நவீன விவசாயத்தில் பலப்பல துறைகள் உள்ளது.. மண், பூச்சி, பூஞ்சான், நோய், கால்நடை, உரம், உழவு தொழில்நுட்பம், நீர், சுற்றுசூழல் இப்படி இன்னும் நீண்ட பட்டியலைக் கொண்டுள்ளது. என்ன தான் பட்டியல் நீண்டாலும் இன்று விவசாயமும், விவசாயியும் பொய்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
நூறு ஆண்டுகளுக்கு முன் விவசாயியே அனைத்து துறைகளிலும் மேம்பட்டவனாக விளங்கினான். காலநிலையை அறிந்து பயிரிட்டான், மண்ணின் தன்மையை அறிந்து பயிரிட்டான், மண்ணரிப்பை எளிதில் சரிசெய்தான்.. பூச்சி தாக்கினாலும் சரி, மண் கெட்டாலும் சரி… எல்லாவற்றிற்கும் அவனே விஞ்ஞானியாக இருந்தான்.. விளைவும்.. இந்தியா பொன் விளையும் பூமியாகவே இருந்தது.
அன்று விவசாயம் செழித்ததற்கு துணையாக இருந்தது நமது நாட்டு ரக மாடுகளே.. பள்ளியில் படிக்கும் காலத்தில் நாமும் படித்திருப்போம் இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம், அதற்கு முதுகெலும்பாக துணை நிற்பது நமது நாட்டு மாடுகள் என்று. சமீபத்திய ஜல்லிக்கட்டு செய்திகளே நமது நாட்டு மாடுகளின் அவசியத்தினை ஓரளவு அனைவருக்கும் புரியவைத்தது.
நவீனமும் தொழில் நுட்பமும்
நவீனமும் தொழில் நுட்பமும் அளவோடு இருக்க ஆரோக்கியமே நிலைத்திருக்கும்.. அதுவே அத்துமீறும் பொழுது பெரும் ஆபத்துகளை ஏற்படுத்துகிறது. இப்படியான ஆபத்தினை தான் இன்று எதிர்கொண்டிருக்கிறோம்.
தொழில்நுட்பம் என்ற பெயரில் புதுப்புது உரங்கள், பூச்சி கொல்லிகள், களைக்கொல்லிகள், நவீன கருவிகள், டிரக்ட்டர் என்று வளம்வர, இவை எல்லாவற்றிற்கும் அஸ்திவாரமான நமது நாட்டு மாடுகள் காணாமல் போனது.. அதனுடன் மண்ணும் மலடாக, மனிதனும் மலடான நிலை உருவானது. இவற்றிற்கெல்லாம் காரணம் அடிப்படை பகுத்தறிவை தொலைத்தது தான்.
மதத்திற்குள் செல்லாமல் வாழ்வியல் அடிப்படையில் தமிழர்கள் வணங்கும் ஒரு உயிரினம் நமது நாட்டுப்பசு. வாழ்வியல் பண்டிகையான பொங்கல் திருநாளில் உணவளிக்கும் சூரியனுக்கு முதல் வணக்கத்தையும், நாட்டு மாட்டிற்கு இரண்டாவது வணக்கத்தையும் அளிக்கும் மரபு நமது மரபு. இந்த வணக்கம் நமது நாட்டு மாடுகள் மண்ணினை உழுவதற்காக மட்டும் அளிக்கும் வணக்கமல்ல.
மாடுகள் உழுவதற்கு மட்டுமா?
ஏதோ மாடுகள் உழுவதற்கு மட்டுமே என்ற எண்ணம் தான் டிராக்டர்கள், புதுப்புது உரங்கள் வந்தவுடன் நமது நாட்டு மாடுகளை ஓரம்கட்டியதற்கும் ஒதுக்கியதற்கும் காரணம். பொதுவாகவே உழவன் என்றவுடன் நாம்காணும் படங்களெல்லாம் கோமணம் கட்டிய ஒருவன் ஏரோட்டுவதைத்தானே.. அதனால் மாடுகள் உழுவதற்கு மட்டும் என்று நினைத்துவிட்டோம் இன்று மோசம்போய்விட்டோம்
பசு
பசுக்கள் தமிழகத்தில் காலம் காலமாக வணங்கும் ஒரு உயிரினம். கண்ணுக்கு முன் இருக்கும் நிலம் மற்றும் தாய்க்கு அடுத்தபடியாக நாம் வணங்கும் ஒன்றாக பசுக்கள் இருந்து வருகிறது. இவற்றின் கோமூத்திரம், சாணம், பால், தயிர், நெய் ஆகியவை நோய் தீர்க்கும் மருந்தாக இருந்து வருகிறது.
