ஓரிதழ் தாமரை – நம் மூலிகை அறிவோம்
Ionidium Suffruticosum; Viola Suffruticosa; Hybanthus; ஓரிதழ் தாமரை
உடலுக்கு அபாரமான ஆற்றலையும், குளிர்ச்சியையும் அளிக்கும் அற்புதமான சிறு செடிவகையைச் சேர்ந்த மூலிகை ஓரிதழ் தாமரை. தமிழகத்தில் பரவலாக இந்த அறையடிவரை வளரும் மூலிகையைப் பார்க்க முடியும். மண்தரை, வயல் வரப்பு மட்டுமில்லாமல் மண் இருக்கும் சிறு சிறு இடங்களிலும் கூட செழிப்பாக வளரும் மூலிகை இது. ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் இந்த மூலிகையை எடுத்துக்கொள்ள மூலம், தாய்ப்பாலின்மை போன்ற தொந்தரவுகள் நீங்கும். சூரிய காந்தி, இரத்தின புருஷ் என பல பெயர்கள் இந்த மூலிகைக்கு உண்டு.


அழகிய மற்றும் வித்தியாசமான மலர்களைக் கொண்ட இந்த செடியின் இலைகள் மாற்றடுக்கில் அமைந்தவை. ஒரே இதழையும், தாமரை அல்லது ரோஜா நிறத்தினையும் கொண்டது இதன் பூக்கள். அதனாலேயே இதற்கு ஓரிதழ் தாமரை என்ற பெயர். மிக எளிதாக இதன் பூக்கள் மற்றும் இலையை வைத்து அடையாளம் காணலாம். இனிப்பு சுவைக் கொண்ட ஓரிதழ் தாமரை செடியின் இலை, பூ, வேர், காய், பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது. வழவழப்பு தன்மை கொண்ட மூலிகை.
உடல் பலத்தையும், வலிமையையும் அதிகரிப்பது மட்டுமல்லாமல் இளமையைக் காத்து இச்சை பெருக்கியாகவும் செயல்படும் மூலிகை. உடலைத் தாக்கிய தேள்கடி விஷத்தையும் போக்கும் தன்மைக் கொண்டது இந்த மூலிகை. மூலம், தாது நஷ்டம், பெரும்பாடு, நீர்த்தாரை எரிச்சல், உடல் அசதி, தாய்ப்பாலின்மை, தலை நோய்கள், புண், மேகவெட்டை, சிரங்கு, சொறி, படை, நீர்ச்சுருக்கு போன்ற தொந்தரவுகளுக்கும் சிறந்த மூலிகை.


மழைகாலங்களில் பரவலாக இந்த மூலிகையை கிராமப்புறங்களிலும், நகரங்களிலும் பார்க்க முடியும். இதன் சமூலத்தை கிடைக்கும் காலங்களில் எடுத்துவந்து சுத்தம் செய்து உலர்த்தி பொடியாக்கி வருடம் முழுவதும் தேவைக்கேற்ப பயன்படுத்த சிறந்த உடல் பலத்தைப் பெறமுடியும். அதே போல் இதனை குடிநீராக காய்ச்சி பருக பல நோய்கள் மறையும், உடலில் உள்ள கழிவுகள் நீங்கும், ஆரோக்கியம் மேம்படும். ஓரிதழ் தாமரையின் இலையை தினந்தோறும் விடிவதற்கு முன் சிறிதளவு உண்டு பால் அருந்திவர இரண்டு மாதத்திற்குள் வெள்ளை, தாது நஷ்டம், சிற்றின்பப் பலஹீனம், சிறுநீர் எரிச்சல், அதிமூத்திரம் போன்றவை நீங்கும்.


உடல் அசதி, பெரும்பாடு மறைய
ஓரிதழ்தாமரை இலை, யானை நெருஞ்சில், கீழாநெல்லி இலை ஆகியவற்றை ஒரு கைப்பிடி அளவு என சமபங்கு எடுத்து அரைத்து அரை கப் எருமைத் தயிரில் கலந்து இரண்டு வாரம் பத்தியமிருந்து எடுத்து வர உடல் அசதி, பெரும்பாடு, நீர்த்தாரை எரிச்சல் போன்ற தொந்தரவுகள் மறையும்.
மூலம், உட்சூடு நீங்க
இந்த ஓரிதழ் தாமரையின் இலை மற்றும் தண்டு பூக்களுடன் சேர்த்து கஷாயம் செய்து பருகிவர மூலம், நீர்க்கட்டு, உட்சூடு, மேக நோய்களைப் போக்கி முகப் பொலிவை அதிகரிக்கும்.
தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது.
சமீபத்திய கருத்துகள்