மனிதனுக்கு எவ்வாறு வைரஸ் மூலமாக உயிரைக் கொல்லும் நோய்கள் உருவாகிறதோ அதேபோல் தான் செடிகளையும் நோய்கள் தாக்குகிறது. இதனை எளிதாக புரிந்துகொள்ள மனிதனுடன் செடிகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
பொதுவாக பலகினமாகவும், எதிர்ப்புசக்தியுமற்ற மனிதர்களை மட்டும்தான் எளிதாக நோய்க் கிருமிகள் தாக்கும். ஆயிரம் நபர்கள் கூடியிருக்கும் ஒரு இடத்தில் நோய்வாய்ப்பட்ட ஒரு நபர் இருக்க காற்றாலும், நீராலும் மற்றவர்களுக்கு நோய்க்கிருமிகள் பரவும். ஆனால் அவ்வாறு பரவும் நோய் கிருமிகள் அங்கிருக்கும் ஆயிரம் நபர்களையும் தாக்குவதில்லையே.. குறைந்தது ஒரு பத்து பதினைந்து நபர்கள் மட்டும்தான் நோயின் தன்மையை அடைகின்றனர். மற்றவர்களிடம் பரவிய நோய்க்கிருமிகள் அழிந்துபோய்விடுகிறது. அதாவதும் மனிதனிடம் இயற்கையாகவே உடலில் நோயெதிர்ப்புத்திறனும் அதற்காக உடலிலேயே தோல், உமிழ்நீர், சிலவகையான சுரப்பிகள் போன்றவை உடலைக்காக்கும் அரணாகவும், பாதுகாப்பு படையாகவும் பணிசெய்கிறது. அதனால் பஞ்சபூதங்களின் வழியிலும் உணவாகவும் பொதுவாக பரவக்கூடிய நோய்க்கிருமிகளை உடல் தானாகவே அழிக்கும் வல்லமை படைத்திருக்கிறது. இந்த நோயெதிர்ப்புத்திறன் சீராக செயல்பட ஆற்றல் மிகுந்த மரபணுவும், சத்தான உணவும், ஆரோக்கியமான பழக்கவழக்கங்களும் அவசியம்.
ஆற்றல் மிகுந்த மரபணு என்றுமே சிறந்த முறையில் தன்னுடைய செயல்பாடுகளை வெளிப்படுத்தும். சிறந்த ஆற்றல் கொண்ட மனிதர்களுக்கு இயற்கையாகவே நோயெதிர்ப்புத்திறன் சீராகவும், செம்மையாகவும் செயல்படும். உதாரணத்திற்கு சில குழந்தைகளுக்கு பிறந்தது முதல் அடிக்கடி காய்ச்சல், சளி என ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்படுவதைக் காணலாம். மரபணு ஆற்றல் குறைவாக அதாவது தாய்தந்தையின் மரபணுவைப் பெற்ற குழந்தை அவர்களிடமிருந்து ஆற்றல் குறைந்த மரபணுவை பெறுவதால் இயற்கையாகவே இவர்களுக்கு நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக இருக்கும்.
சத்தான உணவுகளை உட்கொண்டு, பாரம்பரிய பழக்கவழக்கங்களை பின்பற்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பவர் உடலுக்குள் தீமை செய்யும் நோய்க்கிருமி சென்றால் அவரின் நோய்யெதிர்ப்புத்திறன் அந்த நோய் கிருமியை அடித்து வெளியேற்றும் என்பது அனைவருமறிந்த ஒன்றுதான். இவ்வாறு நோய்கிருமியினை உடலைவிட்டு வெளியேற்ற பல பாதுகாப்பு படையினைர் நமது உடலில் உள்ளனர். நமது சத்தான ஆகாரம் உடலில் இலட்சக்கணக்கில் இருக்கும் பாதுகாப்பு படையினரை விழிப்போடும், துடிப்போடும் வைத்திருக்க உதவும். மேலும் நோஞ்சானாக இல்லாமல் எதிர்க்கும் திறனை வளமாக்க உடலுக்கு போதிய தெம்பையும் அளிக்கும். நமது சத்தான ஆகாரங்கள் உடலில் இருக்கும் பல நன்மை செய்யும் நுண்ணுயிர்களைப் பாதுகாத்து தீமை செய்யும் நுண்ணயிர்கள் உடலில் நுழைந்தாலும் அவற்றை அடித்து விரட்டிவிடும்.
