பெருங்காயம் – நம் மூலிகை அறிவோம்

Ferula Asafoetida; Umbelliferae; Hing; பெருங்காயம்

தமிழக உணவுகளில் பலவற்றில் அன்றாடம் பயன்படும் ஒரு பொருள் பெருங்காயம். இது\பிசின் வகையைச் சேர்ந்தது. உணவின் மணம், சுவை, தன்மையைக் கூட்டவும் உணவினைப் பதப்படுத்தவும் பயன்படும் சிறந்த பொருள். இது கைப்பு கரகரப்பு சுவை கொண்டது. பெருங்காயத்தில் நறுமண எண்ணெய், கந்தகச் சத்து மற்றும் சில அமிலம் உள்ளன.

காயம், இங்கு. இராமடம்,அத்தியா கிரகம், இரணம், வல்லீகம், பூத நாசம், கந்தி, சந்து நாசம் என பல பெயர்கள் இதற்கு உண்டு. பெருங்கயத்தை பச்சையாக உபயோகித்தால் வாந்தியையும், தலை சுற்றும். பித்த நோய்களையும் ஏற்படுத்தும். எனவே பொரித்து உபயோகிக்க வேண்டும். காமம் பெருக்கும் ஆற்றலும், குது உண்டாக்கும் பண்புகளும் கொண்டது இந்த பெருங்காயம்.

இந்தியாவின் அருகிலிருக்கும் சில நாடுகளில் வளரும் சிறு செடி வகையைச் சேர்ந்த பெருங்காய செடி. மிகப்பெரிய வேர்களைக் கொண்டு உயரமாக வளரும் தாவரம். இதன் இலைகள் இரு வகையானவை. கீழ்ப் பகுதியிலிருக்கும் இலைகள் ஒற்றையாக நீள்வட்ட வடிவத்தில் இருக்கும், மேற்பகுதி இலைகள் அதிகமான பிரிவுகளுடன் காணப்படும்.

இதன் இளம் தளிர் இலைகள் அடர்த்தியான மயிரிழைகளுடன் காணப்படும். மஞ்சள் நிற பூக்கள் அம்பல் மஞ்சரியில் காணப்படும். கனிகளையும் கொண்டது. இந்த செடியின் தண்டும், வேரும் சேருமிடத்தில் வெட்டினால் பால் மஞ்சள் நிற பிசின் கிடைக்கும். இதுதான் பெருங்காயம். இந்த பிசினே இந்த செடியின் பயன்படும் பகுதியும், மருத்துவகுணமும் கொண்டது, உணவிலும் பயன்படுத்தக் கூடியது.

உடல்கடுப்பு, மந்தம், ஏப்பம், வாதம், சூதக வாயு, மலச்சிக்கல், சிறுநீர்க் கட்டு, பல்நோய்கள், பாம்பு, தேன் விஷங்கள், குன்மம். பெருவயிறு, சூதகச் சூலை, இரத்தத்திலுள்ள நுண்கிருமி, கபத்தினால் ஏற்படும் வலிகள், கோழை போன்ற நோய்களுக்கு மிக சிறந்த மருந்து பெருங்காயம்.

பூச்சிகள் வெளியேற

சிறிதளவு பெருங்காயத்தை நீரில் ஊறவைத்து உள்ளுக்குப் பருக அல்லது எனிமா மூலம் ஆசன வாயில் செலுத்துவதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வயிற்றில் தோன்றும் பூச்சிகள் வெளியேறும். பெருங்காயத்தை நீர்விட்டரைத்துப் பூச தேள்கடி, சருமத்தில் வரும் படைகள் மறையும்.

கருப்பை கசடுகள் நீங்க

பெருங்காயத்துடன் வெள்ளைப்பூண்டு, பனைவெல்லம் சேர்த்து காலை வேளையில் உண்டுவர பெண்களுக்கு பிரசவத்திற்குப் பின் உள்ள அழுக்கு, கருப்பை கசடுகள் நீங்கும். பெருங்கயத்தை பனைவெல்லம் சேர்த்து உண்ண இரத்தக்கட்டு, வலிப்பு, வயிற்று வலி, அஜீரணம், ஜன்னி, தொண்டைக் கம்மல், கீல் வாதம், வாத நோய்கள், குடல் புழுக்கள், வெறிநாய்க்கடி, பேதி, தலை நீரேற்றம், வயிற்றுப் பொருமல் நீங்கும்.

கக்குவான் மறைய

பெருங்காயத்தை நீர்விட்டு அரைத்து குழந்தைகளின் மார்பில் பற்று போட கக்குவான் மறையும்.

ஜீரணத்தை சீராக்க

சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஓமம், கறிவேப்பிலை, இத்துப்பு இவற்றை சமபங்கு எடுத்து பொடித்து கலந்து வைத்துக் கொண்டு நாள்தோறும் கால் ஸ்பூன் அளவு உண்ண மந்தம், வயிறு உப்பிசம் போன்றவை தீரும். ஜீரணத்தையும், பசியையும் உண்டாக்கும். பெருங்காயத்துடன் மிளகு, கற்பூரம் சேர்த்து உண்ண ஒற்றை தலைவலி, பல்வலி தீரும்.

காது வலி நீங்க

பெருங்காயத்தை எண்ணையிலிட்டுக் காய்ச்சி ஒரு துளிகள் காதில் விட காது வலி நீங்கும்.

(1 vote)