Pogostemon heyneanus; Patchouli; பச்சௌலி; பாச்சோலி;
காலம்காலமாக இறைவனுக்கு சூட்டப்படும் பூமாலையில் சேர்க்கப்படும் நறுமணம் கொண்ட இலையே கதிர்ப்பச்சை. இந்த மூலிகை அடர்ந்த வனப்பகுதிகளில் அதிகமாக வளரக்கூடியது. அடர்நிறம், சாதாரண பச்சை நிறம் என வகைகளிலும் இது உண்டு.
பச்சௌலி / பாச்சோலி / கதிர்ப்பச்சை ஒரு அரிய வகை மூலிகையாகும். தற்பொழுது இது அழிந்து வரும் மூலிகைகளில் ஒன்றாகவும் உள்ளது. இன்று நறுமணம் கொண்ட கதிர்ப்பச்சைக்கு பதில் பூமாலையில் மற்ற இலைகளை பயன்படுத்துகின்றனர்.
பாச்சோலி நோய்கள்
திருநீற்றுப்பச்சை என்ற திருநீற்றுப்பச்சிலை போல் மணம் கொண்ட இலைகளைக் கொண்ட கதிர்பச்சை மூலிகை மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகையாகவும் உள்ளது. இருமல், சளி, வாதம், நுரையீரல் தொந்தரவுகள், மூச்சுக் குழாய் அழற்சி, பசியின்மை, குன்மம், வாய்வு, காசநோய், வியர்வை துர்நாற்றம், வாந்தி, தலைவலி, கட்டிகள், கல்லீரல் நோய்கள், தோல் நோய், இருதய நோய்கள், மஞ்சள் காமாலை, பித்த நோய் போன்ற தொந்தரவுகளுக்கு சிறந்த பலனை அளிக்கும்.
மனதிற்கு
கதிர்ப்பச்சை இலையின் நறுமணம் மனதிற்கு புத்துணர்வு அளிக்கக்கூடியது. மனஉளைச்சல், சோர்வு, கவலை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த இலையின் நறுமணத்தை நுகர்வதால் மனம் புத்துணர்வு பெற்று பலப்படும். இதிலிருந்து கிடைக்கும் எண்ணெய் தோல் நோய்களுக்கு சிறந்தது.
இளந்தளிர்
இந்த மூலிகையின் இளந்தளிர்களை மருந்தாகவும் பயன்படுத்தலாம். வாத நோய்களுக்கு இதன் இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரில் குளிக்க நல்ல பலன் கிடைக்கும். இலைக் கசாயம் ஆஸ்துமா, இருமலுக்கு நல்ல பலனை அளிக்கிறது. கதிர்ப்பச்சை இலைகளை நீரிலிட்டு ஒரு இரவு ஊறவைத்து பின் அதனைக் கொண்டு வாய்க் கொப்பளிக்க பற்கள், ஈறு பலப்படும், வலிகள் நீங்கும்.
உலர்ந்த இலைகள்
கதிர்ப்பச்சை இலைகளை காயவைத்தும் வைத்துக்கொண்டு, தேநீராக தயாரித்து பருக வயிற்று தொந்தரவுகள், செரிமான பிரச்சனைகள் தீரும். மேலும் உலரவைத்த இலைகளை நம் முன்னோர்கள் பட்டு துணிகளில் பூச்சி அரிக்காமல் இருக்க துணியின் மேல் பரப்பி பலகாலம் பாதுகாத்தனர்.
வேர்
இந்த கதிர்ப்பச்சையின் வேர்களையும் கசாயமாக வைத்து பல நாடுகளில் நீர்க்கோவை நோய்களுக்கு அளிக்கப்படுகிறது. வேர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் குழம்பி வாதத்திற்கு பயன்படுவதுண்டு.
எண்ணெய்
இதனைக்கொண்டு பல நாடுகளில் நறுமண எண்ணெய், நறுமண பொருட்களும் தயாரிக்கின்றனர். உணவிற்கும் இந்த எண்ணெய் பயன்படுகிறது.