அதேபோல் நம்முடைய பழக்கவழக்கங்களும் மிகமுக்கியம். சிறந்த மரபணுவையும், நல்ல உணவும் உட்கொள்ளும் சிலருக்கு நோய்த்தாக்குதல் சில நேரம் காணப்படும். அதற்கு காரணம் முறையற்ற பழக்கவழக்கங்கள். இதனால் உடல் தன்னுடைய இயல்பு நிலையிலிருந்து சற்று தடுமாறும். அவ்வாறான நேரத்தில் நோய்க்கிருமிகள் தாக்கும். உதாரணத்திற்கு காலநேரமறிந்து செயல்படாமலிருப்பது. நம்மூரில் பொதுவாக ஆடிமாதம் காற்றடிக்கும் மாதம். நோய்க்கிருமிகள் அதிகம் பரவும் காலம். இந்த காலத்திற்கென்று சில வழிமுறைகளை அதாவதும் வீடுகளில் வேப்பிலை, மாவிலை, மஞ்சள் போன்றவற்றில் தோரணங்களை கட்டுவதும் அந்த காலத்திற்கேற்ற உணவை எடுத்துக்கொள்வது என ஒரு முறையை நம் முன்னோர்கள் பின்பற்றினர். காற்றின் மூலமாக பரவக்கூடிய நோய்கள் நம்மை அண்டாமல் இருக்க இந்த பழக்கம் இருந்தது. இதுபோன்ற பழக்க வழக்கங்களை இன்று கருத்தில் கொள்ளாமல் இருப்பதாலும் நோய்க்கிருமிகள் தாக்குகிறது.
இதே நிலைதான் நமது செடிகளுக்கும். தரமான விதை, சிறந்த ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்பு, காலநேரத்தை அறிந்து அதாவதும் பட்டத்தை அறிந்து செடிகளை வளர்க்க எந்த நோயும், எந்த பூச்சியும் நமது செடிகளை தாக்காது.
செடிகளை நோய்த்தாக்கமால் இருக்க அவற்றின் ஆதாரமாக இருக்கும் வித்துக்கள் அதாவது விதைகள் தரமானதாக இருக்க வேண்டும். இன்று வரக்கூடிய மலட்டு விதைகள் என்று அடைமொழியுடன் அழைக்கப்படும் கலப்பு விதைகள் (HYBRID SEEDS) அதிக இரசாயனங்கள் கொண்டு வளரக்கூடியவை. இவ்வகை இரசாயனங்களை சார்ந்து விளையும் விதைகள் பொதுவாகவே நோஞ்சான் விதைகள் தான். இவற்றை தவிர்த்து தரமான நாட்டு விதைகளை விதைப்பதால் இயற்கையாகவே அந்த செடிகளுக்கு நோய்த்தாக்குதல் குறைவு அதாவது நோய்எதிர்ப்பு திறன் அதிகம்.
அடுத்தது விதைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் நோய்க்கிருமிகளை பஞ்சகவ்யா, அமிர்தக்கரைசல் அல்லது பீஜாமிர்தம் போன்ற இயற்கை ஊக்கிகளைக்கொண்டு விதைநேர்த்தி செய்ய விதைகளில் ஓடிக்கொண்டிருக்கும் நோய்க்கிருமிகள் அழிக்கப்படும்.
அடுத்தது பராமரிப்பு அதாவதும் சிறந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இயற்கை வளர்ச்சிஊக்கிகள் (natural Plant growth booster). பஞ்சகவ்யா, அமிர்தக்கரைசல், ஜீவாமிர்தம் போன்றவற்றை மாதம் இரண்டு அல்லது மூன்று முறை செடிகளுக்கு முறையாக அளிப்பதால் பூச்சி, நோய் தாக்குதலில் இருந்தும் வளர்ச்சியை சீராக காக்கமுடியும்.
நம் முன்னோர்கள் பின்பற்றிய சிறந்த பட்டத்திற்கு (ஆடிப்பட்டம், தைப்பட்டம்…) ஏற்ப அந்தந்த விதைகளை விதைத்து வளர்ப்பது அதிக விளைச்சளைமட்டுமல்ல செடிகளை ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவும்.
அதோடு மிகமுக்கியமானது செடிகளை அமைக்கக்கூடிய முறை. ஒரு குடும்பத்திற்கு பொதுவாக அனைத்து வித காய்கள், கீரைகள், பழங்களும் தேவை. இவ்வாறு கலந்து இருந்தாலே சீரான ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் மேம்படும். ஆனால் எனக்கு வெண்டைக்காய் மட்டும் தான் பிடிக்கும் என்று வெண்டைக்காயை மட்டுமே வளர்ப்பது மீண்டும் மீண்டும் வெண்டைக்காயையே விதைப்பதும் மண்ணின் மூலமாக பரவக்கூடிய பல நோய்களை வரவழைக்கும். இவ்வாறு ஒரு செடி அல்லது ஒரு பயிரை மட்டும் வளர்ப்பதால் நோயுடன் பூச்சித்தாக்குதலும் அதிகமாக இருக்கும். முதலில் இவற்றிலிருந்து தப்பிக்க ஒரு ஆரோக்கியமான தோட்டத்தை அமைப்பது அவசியம். ஆரோக்கியமான தோட்டம் என்பது பலவகையான செடிகளை வளர்ப்பது.
