லெட்சக் கொட்டை கீரை – நம் கீரை அறிவோம்

Pisonia grandis; நச்சுக்கொட்டைக் கீரை, லச்ச கொட்டை கீரை

நஞ்சு கொண்டான் கீரை, நச்சுக்கொட்டைக் கீரை, லச்ச கொட்டை கீரை, நஞ்சுண்டன் கீரை, சண்டிக்கீரை என பல பெயர்களில் அழைக்கப்படும் கீரை தான் இந்த நச்சுக்கொட்டைக் கீரை. சாதாரணமாக நகரங்களில் வளர்க்கப்படும் கீரை தான் இது. பொதுவாக கிராமங்களில் வீடுகளில் ஆங்காங்கே வளர்ப்பதுண்டு, ஆனால் நகரங்களில் எங்கு திரும்பினாலும் பார்க்கக்கூடிய ஒரு கீரை என்றால் அது இந்த லெட்சக் கொட்டை கீரை.

ஆனால் பலருக்கும் இது கீரை என்றே தெரியாது. பச்சை பசேல் என்று இருக்கும் இந்த கீரையை அழகுக்காக அனைத்து இடங்களிலும், அலுவலகங்களிலும், சாலையின் நடுவிலும் வளர்ப்பதுண்டு.

பெரிய பெரிய இலைகளைக் கொண்ட இந்த கீரை மர வகையை சேர்ந்தது. இலைக்காகவே இதனை வளர்ப்பதுண்டு. இதன் குச்சிகள், கட்டைகளை வைத்தே எளிதாக வளர்க்கலாம்.

உடலில் இருக்கும் நச்சுக்களை, கெட்ட நீரை வெளியேற்றும் கீரை என்பதால் நச்சு கெட்ட கீரை என இதற்கு பெயர்வந்தது. நச்சு கெட்ட என்பதே வழக்கி பலவகையாக திரிந்து நஞ்சு கொண்டான் கீரை, நச்சுக்கொட்டைக் கீரை, லச்ச கொட்டை கீரை, நஞ்சுண்டன் கீரை, சண்டிக்கீரை என பெயர்பெற்றது. பொதுவாக தென் தமிழகத்தில் இதனை சண்டி கீரை என அழைப்பதுண்டு. உடலில் இருக்கும் நச்க்களை சண்டைப்போட்டு சண்டித்தனமாக வேலைசெய்யும் கீரை என்பதால் என்னவோ இதற்கு இந்த பெயர் வந்திருக்கலாம். வைட்டமின் சத்துக்கள், தாது சத்துக்கள் நிறைந்த கீரை.

கெட்ட நீரையும், தேவையில்லாத வாயுக்களையும் உடலை விட்டு செம்மையாக நீக்கும் கீரை இந்த லச்ச கொட்டை கீரை. மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணத்தை அளிக்கும் கீரை. வாத நோய் போக்கும் மருந்து என கூட இதனை கூறலாம். வாத நோய்க்கு (Arthritis/ Rheumatism) மிக சிறந்த மருந்து. ஆரம்ப நிலையில் இருக்கும் வாத நோய்க்கு அவ்வப்பொழுது இதனை கூட்டு செய்து உண்டுவர வாதம் ஓடியே போய்விடும். உடலிலும், மூட்டுகளிலும் இரத்த ஓட்டத்தை சீராக்கும் தன்மையும் இதற்கு உண்டு. வாதத்தால் வரும் வீக்கங்களை விரட்டக் கூடியது.

உடலில் இடுப்புவலி, முதுகு வலிகளுக்கும் நல்ல நிவாரணத்தை அளிக்கும் கீரை. கல்லீரல், கணையம், ஜீரண உறுப்புகள், இருதயத்திற்கு பலத்தை அளிக்கும். இரத்த சோகையை போக்கும். நரம்புகளுக்கு பலத்தை அளிக்கும். பூஞ்சானத்தால் வரும் பதிப்புகளை நீக்கும்.

நஞ்சு கொண்டான் கீரையை நடு நரம்புகளை நீக்கி சிறிதாக நறுக்கு பாசிப்பருப்பு சேர்த்து கூட்டாகவும், துவரம்பருப்பு சேர்த்து குழம்பாகவும் செய்து உண்ணலாம். இதனை நன்கு வதக்கி துவையலாகவும் செய்து உண்ணலாம்.

அதிக சத்துக்களும் வீரியமும் கொண்ட இந்த கீரையை மாதம் இருமுறை அல்லது வாரம் ஒருமுறை என்ற விகிதத்தில் மட்டுமே எடுத்துக்கொண்டால் போதும். அதுவும் ஒரு நபருக்கு ஐந்தாறு பெரிய இலைகள் மட்டுமே போதுமானது.

(37 votes)