் கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, வெந்தயக் கீரை, சக்கரவர்த்திக் கீரை, வல்லாரைக் கீரை, ஆராக்கீரை, அகத்திக்கீரை, கீழா நெல்லிக் கீரை உட்கொள்ளலாம்.
குளிர் மழைகாலமாக இருந்தால்
அரைக் கீரை, புதினா கீரை, முசுமுசுக்கை கீரை, தூதுவளைக் கீரை, மூக்கிரட்டை கீரை, சுக்காங்கீரை உட்கொள்ளலாம்.
இவ்வாறு காலத்திற்கு ஏற்றாற் போல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கீரையைத் தேர்ந்தெடுத்து மண் சட்டியில் பாசிப் பருப்புடன் சிறிது சின்ன வெங்காயம், சீரகம், பூண்டுப் பல் ஒன்றும் சிறிது உப்பு சேர்த்து மசியலகவோ, கூட்டாகவோ புளி சேர்க்காமல் தயாரித்து உண்பது சிறந்தது. சில கீரைகளை துவையலாகவோ, சாறெடுத்து கருப்பட்டியுடனும் அன்றாடன் சேர்த்துக் கொள்ளலாம்.
கருவில் வளரும் குழந்தைக்கும் தாய்க்கும் தேவையான அனைத்து சத்துக்களும் இதில் உள்ளது. அதிக சோம்பலாகவும், வயிறு பிரட்டலும் இருக்கும் கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவு. அன்றாடம் இதனை உண்ண குழந்தை ஆரோக்கியமாகவும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட தன்மையும் இயல்பாகவே கொண்டு வளரும்.
முடிந்தவரை கீரைகளை நம் வீடுகளில் இருக்கும் மொட்டை மாடியிலோ வீட்டை சுற்றி உள்ள இடத்திலோ வளர்த்து உண்பது சிறந்தது. கீரைகளை பறித்த உடன் செய்து சாப்பிடுவதும் நல்ல பலனை அளிக்கும். இரசாயனங்கள் பூச்சிகொல்லி இல்லாமலும் இருப்பது அவசியமானது .கீரைகளை முட்டை, பால், மாமிசத்துடன் சேர்த்து உண்ணக் கூடாது.