Carum Copticum; Ajwain; ஓமம்
வயிறு சம்மந்தமான தொந்தரவுகள், அஜீரணம் போன்ற தொந்தரவுகளுக்கு சிறந்த வீட்டு மருத்துவம் இந்த ஓமம். ஒவ்வொரு வீடுகளிலும் ஏதேனும் அதிக எண்ணெய் மற்றும் மாவு பொருட்கள் கொண்ட உணவுகளை உட்கொள்ளும் நாட்களில் ஓம தண்ணீர் பருகுவதும், ஓமத்தை அந்த உணவுகளில் சேர்த்து தயாரிப்பது என நம் வீட்டுப் பெரியவர்கள் ஓமத்தை சேர்ப்பார்கள். அதேப்போல் தொடர்ந்து அழும் குழந்தைக்கும் பெரியவர்கள் ஓமம் நீரை ஓரிரண்டு ஸ்பூன் கொடுப்பார்கள். உடனே குழந்தை அழுகையை நிறுத்தி விளையாட தொடங்கிவிடும். நல்ல உறக்கத்தையும் ஏற்படுத்தும் தன்மைக் கொண்டது.
அக்கினி வர்த்தனம், தீப்பியகம், அசமதா, பிரம தர்ப்பை, உக்கிர சுந்தம் என பல பெயர்கள் ஓமத்திற்கு உண்டு. ஓமம் ஒரு சிறு செடி வகை தாவரம். இதன் இலைகள் சிறகு வடிவக் கூட்டிலைகள் இந்த ஓமம் செடியின் தண்டு, இலை ஆகியவற்றில் எண்ணெய்ச் சுரப்பிகள் உள்ளது. அவை நறு மணம் கொண்ட எண்ணெய்கள். இதன் பூக்கள் செடியின் நுனியில் இருக்கும்.
கார்ப்பு தன்மைக் கொண்ட இந்த செடியின் விதைகளே பயன்படும் பகுதிகள். Thymol என்ற வேதிப் பொருள் இந்த ஓம செடியில் காணப்படும். அஜீரணம், வயிற்று வலி, நுரையீரல் நோய்கள், வறட்டு இருமல், கல்லீரல், மண்ணீரல் நோய்கள் போன்ற தொந்தரவுகளுக்கு சிறந்த பலனை ஓமம் அளிக்கும்.
தீராத அஜீரணம், வயிற்று வலி தீர
ஓமம்,ஏலம், திப்பிலி, சுக்கு, மிளகு ஆகியவற்றை சம அளவு எடுத்து லேசாக வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, அதனுடன் சம அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து தினமும் இரண்டு வேளைகள் அரை ஸ்பூன் வீதம் எடுத்து வர தீராத வயிற்றுப் போக்கு, அஜீரணம், வயிற்று வலி தீரும்.
கல்லடைப்பு, வயிற்றுப் பொருமல்
ஓமத்தை பொடித்து வைத்துக் கொண்டு அந்த ஒமப் பொடியைக் கொண்டு குடிநீர் செய்து குடித்துவர கல்லடைப்பு, சிறுநீர்க்கட்டு, வயிற்றுப் பொருமல் மறையும்.
வீக்கங்கள் கட்டிகளுக்கு
உடலில் ஏற்படும் கட்டிகள், வீக்கங்களுக்கு ஓமத்தை குடிநீர் சிறிது சேர்த்து அரைத்து கட்டிகள், வீக்கங்களின் மீது பற்றுப்போட அவை விரைவில் மறையும்.
நுரையீரல் தொந்தரவுகளுக்கு
இரைப்பிருமல், நுரையீரல் கபம் போன்ற தொந்தரவுகளுக்கு ஓமம், கசகசா, திப்பிலி, ஆடாதோடையிலை ஆகியவற்றைக் கொண்டு சுண்டக் காய்ச்சி தினமும் இரண்டு வேளைகள் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து வர விரைவில் மறையும்.