கோமூத்திரம், சாணத்தினைக் கொண்டு வீடு, வாசலை சுத்தப்படுத்துவது அறிவியல் பூர்வமான கிருமிநாசினியாக இருந்துள்ளது. இவற்றில் உடலுக்கு தேவையான பல தாதுக்கள் இருப்பது சமீப கால ஆராய்ச்சியில் வெளிவந்துள்ளது. அதிலும் உடலுக்கு தேவையான தங்க சத்துக்கள் கூட இவற்றில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றினை ஆதிகாலம் முதல் பல கோவில்களில் பிரசாதமாக அளித்து வருகின்றனர்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனிதனுக்கு உதவிய மாடுகளை சமீபகாலத்தில் நவீன ட்ரக்ட்டர் வரவால் மக்கள் உதவாக்கரையாக நினைத்து உதறிவிட்டனர். இதனால் நாட்டு மாடுகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டது. அதைப்பற்றியெல்லாம் யாரும் கவலைப்படாமல் டிரக்ட்டரைக் கொண்டு மண்ணை உழ அரம்பித்தனர். குறைந்த நேரத்தில் மண்ணை உழும் டிரக்ட்டர் மேல் மண்ணை மட்டுமே பிராட்டியது.
இதனால் கீழ் மண் கெட்டிப்பட்டு காற்றோட்டம், நீரோட்டம் குறைந்து மண்ணிலிருக்கும் நுண்ணுயிர்கள் வாழத்தகுதியற்ற மண்ணாக மாறியது. மண்மலடாக போவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்தது. ஒன்றை மறந்து விடக் கூடாது..
மாடுகள் மண்ணை உழவு மட்டும் செய்யவில்லை அதன் சாணத்தையும், கோமூத்திரத்தையும் சேர்த்து மண்ணிற்கு அளித்தது. இதனால் மண்வளம் பேணிக்காக்கப்பட்டது.
டிரக்ட்டர் மாடுகளைப்போல் மொத்த மண்ணையும் பொலபொலப்பாக பக்குவப்படுத்தவும் இல்லை, மண்ணிற்கு இயற்கை உரத்தினை அளிக்கவும் இல்லை. மொத்தத்தில் சில பத்தாண்டுகளிலேயே மண் கடினப்பட்டு மலடானது.
உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்ற இரசாயனங்கள் மண்ணை மேலும் நச்சாக மாற்றி விவசாயம் செய்யவும் தகுதியற்றதாக்கியது.
பல்லாயிரம் ஆண்டுகளாக செழித்து செழுமையாக இருந்த நமது மண்ணை நமது நாட்டு மாடுகள் வெறுமனே உழவில்லை. தனது சாணம் கோமூத்திரத்துடன் மண்ணை சேர்த்து பிரட்டும் பொழுது மண்ணிலிருக்கும் தேவையற்ற கிருமிகள், பூஞ்சணங்கள், நோய்த்தாக்கும் நுண்ணுயிர்கள், செடிகளுக்கு சேதம் விளைவிக்கும் பூச்சிகள் ஆகியவற்றை அழித்து மண்ணிற்கு தேவையான நுண்ணுயிர்களுடன், பேரூட்ட, நுண்ணூட்ட சத்துக்களையும் அளித்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காயல்ல.. ஒரே கல்லில் பல மாங்காய் இதுதான்.
எந்த டிரக்ட்டர் இவற்றையெல்லாம் கொடுத்தது? டிரக்ட்டர் மேல் மண்ணை மட்டும் பிரட்டி, கீழிருக்கும் மண்ணை கெட்டிப்படுத்தி மண்ணிற்கு பெரும் சேதத்தினை ஏற்படுத்தியது என்பதை மறுக்கமுடியாது.
அதெல்லாம் சரி.. இன்றைய நவீன காலத்தில் மீண்டும் நாட்டு மாடுகளை வைத்துக்கொள்வதும், உழவுவதும், உரமூட்டுவதும் சாத்தியமா என்கிறீர்களா? மனமிருந்தால் மார்க்கமுண்டு.
தொழிநுட்பம் மேலோங்கியிருக்கும் இன்றைய காலத்தில் பணத்திற்கு பஞ்சமே இல்லை. உணவிற்கு தான் பஞ்சம். அதிலும் ஆரோக்கியமான உணவு என்றால் எவ்வளவு எதை வேண்டுமானாலும் இழக்க மக்கள் தயாராக உள்ளனர். அவர்களுக்கு தேவை இயற்கையில் விளைந்த ஆரோக்கியமான உணவு. பின் ஏன் நாட்டு மாடுகள் சாத்தியமில்லை?
