ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகள் மெலிவினால் ஏற்படும் நோய். பொதுவாக நாற்பது ஐம்பது வயதைக் கடந்த பெண்களை இது அதிகமாக தாக்குகிறது. ஒல்லியாக இருக்கும் ஆண்களையும் இது தாக்குகிறது. அதிலும் ஒல்லியாக இருக்கும் பெண்களை இது அதிகமாக தாக்குகிறது. இந்த நோய்க்கு மிக முக்கிய காரணமாக உள்ள உணவுகள் சுண்ணாம்பு சத்தும், வைட்டமின் டி சத்தும் தான். உடலுக்கு போதுமான அளவு இந்த இரண்டு சத்துக்களும் பல காலமாக கிடைக்காத நிலையில் இந்த நோய் தாக்குகிறது. அதனால் எலும்புகள் பலவீனமாகவும், உறுதியில்லாத நிலையையும் அளிக்கிறது.
பொதுவாக பெண்கள் வீட்டிலிருக்கும் அனைவருக்குமான உணவுகளையும் தயாரிப்பார்கள், ஆனால் கடைசியாக மீதமிருக்கும் உணவுகளை உண்பார்கள். இது உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்காமல் மாறாக உடலை குப்பையாக மாற்றுகிறது. அதேப்போல் காலை எழுந்தவுடன் சமையலறை வேலைகள், அலுவலகம் என எல்லாநேரமும் சூரிய ஒளி படாத நிலையில் பணிசெய்வதும் இதற்கு மிக முக்கிய காரணம்.
ஆஸ்டியோபோரோசிஸ் – வெளிவர உதவும் உணவுகள்
அன்றாடம் ஆயிரம் மில்லி கிராம் அளவு கால்சியம் சத்துக்கள் பெண்களுக்குத் தேவை. நமது உணவுகளில் முருங்கைக் கீரை, பசலைக் கீரை, ஆரஞ்சு, கேழ்வரகு போன்றவற்றில் இந்த சத்துக்கள் மிக அதிகம் உள்ளது. ஆஸ்டியோபோரோசிஸ் நோய் வராமல் தடுக்கவும் அவற்றிலிருந்து நம்மை பாதுகாக்கவும் இந்த உணவுகளை நாம் அதிகம் சாப்பிட வேண்டும். இவற்றுடன் காலையில் பால் / தேங்காய் பால், மதியம் தயிர், ஒரு கப் கொண்டைக் கடலை, இரவில் கேழ்வரகு ரொட்டி ஆகியவற்றையும் சாப்பிட வேண்டும்.
காலையில் சிறிது நேரம் சூரிய ஒளியில் இருப்பது எலும்புகளை பலப்படுத்துவது மட்டுமல்லாமல் விரைவில் இந்த தொந்தரவிலிருந்து வெளிவர உதவும். காலை நேரத்தில் சிறிது நல்லெண்ணெயை உடலில் தேய்த்து சூரிய ஒளி படுமாறு இருக்க சிறந்த பலனைப் பெறலாம். மேலும் வைட்டமின் D கிடைக்க காலை மற்றும் மாலை வெளியில் நடைப் பயிற்சி செய்யலாம்.
ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கு தவிர்க்க வேண்டியவை
காஃபைன் உணவுகள் குறிப்பாக காபி, டீ மற்றும் அதிகம் உப்பை குறைக்க வேண்டும். உணவில் உப்பைக் குறைக்க வேண்டும், நாள் ஒன்றிற்கு ஒரு நபருக்கு ஒரு ஸ்பூன் அளவை விட உப்பு கூடக் கூடாது. அதுவும் கல் உப்பை பயன்படுத்துவது சிறந்தது. பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.