பூச்சிக்கொல்லிகள் – நன்மை / தீமைகள்

நன்மை செய்யும் பூச்சிகள் தீமை செய்யும் பூச்சிகள் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டோம். தெரிந்துகொண்ட இவற்றை வைத்து சற்று சிந்தித்துப் பார்ப்போம். பொதுவாக, பூச்சிக்கொல்லிகள் விவசாயத்தில் பெரும் பங்கு வகிப்பவை. இந்த பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் பொழுது என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

பூச்சிக்கொல்லிகள்… அதாவது உலகிலேயே பெரிய இனமான பூச்சிகளை கொல்லகூடிய கொடிய விஷத்தைக் கொண்ட ரசாயன கலவைகள். பயிர்களின் மேல் தெளிக்கபடும் இந்த பூச்சிக்கொல்லிகளால் பூச்சிகள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அந்த பயிர் தானியங்களை உண்ணக்கூடிய மனிதர்களுக்கும், அந்த பயிர்களை உண்ணக்கூடிய மற்ற விலங்குகளுக்கும் பெரிய பாதிப்பு ஏற்படுத்துகிறது. உடல் உபாதைகள், உடல்நலக் கோளாறு, உறுப்பு கோளாறு, மனநிலை மாற்றம், உடல் நிலை மாற்றம், உயிர்க்கொல்லி நோய் என பல வகைகளில் இந்த பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்ட பயிர்களை உண்பதால் மனிதர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்திய செடிகளில் இருந்து கிடைக்கக்கூடிய பழங்கள், காய்கறிகள், தானியங்களை உண்பதால் மனிதர்களுக்கு பெரிய அளவில் நரம்பியல் கோளாறுகள், ஜீரண மண்டலக் கோளாறுகள், நிணநீர் ஓட்டம் கோளாறுகள் போன்றவை ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் குழந்தையின்மை பிரச்சனையும் தலைவிரித்தாடுகிறது.

சரி, இந்த பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால் ஏதேனும் நன்மை இருக்கிறதா என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. இந்த பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால் 100% தீமை மட்டுமே உள்ளது. பொதுவாக பூச்சிக்கொல்லிகளை செடிகளுக்கு மேல் தெளிக்கிறோம். இவ்வாறு தெளிப்பதால் செடிகளுக்கு மேற்புறமாக இருக்கக்கூடிய நன்மை செய்யும் பூச்சிகள் முதலில் அழிந்துவிடுகிறது.

தீமை செய்யும் பூச்சிகள் தங்களைத் தற்காத்துக் கொண்டு செடிகளுக்குள் இன்னும் பாதுகாப்பாக நுழைந்து கொள்கிறது. இவற்றால் செடிகள் அழிந்து போவது மட்டுமில்லாமல் தரமான உணவையும் தருவதற்கு தகுதியற்றதாக செடிகள் போய்விடுகிறது.

அடுத்தது, தெளிக்கப்படும் இந்த பூச்சிக்கொல்லிகள் நம் மண்ணில் விழுவதால் மண் மலடாகிறது, மண்ணின் வளம் குறைகிறது. இவை ஆவியாகி காற்றில் கலப்பதால் காற்று மாசு படுவதோடு காற்றில் ஏற்படும் வேதியல் மாற்றங்கள் அந்த சுற்றுப்புறத்தில் ஒருவகையான வெப்பத்தை அதிகரிக்கிறது. இதனால் மழை குறைகிறது, வெப்பம் அதிகரிக்கிறது. மண்ணில் விழும் இந்த பூச்சிக்கொல்லிகள் நீரோடு கலப்பதால் நீர்வாழ் உயிரினங்கள் அழிவதும், சுற்றுச்சூழலில் இருக்கக் கூடிய நீர் மாசு அடைகிறது, மேலும் நிலத்தடி நீர் மாசடைகிறது.