சாமந்தி போன்ற பூச்செடிகளை காட்டாயம் நமது தோட்டத்தில் வளர்க்கவேண்டும். இதனால் பூச்சிகள் மட்டுமல்ல இவ்வகை செடிகள் தங்களின் வேர்களில் சுரக்கும் சிலவகையான சுரப்பிகள் மண்ணிலிருக்கும் நூற்புழுக்களின் முட்டைகளை அழிக்கக்கூடியது.
ஒவ்வொரு முறையும் செடிகளின் அறுவடைக்குப் பின் தொட்டிகளில் அல்லது அந்த மண்ணை நன்கு கிளறி வெயிலில் பிரட்டிவிட்டு பஞ்சகவ்யா அல்லது கனஜீவாமிர்தம் கொண்டு மீண்டும் கிளறி மண்ணை ஆறப்போட வேண்டும். இவ்வாறு செய்வதால் மண்ணூட்டமடைவதுடன் மண்ணிலிருக்கும் நோய்க்கிருமிகள் அழிக்கப்படும்.
இவற்றையெல்லாம் முன்னோர்கள் சுழற்சியாக பின்பற்றினர். தரமான பாரம்பரிய விதைகள், மாடுகள் உழுது மண்புழுக்கள் விளையாடும் வளமான மண், மாட்டுச்சாணத்தில் விதை நேர்த்தி, கால் நடைகளின் தொழு உரம், இன்றிருக்கும் ஒரு பயிர்சாகுபடி இல்லாமல் ஆரோக்கியமளிக்கும் பல பயிர் சாகுபடி, அவ்வப்பொழுது தேவைக்கேற்ப இயற்கை உரங்கள், பூச்சிகளும், பறவைகளும், மற்ற உயிரினங்களும் சாதாரணமாக திரிய ஆரோக்கியமான உணவுச்சங்கிலி, பட்டத்திற்கு பட்டம், காலத்திற்கு காலம் மாறிய செடிகள், இதனால் மண்ணிற்கு இயற்கையாக ஊட்டமளிக்கப்பட்டது, பூச்சி, நோய்கள் கட்டுப்பட்டன, விளைச்சலும் அதிகமாக இருந்தது. சந்தையில் விற்றது போக மற்றவற்றை இயற்கையாக பக்குவப்படுத்தினர், இதனால் மனிதர்களின் ஆரோக்கியம் மேம்பட்டது, விளைச்சலுக்குப்பின் மறுசுழற்சி முறையில் அடுத்த பயிர், பின் தகுந்த காலத்தில் நிலத்தை உழுது ஆறப்போட்டனர் இதனால் மண் மீண்டும் பக்குவப்பட்டு செம்மையானது.
இவ்வாறு செய்ததால் உணவு, உடல் ஆரோக்கியம், பல உயிரினங்கள், உணவு சங்கிலி, நீராதாரங்கள், நீருயிரினங்கள் என ஒட்டுமொத்த இயற்கையும் பாதுகாக்கப்பட்டது. குறிப்பாக உலகின் தட்பவெப்பநிலை காக்கப்பட்டது. இன்றோ அதிக இரசாயனங்களால் உலக வெப்பமயமாக்கல் தொடங்கி, நிலத்ததடி நீர், உணவு, ஆரோக்கியம், பிற உயிரினங்களின் வாழ்வாதாரம் என அனைத்துமே குலைந்துபோனது. இவையணைத்தையும் மீட்டெடுக்க வீட்டுத் தோட்டமும் சில பாரம்பரிய பழக்கவழக்கங்களும் இன்றைய சூழலுக்கு அவசியமாகிறது. கடைபிடிப்போம்.. அடுத்த சமூகத்திற்கு தகுதியானவற்றை மட்டுமளித்து அவர்கள் வாழ வழிவகுப்போம்.
நமது ஆரோக்கியமும் நமது சுற்றுசூழலுக்கு ஒன்றோடு ஒன்று பிணைந்தது. நோய்கள் பயமுறுத்துபவையல்ல, நமது ஆரோக்கியத்தையும், நமது மண்ணின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதால் எந்த நோய்கிருமியும் நம்மையும், நமது செடிகளையும், நம் மண்ணையும் பாதிக்காது.