பூச்சிகளை கட்டுப்படுத்தும் சில மூலிகைகள் – 2

பூச்சிகளை எவ்வாறு எளிமையாக கட்டுப்படுத்தலாம் என்ற பதிவில் பூச்சிகளை விரட்டும் வழிகளும் அதற்கான சில மூலிகைகளையும் (முதல் பகுதி) பார்த்தோம். இவை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல நமது சூழல், நமது தட்பவெப்பநிலை, நமது மனநிலை, உடலியக்கம்  ஆகியவற்றை மேம்படுத்துவதுடன் பூச்சியையும் நமது தோட்டத்திலிருந்து விரட்டவும் உதவுகிறது. அந்த வரிசையில் மேலும் சில மூலிகைகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.

தூதுவளை

தூதுவளை பொதுவாகவே சளி, இருமலுக்கு நல்ல மருந்து என்று அனைவரும் அறிந்திருந்தாலும் அதனையும் தாண்டி மூட்டுகளுக்கும் உடலுக்கும் வலிமையைத் தரக்கூடியது. உடலின் செரிமான ஆற்றலை அதிகரிப்பதுடன் நோய் எதிர்ப்புத் திறனையும் அதிகரிக்க செய்யும் கீரை இந்த தூதுவளைக்கீரை. வாரம் ஒரு முறை இந்த தூதுவளைக் கீரையைப் பயன்படுத்தலாம். தூதுவளை ரசம், தூதுவளை துவையல், தூதுவளைபொடி என ஏதேனும் ஒன்றை தயாரித்து உண்பது சிறந்தது. இரும்புச்சத்து அதிகம் கொண்ட கீரை இந்த தூதுவளை கீரை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அவசியமான கீரை இந்த தூதுவளை. பொதுவாக சாலையோரங்களில் அதிகமாக காணப்படும் தூதுவளையின் சிறு பாகத்தினை மண்ணில் நட்டுவைத்தாலே போதும், ஒருவாரத்தில் புதுவேர் விட்டு வளரத்தொடங்கும். துளையிட்ட தொட்டியில் செழிப்பான உரமூட்டிய மண் கலவையை நிரப்பி அதனில் நீர் தெளித்து ஒரு அங்குல அளவிற்கு துளையிட்டு அதனில் தூதுவளை குச்சியை நட்டுவைக்கவேண்டும். பின் சிறிது நீர் தெளிக்கவேண்டும். ஒவ்வொருநாளும் மண்ணின் ஈரத்தின் அளவைப்பொறுத்து நீரூற்றவேண்டும். பயன்பாட்டிற்கு ஏற்ப மாதம் ஒருமுறை மண்புழு உரம் கொடுக்க தூதுவளை செழிப்பாக வளரும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய ஒரு மூலிகை தூதுவளை.

முடக்கத்தான்

வாரம் ஒரு முறை முடக்கத்தான் தோசை, இட்லி சாப்பிட்டு வர மூட்டுவலி முடக்குவாதம் இருந்த இடம் தெரியாமல் போவதும் வராமல் காப்பதும் எளிமையாக்கும் சிறந்த மூலிகை முடக்கறுத்தான் மூலிகை. இதனை கீரையென்றுகூட சொல்லும் அளவிற்கு மருத்துவகுணங்கள் உள்ளது.  முடக்கத்தான் கீரை வேர் முதல் காய், இலை என அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட கீரை. மூட்டுகள் எனும் மூட்டினை முடக்கும் நோயை அறுக்கும் அதாவது விரட்டும் கீரை என்பதால் முடக்கறுத்தான் என்ற பெயரை இந்த கீரை பெற்றது. மேலும் முடக்கத்தான் கீரையைக்கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெய் உடல் பிடிப்பு உடல் வலி ஆகியவற்றை சரி செய்யக்கூடியது. முப்பதுவயதை தாண்டிய அனைவரின் வீட்டிலும் இருக்கவேண்டிய கீரை இந்த முடக்கறுத்தான் கீரை. முடக்கறுத்தான் காய்களில் மிளகைவிட சிறிதான விதைகள் இருக்கும், இந்த முற்றிய விதைகள் அல்லது முடக்கறுத்தான் செடியையும் மண்ணில் நட்டுவைக்க முடக்கறுத்தான் கொடியை எளிதாக வளர்க்கலாம். சாலையோரங்களில் படர்ந்து கிடைக்கும் இந்த கொடிக்கு பெரிதாக எந்த பராமரிப்பும் தேவையில்லை நீர், சிறிது மக்கு உரம் மட்டுமே போதும். 

