Mucuna pruriens; Velvet Bean; Cowage Plant; பூனைக்காலி
கொடி வகையைச் சேர்ந்தது பூனைக்காலி மூலிகை. தமிழகத்தில் பரவலாக பார்க்கக் கூடியது. வேலி ஓரங்கள், மரங்களில் படர்ந்து காணப்படும் கொடி. இதன் இலைகள் கூட்டிலைகளில் மாற்றிலை அடுக்கில் இருக்கும். வீடுகளிலும் பலர் இதன் மருத்துவகுணம் தெரிந்து வளர்ப்பதுண்டு. மலர்கள் அடுக்காக அடர் சிவப்பு கலந்த நீல நிறத்தில் இருக்கும். விதைகள் கருப்பு நிறத்தில் அவரை விதைப் போல் இருக்கும்.
விதைகளே அதிகளவில் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றது. இதன் வேர், சுணையும் பயன்படும் பகுதிகள். பார்கின்சன் நோய்க்கு இந்த விதை மருந்து பயன்படும். காமத்தைப் பெருக்கும் ஆற்றலும், நரம்புகளை வலுவாக்கும் தன்மையும் கொண்டது. மேலும் ரத்த சோகை, ரத்த பேதி, வயிற்றுப் புழு, வெள்ளை, வெட்டை, கற்றாழை நாற்றம், கரப்பான், ஆண்மைக் குறைவு போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாக இந்த மூலிகை உள்ளது.
பொதுவாக காட்டு கொடித்தோடை என்ற மூலிகையை பூனைக்காலி என்று தவறுதலாக பலர் நினைப்பதுண்டு காரணம் காட்டு கொடித்தோடை மூலிகையை கிராமங்களில் சிறுப்பூனைகாலி என்றும் அழைப்பார்கள். பூனைக்காலி வேறு மூலிகை காட்டு கொடித்தோடை மூலிகை வேறு.
வயிற்றுப்புழு வெளியேற
பூனைக்காலி காயினை மூடியிருக்கும் மெல்லிய மயிர் போன்ற சுணையை தேன் அல்லது பனைவெல்லத்துடன் கலந்து எடுக்க வயிற்றுப்புழுக்கள் வெளிப்படும்.
ஆண்மை அதிகரிக்க
பூனைக்காலி விதையை நன்கு உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு ஒரு சிட்டிகை அளவு பாலில் கலந்து பருகிவர வெள்ளை, வெட்டை நீங்கும். ஆண்மை அதிகரிக்கும். அதேப்போல் பூனைக்காலி விதைப் பொடியுடன் சம அளவு சிறு நெருஞ்சில் விதைத்தூள் கலந்து ஓரிரு சிட்டிகை அளவு பாலில் கலந்து எடுத்துவர ஆண்மைக்குறைவு மறையும்.
பூனைக்காலி வேர்
காய்ச்சலால் ஏற்படும் வாத, பித்த, கபநோய்களுக்கு பூனைக்காலி வேரை காய்ச்சி குடிநீராக தயாரித்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட விரைவில் தீரும். உடலில் ஏற்படும் வீக்கங்களுக்கு பூனைக்காலி வேர் நல்ல பலனை அளிக்கும். பூனைக்காலி வேரை அரைத்துப் பற்றிட வீக்கங்கள் மறையும்.
உடல் பலம் அதிகரிக்க பூனைக்காலி லேகியம்
சிறிதளவு பூனைக்காலி விதையை எடுத்து அதனுடன் மூன்று பங்கு பசும்பால் சேர்த்து பால் வற்றும் வரை காய்ச்சி பின் விதையை எடுத்து உலர்த்தி, நன்கு உலர்ந்த பின் அதனை பொடி செய்து பின் நெய்விட்டு லேசாக வறுத்து சர்க்கரை 2 பங்கு சேர்த்து லேகியமாகக் கிளறி எடுத்து அவற்றை சிறிது சிறிது உருண்டைகளாக உருட்டி தேனில் ஊறவைத்து இந்த உருண்டையை தினம் 2 வேளைகள் எடுத்து வர வெட்டை, பெரும்பாடு, பாரிச வாதம் போன்ற தொந்தரவுகள் மறையும். உடல் பலம் அதிகரிக்கும்.