பூவரசு – பூவரச மரம் – நம் மூலிகை அறிவோம்

Poovarasu Maram; Portia tree

சாதாரணமாக கிராமங்கள் நகரங்கள் என அனைத்து இடங்களிலும் சாலையோரங்களிலும் பார்க்கக்கூடிய ஒரு மூலிகை மரம் தான் இந்த பூவரசு மரம். தனித்தனியாக நீண்ட கம்புகளுடன் இருதய வடிவில் இலைகளைக் கொண்ட ஒரு பெரிய மரம். பூவரசு, பூவரச மரம், பூவரசன் என பல பெயர்கள் இதற்குண்டு. ஒரு பெரிய பூவரச மரம் 100 வருடம், 200 வருடம் கூட வாழக்கூடியது.

Poovarasan-tree-poovarasu-maram-in-tamil

பூவரசமரத்தின் இலை, பழுப்பு, பூ, வேர், பட்டை, காய் என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது. இதன் பூக்கள் மஞ்சள் நிறத்திலும் காய்ந்ததும் மஞ்சள் சிவப்பு நிறத்திலும் இருக்கக்கூடியது. இலை உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களுக்கு ஒரு சிறந்த மருந்தாக இருக்கக் கூடியது. பூவரசன் காய்கள் தோலில் ஏற்படும் நோய் கிருமிகளை அழிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது. கிராமப்புறங்களில் கருத்தரிக்காமல் இருக்க இந்த பூவரசை பயன்படுத்தினார்கள்.

உணவாக பூவரச இலைகள்

கிராமப்புறங்களில் பொதுவாக இட்லி, கொழுக்கட்டை, வத்தல், வடகம் போன்ற பல வகையான உணவுகளை இந்த பூவரசன் இலையை கொண்டு தயாரிக்கும் பழக்கம் உள்ளது.

சரும நோய்களுக்கும் பூவரசு

தோலில் ஏற்படும் அரிப்பு, ஊறல், கட்டி, எரிச்சல், நமைச்சல், தேமல், கரும்புள்ளிகள், வெள்ளை தழும்புகள், அக்கி, வேனல், சொறி, படை, வெண்புள்ளி, படுக்கைப் புண் என அனைத்துவிதமான சரும நோய்களுக்கும் பூவரச மரம் மருந்தாக உள்ளது.

வீக்கத்தைக் குறைக்கும் பூவரசு

உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க கூடிய ஆற்றல் நிறைந்ததாகவும் இந்த பூவரசம் இலைகளில் உள்ளது. பூவரச மரத்தின் இலைகளை பொடியாக நறுக்கி சட்டியில் போட்டு வதக்கி எடுத்து வீக்கம் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் வீக்கம் வாடிவிடும். தினசரி கட்டை அறுத்து சுத்தம் செய்துவிட்டு மறுபடியும் புதிய இலையை வைத்து வீக்கம் நீங்கும் வரை கட்ட வேண்டும்.

பருக்கள், கட்டிகள், தேமல்

உடலில் ஏற்படும் பல விதமான தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கக்கூடியது. பருக்கள், கட்டிகள், தேமல் போன்ற பல தோல் சார்ந்த பிரச்சனைகளுக்கு பூவரசன் காய்களில் உள்ள மஞ்சள் நிற திரவத்தை பயன்படுத்த உடனடியாக சிறந்த ஒரு பலனை எதிர்பார்க்கலாம்.

சொறி, சிரங்கு, அரிப்பு

சொறி, சிரங்கு, அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு பூவரச மரத்தின் பழுத்த இலைகளை நெருப்பிலிட்டு அதை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு குழப்பிக் சொறி சிரங்கின் மேல் போட்டு வந்தால் விரைவில் குணமாகும். சரும நோய்கள் உள்ள இடத்தில் தடவி தினசரி சுத்தம் செய்து புதிய மருந்து போட விரைவில் தோல் நோய்கள் நீங்கும்.

படர்தாமரைக்கு

பூவரசன் காய்களை எடுத்து அதனுள் இருக்கும் மஞ்சள் நிறத்தில் திரவத்தை அல்லது சாற்றை படர்தாமரை உள்ள இடத்தில் தடவி வர விரைவில் படர்தாமரை மறையும்.

(9 votes)