பற்பாடகம் – நம் மூலிகை அறிவோம்

Mollugo Cerviana; Fever Plant; பற்பாடகம்

கிராமப்புறங்களில் பரவலாக காணப்படும் ஒரு சிறு செடியினம் பற்படாகம். மெலிதாகவும் மென்மையாகவும் கம்பி போன்ற கிளைகளைக் கொண்டு நீண்டு மெலிதாக ஊசி போன்ற இலைகளையும் கொண்டிருக்கும்.

கொத்துகொத்தாத இதன் தண்டின் நுனியில் வெள்ளை நிற பூக்கள் காணப்படும். இதன் விதைகள் சொரசொரப்பாக சிறிதாக இருக்கும். இதன் வேர்கள் தடித்தும் சிவப்பு நிறத்திலும் இருக்கும். இது கைப்பு சுவையைக் கொண்டது. பல வகைகளும் இதனில் உண்டு.

பற்படாம், பற்படகம், படாகம், சீதம் என பல பெயர்கள் இதற்கு உண்டு. அழுகலையும், வெப்பத்தையும் அகற்றக் கூடியது, வியர்வையைப் பெருக்கக் கூடியது. மேலும் தாக வேட்கை, பித்தம், கண் எரிச்சல், காய்ச்சல், பைத்தியம் போன்றவற்றிற்கும் நல்ல பலனை அளிக்கும்.

காய்ச்சல் தணிய

பற்படாக சமூலத்தை குடிநீரிட்டுக் எடுக்க காய்ச்சல் தணியும். அழுக்கு நச்சுக்கள் வெளியேறும். மேலும் இதனுடன் கண்டங்கத்திரி, விஷ்ணுகிரந்தி, ஆடாதோடை போன்ற சில மூலிகைகளையும் சேர்த்து தயாரித்து வைத்துக் கொண்டும் பருகலாம். விரைவில் நல்ல பலன் கிடைக்கும். அதேப்போல் மாம்பட்டை, வெட்டி வேர், மல்லி போன்ற சில மூலிகைகளும் சேர்த்து காய்ச்சி பருகிவர விஷக்காய்ச்சல் தீரும்.

கண் எரிச்சல், உடற்சூடு தணிய

வெப்பத்தை அகற்றும் ஆற்றல் கொண்ட பற்படாகத்தை பால் சேர்த்து அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித்துவர கண் எரிச்சல், உடற்சூடு, வியர்வை நாற்றம் நீங்கும்.
பற்படாகத்தை நீரில் ஊறவைத்து எடுக்க சிறுநீர் எரிச்சல், கண் எரிச்சல் நீங்கும். கர்ப்பப்பை அழுக்கு வெளியேறும்.

வாயு, வீக்கம் தீர

பற்படாக வேரை எண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தடவ கீல்வாயு, வீக்கம் தீரும். சமூல குடிநீரும் வீக்கங்களை தீர்க்கும் மிக சிறந்த மருந்து.

(2 votes)