பூச்சிகளை எளிமையாக கட்டுப்படுத்தலாம்

இயற்கை முறையில் பூச்சி மேலாண்மை

வீட்டு தோட்டம் என்றதும் நிறைய பேருக்கு இன்றும் பெரும் பிரச்சனையாக இருக்கக் கூடியது பூச்சிகளின் தொந்தரவுகள். தோட்டத்துக்கு மட்டுமல்ல இந்த உலகிற்கே பெரும்மச்சுறுத்தலாக உள்ளது இந்த பூச்சிகளின் தொந்தரவு என்றால் அது மிகையாகாது. 

உண்மையில் இந்த நவீன காலத்திலும் பெரிய பெரிய தொழில்நுட்பங்கள் சாத்தியப்பட்ட இந்த காலத்திலும் ஒரு சின்னஞ்சிறு  உயிரினமான கொசுவை கூட அழிக்க முடியவில்லை என்பது தான் உண்மை. பூச்சிகளும் இந்த சின்ன உயிரினத்தின் கூட்டமாகும். உயிரினம்  சின்னதாக இருந்தாலும் இவற்றின் கூட்டம் பெரியது. பூச்சிகளை உண்மையில் ஒருபோதும் அழிக்க முடியாது என்பது தான் உண்மை. கொசுவை ஒழிக்க பலபல நவீன யுத்திகள் கையாளப்பட்டாலும் உண்மையில் கொசுவை ஒழிக்க முடியவில்லை, ஒழிக்கவும்  முடியாது என்பதை ஓரளவு நாம் இன்று புரிந்து கொண்டு இருப்போம். 

அதேதான் இங்கும்… செடி வளர்ச்சியிலும் பூச்சிகளை ஒருபோதும் அழிக்கமுடியாது. பூச்சிகளை கட்டுப்படுத்தவே முடியும். தொன்றுதொட்டு பல ஆண்டுகளாக நமது விவசாயிகள் இந்த முறையையே கையாண்டனர். பூச்சிகளை கட்டுப்படுத்தி கட்டுக்குள் வைத்திருந்தனர். இதனால் பயிர் வளர்ச்சி செழுமையாக இருந்தது. நாமும் அதை பின்பற்றி பூச்சிகளை நமது தோட்டத்தில் கட்டுக்குள் வைத்திருந்தால் எந்த கவலையும் இல்லாமல் ஆரோக்கியமான காய்களையும்,  சுவையான உணவையும் பெற முடியும். இதை அடைய சில வழிமுறைகளை இனி பார்ப்போம்.

பூச்சிகளை கட்டுப்படுத்த நமது தோட்டத்தில் சில நண்பர்களையும், சில எதிரிகளையும் வைத்திருப்பது அவசியமாகும், அதோடு சில வகையான
பூச்சிகளை ஈர்க்கும் செடிகள்
பூச்சிகளுக்கு பிடிக்காத செடிகள்
பூச்சிகளை உண்ணக்கூடிய சில பூச்சிகள்

என  இவற்றையும் கண்டிப்பாக நமது தோட்டத்தில் நாம் வைத்திருக்க வேண்டும்.

பூச்சிகளை ஈர்க்கும் செடிகள்
பூச்சிகளை ஈர்க்கக்கூடிய சில வகையான மஞ்சள் நிற பூக்கள் பூக்கும் செடிகள் பூச்சிகளின் நண்பர்கள் ஆகும். இந்த வகையான செடிகளை நமது தோட்டத்தில் ஆங்காங்கே வைக்க பூச்சிகள் இந்த செடிகளின் மீது ஈர்க்கப்படும் பொழுது மற்ற செடிகளுக்கு சேதம் ஏற்படுத்தாது. இதனால் பெருமளவு பூச்சிகளின் தாக்கத்தை  கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம் நமது காய், கீரை செடிகளை பூச்சிகள்  தாக்குவதிலிருந்து பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியும். 

பூச்சிகளை உண்ணக்கூடிய சில பூச்சிகள்
அதேபோல் பூச்சிகளுக்கு பிடிக்காத பூச்சிகளை உண்ணக்கூடிய சில வகையான பூச்சிகளையும் நமது தோட்டத்தில் வளர்ப்பது அல்லது ஈர்ப்பது அவசியமாகும். அதாவது கரும்பள்ளிவண்டு, குளவிகள், ஒட்டுண்ணிகள், கிரிப்டோலிமஸ்  பொறிவண்டு, பூச்சிகளை உண்ணும் குருவி, பறவைகள் என இந்த வகையான பூச்சிகள் அவ்வப்பொழுது நமது தோட்டத்திற்கு வந்து போக இருந்தால் பெரிய அளவில் செடிகளை தின்னும் பூச்சிகளை கட்டுப்படுத்த முடியும்.

பூச்சிகளுக்கு பிடிக்காத செடிகள்
அடுத்ததாக பூச்சிகளுக்கு பிடிக்காத சில வகை செடிகளை நமது தோட்டத்தில் வளர்க்க அந்த வாசத்திற்கு பூச்சிகள் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். அவை வேறொன்றுமில்லை சில வகையான மூலிகை செடிகள் தான். இந்த மூலிகைச் செடிகள் பூச்சிகளை மட்டும் கட்டுப்படுத்தவில்லை, நமது ஆரோக்கியத்திற்கும் அவசியமானது. சில மூலிகைகள் கண்டிப்பாக நமது தோட்டங்களில் இருக்க வேண்டிய ஒன்று. பெரிய பராமரிப்பு எதுவும் தேவை இல்லாமல் வளரக்கூடிய இந்த வகையான மூலிகைச் செடிகள் சுற்றுச்சூழலுக்கும் நமக்கும் ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தக்கூடியது. இவற்றை நமது தோட்டங்களில் வளர்ப்பதால் பூச்சிகளை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், பூச்சிவிரட்டியையும் எளிதாக தயாரித்துக் கொள்ளலாம்.. நோயையும் எளிதாக துரத்திவிடலாம்… உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பிராணசக்தியும் அதிகமாக பெறலாம். அப்படி என்னென்ன மூலிகைகள் கட்டாயம் நமது தோட்டத்தில் இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.