சோற்றுக்கற்றாழை!

உடல் குளிர்ச்சி, உடல் அழகு, முகப்பொலிவு, முடிவளர்ச்சி என அனைத்திலும் சோற்றுக்கற்றாழையின் பங்கு பெரும்பங்கு. சோற்றுக்கற்றாழை இல்லாத  அழகு சாதன பொருட்களே கிடையாது என்ற அளவிற்கு சோற்றுக்கற்றாழை ஒரு சிறந்த அழகு மூலிகை. குமரி என்று மற்றொரு பெயரைக்கொண்டுள்ள இந்த மூலிகையைப் பயன்படுத்துபவர்கள் என்றும் இளமையாக இருப்பார்கள். சோற்றுக் கற்றாழையின் வழவழப்புத்தன்மை பூச்சியை விரட்ட மட்டுமல்ல அழகுக்கு அழகும் சேர்க்கும். உடலில் ஏற்படும் உஷ்ணத்தை குறைக்க உதவும் சோற்றுக்கற்றாழை ஒவ்வொருவர் வீட்டின் வாசலிலும் கட்டாயம் இருக்க வேண்டிய செடி. பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சோற்றுக்கற்றாழை ஜூஸ் அருந்துவது வெயில்காலத்தில் கிடைத்த வரப்பிரசாதம். சோற்றுக்கற்றாழையை வளர்ப்பது சுலபம், அதிக நீர்கூடதேவையில்லை. வாரம் ஒருமுறை நீரூற்றினாலே போதும். சோற்றுக்கற்றாழை தாய்ச்செடிக்கு அருகில் பக்க கன்றுகள் இருக்கும் அவற்றை பிரித்து வேறொரு தொட்டியில் நட்டுவைத்தாலே போதும் சோற்றுக்கற்றாழை துளிர்த்து வளரும்.

நித்யகல்யாணி

உடல் அசதி, நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் மூலிகை நித்யகல்யாணி. வேர், தண்டு, இலை, பூ என அனைத்தும் மருத்துவகுணம் நிறைந்தது. சமீபத்திய ஆய்வில் இந்த நித்தியகல்யாணி செடி மற்றும் பூவிற்கு புற்றுநோயை விரட்டக் கூடிய தன்மை உள்ளது என்று வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக சாலையோரங்களிலும், வீடுகளில் அழகுக்காகவும் வளர்க்கப்படும் இந்த நித்தியகல்யாணி பூச்சிகளை ஈர்க்கும் செடியுமாகும். பூச்சி விரட்டி தயாரிக்கவும் பயன்படுத்தக்கூடியது. எளிதாக சாலைகளில் இருக்கும்  செடியை எடுத்துவந்து நட்டுவைத்தாலே போதும், செழித்து வளரக்கூடியது. 

மேலும் வீட்டில் இருக்கவேண்டிய மூலிகைகளாக வெட்டிவேர், முசுமுசுக்கை, நொச்சி, தழுதாழை, ஊமத்தை, பொடுதலை, நீர்பிரம்மி, ரணகள்ளி, பூனைமீசை, வசம்பு, சித்தரத்தை, நஞ்சறுப்பான், பப்பாளி, சீத்தா உள்ளது. இவற்றையும் எளிதாக வளர்க்கலாம். அடுத்த இதழில் இந்த மூலிகைகளை வைத்து பூச்சிவிரட்டி தயாரிப்பு முறைகளை பார்க்கலாம்.

(4 votes)