பொன்னாவாரை – நம் மூலிகை அறிவோம்

Senna alexandrina; பொன்னாவாரை

உடல் கழிவுகளை நீக்கி பொன்னான மேனியை அளிக்கும் அற்புத தாவரம், மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த ஒரு சிறந்த மூலிகை இந்த பொன்னாவாரை. இது ஒரு செடி வகை மூலிகைத் தாவரம். சிறு கிளைகளுடன் அடர்த்தியான வளரக்கூடிய இந்த பொன்னாவாரையின் இலைகள் ஆவாரம் செடிகளின் இலைகளை ஒத்ததாகவே இருக்கும். பூக்கள் மஞ்சள் நிறமாக ஆவாரம் பூவை ஒத்திருக்கும், ஆனால் ஆவாரை செடி போல் பல மொக்குகளுடன் கொத்துக் கொத்தாக இல்லாமல் நான்கு ஐந்து மொக்குகளுடன் சிறு கொத்தாக மொக்கு விட்டு புஷ்பிக்கும். இதன் காய்கள் தட்டையாக இருக்கும்.

காய் முற்றி பழுப்பு நிறமடைந்து வெடித்து விதைகளைச் சிதறும். ஒவ்வொரு காயிலும் 10 முதல் 12 விதைகளிருக்கும். இவைகள் சிறு காராமணி அளவில் இருக்கும் ஆனால் தட்டையாக இருக்கும். இதன் இலைகளை கிராம மக்கள் சமைத்து உண்பார்கள். இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுண்டு.

உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றக் கூடிய ஒரு அற்புதமான தாவரம் இது. உடலில், மலக்குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றும், மேலும் ரத்தத்தை சுத்திகரிக்கக் கூடிய ஒரு அற்புதமான தாவரம். மூன்று மாதத்திற்கு ஒருமுறை இந்த பொன்னாவாரையைக் கொண்டு சுகபேதி செய்து வர உடல் பொன் போலப் பிரகாசிக்கும். எலும்புகள் பலப்படும். உடல் பருமனை குறைக்கும், ESR அளவை குறைக்கவும் உதவும்.

சுக பேதிக்கு

பொதுவாக சுக பேதிக்கு அதிகமாக பயன்படுத்த கூடிய ஒரு மூலிகை என்பது பொன்னாவாரை. பொன்னாவாரை இலையையும், அதன் விதைகளையும் அம்மியில் வைத்து மைபோல அரைத்து எலுமிச்சை பழம் அளவு எடுத்து வெந்நீரில் கலக்கி காலையில் கொடுத்து விட்டால் கொஞ்சம் நேரத்தில் நான்கைந்து முறை பேதியாகும். உடலில் உள்ள துர்நீர், மலக்கழிவுகள் வெளியேறிவிடும். மேலும் போனால் எலுமிச்சை சாற்றை கொடுத்தால் உடனே நிற்கும்.

மஞ்சள் காமாலை குணமாக

பொன்னாவாரை இலையையும், கீழாநெல்லியையும் ஒரே அளவாக எடுத்து அம்மியில் வைத்து மைபோல் அரைத்து பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து காலையிலும் அதே அளவு மாலையிலும் கொடுத்து வெந்நீர் குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

பித்த பாண்டு குணமாக

பொன்னாவாரை வேரைக் கொண்டு வந்து அதை கழுவி சுத்தம் செய்து பொடியாக வெட்டி 50 கிராம் எடையுடன் மிளகு, சீரகம், சுக்கு ஆகியவற்றையும் தலா 10 கிராம் அளவு சேர்த்து இவைகளை ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி வேளைக்கு அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் பித்த பாண்டு குணமாகும்.

சொறி சிரங்கு குணமாக

பொன்னாவரை இலையுடன் ஒரு துண்டு மஞ்சளையும் சேர்த்து மை போல் அரைத்து சிரங்கின் மேல் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து சுட்ட சீயக்காயுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து அதைத் தேய்த்துக் கழுவி சுத்தமாகத் துடைத்து தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் சிரங்கு மூன்றே நாளில் மறையும். தினசரி கழுவி விட்டு புதிய இலை பற்று போடவேண்டும்.

(2 votes)