துளசி, திருநீற்றுப் பச்சிலை, தூதுவளை, வசம்பு, சிறுகுறிஞ்சான், பூனை மீசை, நாயுருவி, பிரண்டை, நஞ்சறுப்பான், வெட்டிவேர், கருவேப்பிலை, வல்லாரை, ஓமவல்லி, துத்தி, தும்பை, சோற்றுக்கற்றாழை, நித்தியகல்யாணி போன்ற செடிகள் நமது தோட்டங்களை அலங்கரிக்க பூச்சிகள் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். துளசி திருநீற்றுப் பச்சிலை போன்ற செடிகளின் வாசத்திற்கு பூச்சிகள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

துளசியை வளர்ப்பது மிகச் சுலபம். ஏதேனும் ஒரு சிறு செடியை எடுத்து நட்டு வைத்தாலே போதும், எளிதாக துளிர்த்து வளர தொடங்கிவிடும். பூச்சிகளை கட்டுப்படுத்த மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் நமது தோட்டத்தில் இருக்கும் இந்த துளசியின் இலையை வாயில் மெல்ல உடலில் கழிவுகள் வெளியேறுவதுடன் ரத்த ஓட்டமும் சுத்திகரிக்கப்படும்.

இளமையும் அழகும் ஆரோக்கியத்தோடு பின்னிப்பிணைந்தது. அழகும் இளமையும் இல்லாது ஆரோக்கியம் இல்லை என்றே கூறலாம். இந்த அழகை அள்ளித்தரும் திருநீற்றுப் பச்சிலை ஒவ்வொருவர் வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு மூலிகை செடி. தலைவலி, ஜலதோஷம் போன்றவற்றிற்கு மட்டுமல்லாமல் முகப்பரு, கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாக இந்த திருநீற்றுப் பச்சிலை உள்ளது. இதை நீருடன் கலந்து பருகிவர உடல் பொலிவு பெறும். சாலையோரங்கள், புதர்களில் சாதாரணமாக வளர்ந்திருக்கும் இந்த திருநீற்றுப் பச்சிலை செடியை எடுத்துவந்து நட்டு வைத்தாலே போதும் எளிதாக எந்த பெரிய பராமரிப்பும் இல்லாமல் வளரும். மாதம் ஒரு முறை மண்புழு உரம், பஞ்சகவ்யா தெளிப்பதும் அன்றாடம்  ஈரப்பதத்தை காக்க நீர் ஊற்றுவது மட்டுமே செழிப்பான திருநீற்றுப் பச்சிலை செடியை செழிப்பாக வளர்க்க போதுமானது.

இலையில் முற்களை கொண்டிருக்கும் செடி தூதுவளை செடி. குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, தலைவலி போன்றவற்றிற்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் சிறந்த மருந்தாக இந்த தூதுவளையை கூறலாம். தூதுவளை செடியின் சிறு துண்டையோ அல்லது அதன் காயில் இருந்து கிடைக்கும் விதையையோ மண்ணில் நட்டாலே போதும் தூதுவளை செடி துளிர்த்து வளர ஆரம்பிக்கும், அவ்வளவு எளிதாக வீட்டில் வளர்க்கலாம். இவ்வாறு செழித்து வளர தொடங்கிய தூதுவளை செடிக்கு பெரிதாக எந்தப் பராமரிப்பும் தேவையில்லை சின்ன தொட்டியில் வைத்தாலே போதும், அவ்வப்பொழுது நீரும் மாதம் ஒருமுறை மண்புழு உரம், பஞ்சகவ்யா மட்டுமே போதுமானது. தூதுவளை துவையல், தூதுவளை ரசம் என பல உணவுகளையும் சமைத்து உண்ணலாம். 

மேலும் பூச்சிகளை விரைவாகவும் எளிமையாகவும் அழிக்க கீழிருக்கும் ஏதேனும் ஒரு கரைசலை தெளிக்கலாம்.

பப்பாளி இலைக் கரைசல்
வசம்பு கரைசல்
துளசி இலை கரைசல்
இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல்
இயற்கை உரம் / பூச்சி விரட்டிகள்

(1 vote)

2 thoughts on “பூச்சிகளை எளிமையாக கட்டுப்படுத்தலாம்

  1. லெட்சுமணன்

    வீட்டில் நொச்சி இலை மரம் இருக்கிறது. கம்பளிப்பூச்சி தொல்லையினால் கிளைகளை வெட்டிவிட்டேன்.மறுபடி துளிர்க்கிறது.மீண்டும் சிறுசிறு கம்பளிப்பூச்சிகள்தென்படுகின்றன.அதனால்இலைகளை உபயோகிக்க யோசனையாக இருக்கிறது.என்ன செய்யலாம்?

    1. admin Post author

      பூச்சிகள் இல்லாத இலைகளை பயன்படுத்தலாம். பப்பாளி இலைக் கரைசல், வசம்பு கரைசல், துளசி இலை கரைசல் அல்லது இஞ்சி பூண்டு மிளகாய் கரைசலில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி கம்பளிப்புழுக்களை அழிக்கலாம். நன்றி

Comments are closed.