பீநாறி மரம் / பூதகரப்பான் மரம் – நம் மூலிகை அறிவோம்

Sterculia foetida; Poon Tree; பீநாறி மரம்

தமிழகத்தில் பரவலாக பார்க்கப்படும் நூறு அடிக்கு மேல் வளரக் கூடிய மென்மையான பெரு மரம் பீநாறி மரம். பூதகரப்பான் மரம், பீநாத்தி, பெருமரம், காட்டுப் பாதாம் மரம், பீநாற்ற மரம் என பல பெயர்கள் இந்த மரத்திற்கு உண்டு.

இந்த மரத்தின் இலைகள் தனி இலைகளாக மாற்றிலை அடுக்கத்தில் அமைந்திருக்கும். இலைப்பரப்பில் ரோமங்கள் போன்று காணப்படும். இலைகளை அல்லது கிளைகளை ஒடித்தால் வழுவழுப்பான ஒரு திரவம் வெளிப்படும். மலர்கள் இலைக் கோணத்தில் காணப்படும். பீநாறி மரத்தில் வெடி கனி உள்ளது.

கைப்பு சுவையைக் கொண்ட பீநாற்ற மரத்தின் இலை, விதை, பூ, பட்டை ஆகியவை பயன்படும் பகுதிகள். வியர்வையைப் பெருக்கும் தன்மையும், சிறந்த மலமிளக்கியாகவும், சிறுநீரை பெருக்கும் இயல்பும் கொண்டது இந்த பீநாறி. மேலும் மலச்சிக்கல், சொறி, சிரங்கு, சிறுநீர்க்கட்டு, ஜூரம், பேதி, வாத நோய்கள், ரத்த சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த பலனை அளிக்கும். உடலுக்கு ஊட்டத்தை அளிக்கும். இதன் கனியில் மருந்தாகப் பயன்படும் கொழுப்பு எண்ணெய் உள்ளது.

செடிகளை தாக்கும் பூச்சிகளை விரட்ட இந்த பீநாறி இலைகள் பயன்படும். இதனைக் கொண்டு தயாரிக்கப்படும் பூச்சி விரட்டியைத் தெளிப்பதால் மண் வளமும் அதிகரிக்கும்.

பீநாறி எண்ணெய்

உடலில் ஏற்படும் தொந்தரவுகளில் அதிக எரிச்சலை அளிப்பது தோலில் ஏற்படும் பதிப்புகள். அவற்றிற்கு சிறந்த பலனை பீநாறி எண்ணெய் அளிக்கும். இந்த பீநாறி மரத்திலிருந்து கிடைக்கும் எண்ணெயை சொறி, சிரங்குகள் உள்ள இடங்களில் பூசி வர விரைவில் மறையும்.

பீநாறி இலை, பட்டை

பீநாறி மர இலை, பட்டை ஆகியவற்றைக் கொண்டு பக்குவமாக மருந்து தயாரித்து எடுக்க அது வியர்வையை ஏற்படுத்தி ஜூரத்தைத் தணிக்கும். அதேப்போல் இது சிறுநீரைப் பெருக்குவதோடு, மலச்சிக்கல், பேதி, வாத நோய்கள், ரத்த சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த பலனை அளிக்கும்.

(9 votes)