நாட்டு மாடுகள் இல்லாமல் இயற்கை விவசாயமா?
காலத்திற்கும் நேரத்திற்கும் தகுந்தவாறு இன்று நமது நாட்டு மாடுகளின் சாணத்தினையும், கோமூத்திரத்தின் நேரடியாக பயன்படுத்தாமல் மதிப்புக்கூட்டி பஞ்சகவ்யவாக பயன்படுத்த அதிக பலன் கிடைக்கும். இவ்வாறான பஞ்சகவ்யத்தினை தான் பல்லாண்டுகளாக கோவில்களில் அபிஷேகம்செய்து பிரசாதமாக அளித்துவருகின்றனர்.
நாட்டு மாட்டின் சாணத்தினையும் கோமூத்திரத்தினையும் நேரடியாக இடுவதென்றால் அதற்கு அதிகளவில் அவைதேவைப்படும், இன்றைய காலத்தில் மாடுகள் குறைவாக இருக்கும் நேரத்தில் அது சாத்தியமில்லை அதனால் நாட்டு மாட்டின் சாணம், கோமூத்திரம், பால், தயிர், நெய் ஆகியவற்றை ஒன்றாக முறைப்படி சேர்த்து இருபத்தி ஒரு நாட்கள் பாதுகாத்து பக்குவப்படுத்தி பெறப்படும் பஞ்சகவ்யம் குறைந்த அளவிலானதே பல ஏக்கர்களுக்கு போதுமானதாக இருக்கும்.
பஞ்சகவ்யத்தினை செய்வதற்கு விதிமுறைகள் உள்ளது என்றாலும், நிலத்திற்கான, மண்ணிற்கான பஞ்சகவ்யத்தினை எளிதாக இந்த முறையில் தயாரித்து பயன்படுத்தலாம். மற்றொரு முறை பஞ்சகவ்யா.
பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை
- பசுவின் புதுசாணி – 5 கிலோ
- கோமூத்திரம் – 3 லிட்டர்
- பால் – 2 லிட்டர்
- தயிர் – 2 லிட்டர்
- நெய் – 500 கிராம்
- கரும்பு சாறு – 3 லிட்டர்
- இளநீர் – 3 லிட்டர்
- வாழைப்பழம் – 12
- கள் – 2 லிட்டர் (அல்லது புளித்த இளநீர்)
இவை அனைத்தையும் ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கி ஒரு குச்சியால் ஐம்பது முறை வலப்புறமாக கலக்கி பாதுகாப்பாக மூடிவைக்கவும்.
கொசு, ஈ, வண்டு போன்றவை புகாமல் பாதுகாக்கவும். இருபத்தி ஒரு நாட்களுக்கு காலையும் மாலையும் ஐம்பது முறை இவ்வாறு கலக்கிவிட்டு நல்ல மணத்துடன் பஞ்சகவ்யா தயாராகும்.
இந்த கரைசலை ஆறுமாதங்களுக்கு பயன்படுத்தலாம்.
தினமும் ஒருமுறையேனும் திறந்து நன்கு கலக்கி விடவேண்டும். முடிந்தவரை தேவைக்கேற்ற அளவில் தயார்செய்து ஓரிரு மாதங்களுக்குள் பயன்படுத்துவது நல்லது.
செடிகளுக்கு தெளிக்க முப்பது மில்லி பஞ்சகவ்யத்தினை எடுத்துக்கொண்டு அதனுடன் ஒருலிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும்.
செடிகளின் இலைகள், வேர், மண் என அனைத்து பகுதிகளிலும் இதனை தெளிக்கலாம். மண்ணிற்கு மட்டுமல்ல செடிகளின் செழுமைக்கும் இந்த பஞ்சகவ்யம் உறுதுணையாக இருக்கும். அதிக விளைச்சல், நல்ல சுவை, ஆரோக்கியமான உணவினை பஞ்சகவ்யா அளிக்கும். மண்ணை காப்பதும், செடிகளை காப்பதும் மட்டுமல்லாமல் சிறந்த வளர்ச்சிஊக்கியாகவும் பஞ்சகவ்யா செயல்படும்.
டிரக்ட்டர், இரசாயன உரங்கள் பெருகிய இந்த காலத்திலும் மண்ணை வளப்படுத்த குறைந்த அளவேயான நாட்டுமாடுகளின் துணையுடன் பஞ்சகவ்யத்தினை தயாரித்து மண்ணில் மண்புழுக்களை பெருக்கி ஆரோக்கியமான உணவினை பெறலாம்.