இவற்றை பருகுவதால் மேலும் பல வகையான உடல் உபாதைகள் ஏற்படுகிறது. அங்கு வாழும் விலங்குகள் பறவைகள் போன்றவை அழியும் நிலைக்கு தள்ளப்படுகிறது. இவற்றால் உடல் வெப்பம் (உடல் உஷ்ணம்), உலக வெப்பமயமாதல் அதிகரிக்கிறது. பூச்சிகள் உணவு சங்கிலிகளில் பெரும்பங்கை வகிக்கிறது என்று பார்த்தோம். அந்தப் பூச்சிகளை அளிப்பதால் உணவுச்சங்கிலி அறுபடுகிறது. உணவுச் சங்கிலி அறுபடுகிறது என்றால் உயிரினங்கள் வாழ தகுதியற்ற நிலைக்கு உலகம் போய்க்கொண்டிருக்கிறது என்று தெரிந்துக் கொள்ளலாம்.

மேலும் பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதால் நன்மை செய்யும் பூச்சிகள் பெரும்பாலும் அழிகிறது. மேல்புறமாக இருக்கக்கூடியது, அதாவதும் இரையான மற்ற பூச்சிகளை வேட்டையாக மேல்புறமாக தோட்டத்தில் இருப்பவை இவை என்று வெஜிடேரியன் / நான்வெஜிடேரியன் பூச்சிகள் பகுதியில் பார்த்தோம். மேலும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால் தீமை செய்யும் பூச்சிகள் பன்மடங்கு பெருகுவதோடு தங்களின் நோய் எதிர்ப்புத் திறனையும் வளர்த்துக்கொள்கிறது.

அதோடு தீமை செய்யும் பூச்சிகள் சுகந்திரமாக தங்களின் இறக்கைகளை விரித்து அனைத்து செடிகளையும் நாசம் செய்கிறது. இலைதழைகளை மட்டுமல்லாது செடிகளில் இருக்கும் சாறுகளையும் தண்டின் உட்புறம் சென்று உறிஞ்சுபவை என்றும்  பார்தோம்.

பூச்சிக்கொல்லிகளால் இந்த பூச்சிகள் அழிவதற்கு முன் அவற்றிலிருந்து கிடைக்கக்கூடிய உணவை உட்கொள்ளும் நாம் அழிவதே வேதனைக்குரியது. இலையை சுருட்டிக்கொண்டோ அல்லது தண்டை துளைத்துக்கொண்டு பாதுகாப்பாக இருக்கிறது தீமை செய்யும் பூச்சிகள்.

இயற்கை முறையில் தயாரித்து செடிகளின் மேல் அடிக்கப்படும் பூச்சி விரட்டிகளால் செடிகளின் மேற்பரப்பில் செடிகளை சுற்றியிருக்கும் நன்மை செய்யும் பூச்சிகளுக்கு எந்த பாதிப்பையும் அது ஏற்படுவதில்லை.. நன்மை செய்யும் பூச்சிகள் செடிகளை நம்பி இல்லை அவற்றின் இரை செடிகள் இல்லை.. ஆனால் இயற்கை பூச்சி விரட்டிகளை செடிகளின் மேல் தெளிப்பதால் தீமை செய்யும் பூச்சிகள் அந்த சுற்றுப்புறத்தில் ஏற்படும், துர்நாற்றம், கசப்பு சுவை, மேலும் வலுக்கும் தன்மையால் அந்த இடத்தை விட்டே ஓடிவிடுகிறது, அல்லது அதையும் மீறி வந்தாலும் நன்மை செய்யும் பூச்சிகளால் விழுங்கப்படுகிறது.. இந்த பூச்சி விரட்டி தீமை செய்யும் பூச்சிகளுக்கு மலட்டுத்தன்மையையும், மரபியல் மாற்றங்களையும் ஏற்படுத்தும். மேலும் இனப்பெருக்கத்தை குறைக்கிறது. பூச்சி விரட்டிகளால் நமது செடிகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை, செடிகளும் நம் நண்பனான நன்மை செய்யும் பூச்சிகளின் காவலில் செழிப்பாக வளர்கிறது.

(8 votes)