பொன்னாங்கண்ணிக் கீரை

Alternanthera sessilis; பொன்னாங்கண்ணிக் கீரை

தமிழகத்தில் பரவலாக கிடைக்கும் கீரையில் ஒன்று பொன்னாங்கண்ணிக் கீரை. இந்த கீரையில் பல சிறப்புகளுடன் அடங்கி இருப்பினும் குறிப்பாக கண்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். இது கண்களை பொன் போல் பாதுகாக்கும் கீரை என்று சொன்னாலும் மிகையாகாது. பொன்னாங்கண்ணிக் கீரையை எப்படி சமையல் செய்து சாப்பிட்டாலும் மிக ருசியாக இருக்கும். கொடுப்பை, சீதை என்றொரு பெயரும் இந்த பொன்னாங்கண்ணிக் கீரைக்கு உண்டு. சமஸ்கிருதத்தில் மீனாக்ஷி என்று இதற்கு பெயர்.

பொன்னாங்கண்ணிக் கீரை சத்துக்கள் பயன்கள்

வைட்டமின் ஏ சத்து மிகுதியாக உள்ளது. மேலும் புரதம், இரும்பு, சுண்ணாம்பு சத்துக்களும் அடங்கியுள்ளது. இந்த கீரையில் தங்கச் சத்துக்கள் உள்ளது. உடலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். குளிர்ச்சியையும் ஏற்படுத்தும்.

ஈரல் நோய், கண் நோய், கண் புகைச்சல், கருவிழி நோய், வாயு, அனல், போன்றவற்றிற்கு மிகச்சிறந்தது. உடலை பொன்னிறமாக மாற்றும் அற்புத கீரை.

கண்களுக்கு

கண்களில் உண்டாகும் நோய்களுக்கு இதனை பசு வெண்ணெயில் வதக்கி கண்களில் வைத்துக் கட்டினால் கண் நோய்கள் காணாமல் போகும். கண்ணில் மறைப்பு விழுவதை கண் காசம் என்று கூறுவார்கள். இதனைப் போக்க கீரையில் உப்பு சேர்க்காமல் வேக வைத்த பசு வெண்ணையுடன் தினசரி சாப்பிட்டு வந்தால் இது அகன்று விடும்.

கூந்தல் குளியல் தைலம்

பொன்னாங்கண்ணி கீரைத் தைலம் தயாரித்து அந்த தைலத்தை உடலில் தேய்த்து குளித்தால் உடல் சூட்டை தணிக்கும். உடலும் மினுமினுப்புடன் இருக்கும்.

இந்த தைலத்தை வாரம் இருமுறை உடலில் தேய்த்து ஸ்நானம் செய்து வந்தால் உடல் நலனுக்கு மிகவும் நல்லது. இதனை வீட்டில் நாமே கீழ்காணும் முறையில் தயாரித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

நல்ல பசுமையான பொன்னாங்கண்ணிக் கீரையை வாங்கி வந்து நன்கு சுத்தம் செய்து இடித்து அரை கிலோ சாறு எடுத்துக் கொண்டு சுத்தமான முக்கால் கிலோ தேங்காய் எண்ணெயையும் அதில் சேர்த்து களிம்பு ஏறாத ஒரு பாத்திரத்தில் ஊற்றி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அமுக்கிராங்கிழங்கு, குறுந்தொட்டி, கொம்பு அரக்கு, செம்பருத்தி பூ ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் வீதம் சேகரித்து அம்மியில் வைத்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த அனைத்தையும் கலந்து வைத்துள்ள கலவையில் போட்டு நன்கு கலக்கி அடுப்பிலேற்றி சிறு தீயாக எரிய விடவேண்டும். சரக்குகள் எண்ணெயில் வெந்து நன்கு சிவந்து வந்ததும் கீழே இறக்கி விட வேண்டும். சூடு ஆறியபின் வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் ஊற்றி மூடி பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொன்னாங்கண்ணிக் கீரை தைலத்தை சிறிது எடுத்து தலையில் தேய்த்து வாரம் இருமுறை குளித்து வந்தால் உடல் நலமாக இருக்கும்.