உணவு, விவசாயம், வீட்டுத்தோட்டம், செடி வளர்ப்பு, காய்கறிகள் என வரும்பொழுதெல்லாம் அதனோடு சேர்ந்து ஆர்கானிக் என்ற பிரிவையும் இன்று காணமுடிகிறது. பத்தாண்டுகளுக்கு முன் மேலைநாடுகளிலும், மேல் தட்டு மக்களுக்கும் பரிச்சயமாக இருந்த இந்த ஒற்றை சொல் இன்று அனைத்து தரப்பு மக்களிடமும் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது. இன்று ஆர்கானிக் விவசாயியாக இருக்க பல இளைஞர்கள் விரும்புகின்றனர். சாதாரண விவசாயிகூட இயற்கை விவசாயத்தை முயன்று தான் பார்ப்போமே என்ற ஊந்துதலுடன் இயற்கை விவசாயத்தை முயற்சிக்கிறார்.
வீட்டை சுற்றி ஆடு, மாடு, கோழி, செடிகள் என இருந்த காலமெல்லாம் போயே போச்சு.. அடுக்கு மாடி குடியிருப்பு, மண்ணில் காலே படாத சொகுசு வாழ்க்கை என நாகரீகம் நகரும் ஆடம்பர வாழ்க்கையில் மீண்டும் இருக்கும் இடத்திலும், மாடிகளிலும், வராண்டாக்களிலும் செடிகளின் அணிவகுப்பு ஆரம்பமாகியுள்ளது. அதுவும் கீழ்த்தட்டு மக்களின் இல்லங்களிலோ அல்லது விவசாயிகளின் வீட்டிலோ அல்ல பல கோடிகளை கொட்டி வீடு வாங்கிய நவீன தொழிநுட்பத்தில் திளைக்கும் அடுக்குமாடி குடியிருப்பினர் வீடுகளிலும், ஆடம்பர பங்களாக்களிலும் என்றால் அதனை சாதாரணமாக நினைத்து விட்டுவிட முடியாதே.. இன்றைய கார்பொரேட் வாழ்க்கையில் எல்லாமே ஒரு கணக்கீட்டின் அடிப்படையில் தானே நகர்கிறது.
சாதாரணமாக தமிழர்களின் வாழ்வின் ஒரு அங்கமாக இருந்த விவசாயத்தில் பல்வேறு புரட்சிகள் ஏற்பட்டு இன்று ஆர்கானிக் புரட்சி ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. சென்ற இதழில் பூச்சி, நோய் போன்ற செடிகளை தாக்கும் பாதிப்புகளைப்பற்றி பல விஷயங்களைப்பார்த்த நாம் அடுத்ததாக செடிகளில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடையும் அடுத்து அதன் பின்விளைவுகளையும் பார்க்கவிருக்கிறோம். அதற்கு முன் பல்லாயிரம் ஆண்டுகளாக சர்வசாதாரணமாக இருந்த விவசாயத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களையும் அதன் பின்விளைவுகளையும் இன்றைய ஆர்கானிக் புராட்சிக்கு காரணமானவைகளையும் ஒரு பார்வை பார்க்க நடைமுறையும் செடிவளர்ச்சியும், ஊட்டச்சத்துக்களின் பங்கையும் புரிந்துகொள்ளலாம்.
கடந்த நாற்பது ஆண்டுகளில் விவசாயமும், விவசாயியும் கீழ்த்தட்டு மக்களாகவும், தொழிலாகவும் பார்க்கப்பட்டது. இதனால் அடுத்த தலைமுறை விவசாயியாக பலர் தயாராகவில்லை.. படித்துவிட்டு, கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களிலும், வெளிநாடுகளிலும் தங்களது கணினி பணியை பல விவசாயிகளின் பிள்ளைகள் தொடங்கினர். ஆனால் அனைவருக்கும் உணவு என்பது அவசியமானதே.. விவசாயிகள் குறைய கார்ப்பரேட் கிராமங்களுக்குள் உரங்களாக புகுந்தது.. விவசாயிகளின் பிள்ளைகள் வெளியேற அவர்களோடு மாடுகள், ஆடுகள், கோழிகள் என மண்ணிற்கு வளம்சேர்த்த நமது கால்நடைகளும் மறைந்தன. மண் வளமாக இருந்தால் தான் உணவும் ஆரோக்கியமாக இருக்கும். மண்ணிற்கு உயிரும், வளமும் சேர்க்கும் கால்நடைகளின் கழிவுகள் மறைந்தன.
லாரி லாரியாக உரங்கள்.. நவீன இரசாயன உரங்கள் அவற்றை ஈடுகட்ட என்ற பெயரில் கிராமங்களுக்குள் நுழைந்தது. மண்ணிற்கு என்னென்ன சத்துக்கள் வேண்டுமோ அவற்றிற்கெல்லாம் தனித்தனியாக வந்தது இரசாயன உரங்கள்.
மண்ணிற்கு தழைச்சத்து அதாவது Nitrogen சத்து வேண்டுமா… இருக்கவே இருக்கு யூரியா, மணிச்சத்து என்ற பாஸ்பரஸ் சத்து வேண்டுமா இருக்கவே இருக்கு DAP இப்படி ஒவ்வொரு சத்துக்கும் ஒவ்வொரு இரசாயனத்தை தனித்தனியாக வடிவமைத்து அவற்றை விவசாயிகளிடம் கொண்டு சேர்ந்தனர் நமது கார்ப்பரேட் நிறுவனங்கள்.
