குனிந்த தலை நிமிராது புஞ்சையில் விளையும் இந்த சிறு தானியம் வரகைப்போல் அதாவது சிறுதானியங்களிலேயே சற்று பெரிதாகவும் தினையைப்போல் மஞ்சள் நிறத்திலும் காணப்படும். வறண்ட பகுதிகளிலும் எளிதாக விளையக்கொடிய இந்த பனிவரகு 10000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய தானியம்.
இன்று இந்தியா, ஜப்பான், சீனா, எகிப்து, அரேபியா மற்றும் மேற்கு ஐரோப்பா போன்ற நாடுகளில் பயிரிடுவதுடன் இந்தியாவில் மத்தியப்பிரதேசம், கிழக்கு உத்திரப்பிரதேசம், பீகார், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் பயிரிடப்படுகின்றன.
குறிப்பாக தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவு பயிரிடப்படுகிறது.
புரதம் மட்டுமல்லாது, வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாது உப்புகள், துத்தநாகம் (Zinc), நார்சத்து என அனைத்தையும் சீராக கொண்டுள்ளது பேனிகம் மிலியேசியம் என்ற நம் பனிவரகு. இதில் உள்ள புரதம் கிட்டத்தட்ட 10 முக்கிய அமினோ அமிலங்களின் சேர்க்கையாக இருக்கிறது.
சத்துக்கள் – பனிவரகு
100 gm பனிவரகில்
- புரதம் – 12.5 gm
- கொழுப்பு – 1 gm
- தாதுக்கள் – 2 gm
- நார்ச்சத்து – 2.2 gm
- மாவுச் சத்து – 70.4 gm
- ஆற்றல் கலோரிகள் – 341
- கால்சியம் – 14 mg
- பாஸ்பரஸ் – 206 mg
- இரும்புச்சத்து – 1 mg
- பி-காம்ப்ளக்ஸ், தயாமின் – 0.20 mg
- ரிபோஃப்ளோவின் – 0.18 mg
- நயாசின் – 2.3 mg
- கோலின் – 748 mg
என கொண்டுள்ளது. இதில் மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், தாமிரம், மாங்கனீசு, துத்தநாகம், குரோமியம், சல்பர், குளோரைடு போன்ற பல தாதுக்கள் சிறந்த அளவில் உள்ளது.
வளரும் தன்மை
பனிக்காலத்தில் நன்கு வளரும் வரகு நம் பனிவரகு. நீர் கூடத்தேவையில்லை, பனியை அறுவடை செய்து வளரும். சிறுதானியங்களிலேயே மிகவும் குறைந்த வயதுடையது பனிவரகு. அதிக புரதத்தையும் தேவையான மற்ற சத்துக்களையும் கொண்டுள்ளது.
பனிவரகு சிறப்பு
இதில் உள்ள லெஸிதின் என்னும் கொழுப்பு, சருமத்தில் சீக்கிரம் சுருக்கம் விழாமலும் பளபளப்புடனும் இருக்க உதவுவதோடு நரை-மூப்பை தள்ளிப் போடும் குணம் கொண்டது. கூந்தல் அழகையும் முடி உதிர்வையும் தடுக்கும்.
வளரும் குழந்தைகளின் சீரான எலும்பு வளர்ச்சிக்கும், இதய, நீரிழிவு நோய்க்கும் சிறந்த தானியம் பனிவரகு. உடல் எடையைக்குறைக்க வல்லது மேலும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக் கூடியது.
எவ்வாறு இந்த பனிவரகை உணவில் சேர்க்கலாம்? அன்றாடம் உண்ணும் அரிசிக்கு மாற்றாக இந்த பனிவரகை பயன்படுத்தலாம். இட்லி, தோசை, உப்புமா, பொங்கல் என்று விதவிதமான டிபன் வகைகளையும், முறுக்கு, அதிரசம், தட்டை என பலகாரங்களையும், சாம்பார் சாதம், தயிர் சாதம், லெமன் சாதம் என பல வகைகளில் சாதவகைகளையும் செய்து உண்ணலாம்.
பனிவரகு உணவுகள்
அன்றாடம் காலை உணவாக எளிதில் தயாரிக்கும் இந்த பனிவரகு அரிசியில் கஞ்சி மிகப் பிரமாதமாக இருக்கும். எந்த பிரத்யேக மசாலாவும் இல்லாமல் எளிதாக காலை கஞ்சி செய்து குடிப்பது முடி உதிர்வை தடுக்கும், முகப்போலிவை அதிகரிக்கும், உடலை இளைக்கவும் உதவும்.
சக்கரை நோய் உள்ளவர்கள் இதனை தொடர்ந்து உண்டு வர இந்த தொந்தரவு மறையும். அஜீரணம் உள்ளவர்கள் தொடர்ந்து பருக சீரான ஜீரணம் நடைப்பெறும். அடிக்கடி தோன்றும் வயிறு உப்புசம், தொப்பை காணாமல் போகும் .
‘உணவே மருந்து மருந்தே உணவு’ என்ற வகையில் உடலுக்கும் நம் மரபணுவிற்கும் பரிட்சயமான உணவான நம் சிறுதானிய வகையைச் சேர்ந்த பனிவரகு அனைத்து விதமான உடலுக்கு தேவையான சத்துக்களையும் கொண்டுள்ளது. குறிப்பாக மேனியப் பாதுகாக்கும் புரதத்தை உடலுக்கு தேவையான மற்றும் போதுமான அளவில் பனிவரகு அரிசி கொண்டுள்ளது.
அவ்வப்பொழுது எதாவது ஒருவகையில் நம் பாரம்பரிய சிறு தானியமான பனிவரகில் உணவு தயாரித்து உண்டு வர இலவசமாக புரதமும் கிடைக்கும், உணவும் மருந்தாகும் எந்த பின்விளைவுமின்றி.
அன்பு, மகிழ்ச்சி, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை போன்ற உணர்வுகளும் இவ்வாறான உணவுகளால் எளிதாக நம்மை சூழும். பனிவரகை அவ்வப்பொழுது உண்டுவர அழகு மட்டுமல்லாது பெற்றோரிடமிருந்து அடுத்த தலைமுறையினருக்கு பயணிக்கும் மரபணுக்கள் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.