Phyla Nodiflora; பொடுதலை கீரை
தமிழகத்தில் பரவலாக காணப்படும் ஒரு வகை பூண்டுச் செடி தான் இந்த பொடுதலை. சாதாரணமாக காணப்படும் இது ஒரு மிகச் சிறந்த மூலிகை செடியாகும். இதன் இலைகள் பற்களுடனான அமைப்பைக் கொண்டிருக்கும். மிக சிறிய இதன் பூக்கள் வெண்ணிற பூக்கள். தரையோடு படரும் ஒரு சிறு செடியினம். பொடுதலை மிகசிறந்த கீரை வகைகளில் ஒன்று. பொதுவாக பொடுகை அகற்ற கிராமப்புறங்களில் பயன்படும் கீரை.
உள்மூலம், அக்கிப்புண், வயிற்று புண், குடல் புண், ஒற்றை தலைவலி, தலை நோய், வெள்ளை, வெட்டை, மண்டையிடி, இருமல், சீதக்கழிச்சல், கபால வாய்வு, பெருங்கழிச்சல், தலைப் பொடுகு, நெறிக்கட்டு, அஜீரண பேதி, குழந்தைகளுக்கு உண்டாகக்கூடிய மாந்தம், இரத்த வெள்ளை, மேகரணம், புழு வெட்டு, மயிர் உதிர்தல் முதலியன நீக்கும் மிகவும் பயனுள்ள மூலிகை பொடுதலை.
இந்த பொடுதலையை சாறு எடுத்து அதனோடு சவுரி இலைச்சாறு, பால், நல்லெண்ணெய் இவற்றை கலந்து தேவையான அளவு இந்த கலவையினை எடுத்து நன்குக் காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் ஒற்றை தலைவலி, கபால வாய்வு, மண்டையிடி முதலிய வியாதிகள் அறவே நீங்கிவிடும்.
இந்த இலையை எடுத்துக் கொண்டு சீரகம் சேர்த்து நன்கு அரைத்து சாப்பிட்டு வந்தால் வெள்ளை வெட்டை நோய் தீர்ந்து விடும்.
இதன் இலைகளை பொரியல் செய்து அல்லது கடைந்து சாப்பிட்டு வர நீரிழிவு நோய், தலைநோய், வாத நோய், இருமல், வயிற்று வலி, உடல் உஷ்ணம், விரை வீக்கம் முதலியன நீங்கும். இந்த இலையுடன் மோர் கலந்து பருக உடல் உஷ்ணம் நீங்கும்.
இதன் இலையை நன்கு அரைத்து சாறெடுத்து நல்லெண்ணெய் கலந்து எடுத்து காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் சாப்பிட்டு வர சகல மேக நோய்களும் மறைந்து விடும். இதன் இலையுடன் மிளகு சேர்த்து அரைத்துக் கொண்டு வர குடல் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும்.