இவற்றை மண்ணில் கொட்டியவுடன் இதிலிருந்த இரசாயனங்களாலும் மற்ற வேதிப்பொருட்களாலும் மண்ணிலிருந்த, மண்ணிற்கு ஊட்டமளித்த நுண்ணுயிர்களும், மண்புழுக்களை அழிந்துவிட்டன. அதுமட்டுமல்ல இந்த இரசாயனங்களில் இருந்த வேதிப்பொருட்கள் காற்றில் கலந்து காற்றை மாசுபடுத்தின, இதனால் நன்மை செய்யும் பூச்சிகள் மடிந்தது, தீமை செய்யும் ஒளிந்து வாழும் பூச்சிகள் பலமடங்கு பெருகின.
இந்த இரசாயனங்களில் செடிகளுக்கு தேவைப்பட்ட சத்துக்கள் ஐம்பது சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது, இதனால் பெருமளவில் மற்ற வேதிப்பொருட்களின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. நீர், நிலம், காற்று, சுற்றுப்புறம், ஆரோக்கியம் என்ற அனைத்துமே பாதிக்கப்பட்டது. உணவில் இந்த இரசாயனங்களின் நச்சுக்கள் அதிலும் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பால் என அனைத்திலும் ஊடுருவியிருந்தது. இதனை உண்பவர்களுக்கு காரணங்கள் தெரியாத பல வியாதிகள், ஹோர்மோன் சமநிலையின்மை, உடல் பருமன், நரம்பியல் நோய்கள், புற்றுநோய் என பல வியாதிகள் ஏற்பட தொடங்கியது. ஊரில் யாரோ ஓரிருவருக்கு இருந்த இந்த நோய்கள் இன்று வீட்டிற்குள் வீடு வந்ததன் அடிப்படையும் இதுவே.. பின் இரசாயன உரங்களால் நமது பாரம்பரிய விதைகள் மாற்றப்பட்டன. நமது பாரம்பரிய நாட்டு விதைகள் இயற்கையாக விளையக்கூடியவை.. சுற்றுப்புறம், காலம், நேரம், பருவம், பட்டம் போன்றவைகளையும் அடிப்படையாகக் கொண்டு வளருபவை. மண்ணில் இருக்கும் இயற்கை வளங்களை கொண்டு பருவத்திற்கேற்ப விளைச்சலைக்கொடுக்கும். சிறந்த நோய்யெதிர்ப்பு, பூச்சி எதிர்ப்பு தன்மை கொண்டது. இவற்றிற்கு இரசாயன உரங்களைக்கொடுக்க விளைச்சலில் பெரிய மாறுதல்கள் இல்லை, அதோடு இரசாயன உரங்களினால் அவற்றின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. இதனால் உரங்களின் விற்பனை குறையுமே என்று உரங்களுக்கு செவிசாய்க்கும் விதைகளை அறிமுகப்படுத்தியது கார்பரேட்டுகள். விளைவு ஹைபிரிட் விதைகள், நச்சுக்கள் கலந்த உணவுகள்..
விவசாயிகள் குறைந்தாலும் அதிக விளைச்சலை அதாவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் கலந்த உணவுகள்.. இதுமட்டுமல்ல மண் மலடானது.. நமது பாரம்பரிய உணவுகளின் சுவை குறைந்தது.. பல நாடுகளின் சத்தற்ற உணவுகள் செயற்கை சுவை, மணமூட்டிகளுடன் நமது நாவிற்கு சுவையையளித்ததோடு உடலுக்கு தீங்கையளித்தது. இதனால் நமது இளைய தலைமுறைகள் அடுத்த வாரிசு பெற்றுக்கொள்ளமுடியாத உடல் குறைபாட்டிற்கும் காரணமாகியுள்ளது.. இப்படி கடந்த நாற்பது ஆண்டுகளில் நமது உணவின் மாற்றத்தை கூறலாம்.
இன்று இவற்றிற்கெல்லாம் தீர்வு நமது உணவை நாமே முடிந்தவரை விளைவித்துக்கொள்வது தான் என்ற உண்மை நிலையறிந்தவர்கள் வீட்டுதோட்டம் வைக்க தொடங்கிவிட்டனர். ஆனாலும் ஒருவித மாயைகளால் சிறப்பாக அவற்றை செயல்படுத்த முடியாமல் பலர் தவிர்ப்பதனையும் காணலாம். செழிப்பான செடிவளர்ச்சிக்கு அடிப்படை விதைகளும், மண்ணும்.
விதைகள் செடிகளின் அடிப்படை என்றால் அவற்றை தாங்கி நிற்கும் மண் அதன் அஸ்திவாரம். மண் செழிப்பாக இருக்க செடிகளின் வளர்ச்சி, பூச்சி, நோய் என அனைதையும் எளிதாக கையாளலாம்.
மண்ணிற்கு அடிப்படை பேரூட்ட சத்துக்களும், நுண்ணூட்ட சாதுக்களும். இவை குறைந்தால் செடிவளர்ச்சி பாதிக்கப்படும்.
நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் (NPK), கால்சியம் மற்றும் மெக்னீசியம் இவை ஐந்தும் பேரூட்ட சத்துக்களாகும் (Macro nutrients).
போரான், துத்தநாகம், மேக்னீஸ், இரும்பு, தாமிரம், மாலிப்டினம், குளோரின் போன்றவை நுண்ஊட்ட சத்துக்களாகும் (Micro nutrients).
இவற்றில் குறைபாடு ஏற்பட்டால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும், இவற்றின் முக்கியத்துவம் மற்றும் இவற்றை சரிசெய்யும் வழிகளையும் அடுத்து காணலாம்.
இயற்கை முறையில் மண்ணையும் மண்ணிலேற்படும் பாதிப்புகளையும் சரி செய்துவிட்டால் உணவும், ஆரோக்கியமும் மேம்படும். உண்மையான ஆர்கானிக் காய்கள் குறைந்த விலையில் அனைத்து தர மக்களுக்கும் சாத்தியமாகும்.