ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை தேவை உணவு, உடை, இருப்பிடம். இவை மட்டும் வாழ்வில் இருந்து விட்டால் போதுமா? விருப்பங்கள், ஆசைகள், அனுபவங்கள் எனப் பலப் பல சுவாரசியங்கள் சேர்ந்தது தானே வாழ்க்கை.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பங்கள், ஆசைகள், அனுபவங்கள் எனத் தனித் தனியாக நம்மை சுழல்கிறது. பலப் பல அனுபவங்கள், விருப்பங்கள், ஆசைகள் நம்மை தனிப்படையாக சுழன்றாலும் சில ஆசைகளும் அனுபவங்களும் பலருக்கு பொதுவானவைகள். அவற்றில் அனைவருக்கும் மிக முக்கியமான அடிப்படை ஆசை என்பது, வாழ்வின் எல்லா காலத்திலும் தலை நிமிர்ந்து நிற்பது. குமரி முதல் கிழவி வரை, வாலிபன் முதல் வயோதிகன் வரை அனைவரின் ஆசையும் அதுதான்.
வாழும் வரை யாருக்கும் பாரமாக இல்லாமல் சொந்தக்காலில் நிற்பது, பலரின் கவனத்தையும் புகழையும் ஈர்த்து அனைவரின் மத்தியிலும் தலை நிமிர்ந்து நிற்பது என்பது ஒரு இலட்சியமாகவே பலருக்கு உள்ளது. பலரின் இந்த வாழ்நாள் ஆசைக்கு அச்சாணி போட்டது கிட்டத் தட்ட அவர்களின் குழந்தைப் பருவத்தில், அதுவும் பனை மரத்தின் துணை கொண்டு.
இன்று தலை நிமிர்ந்து நிற்கும் பலர் அன்று நுங்கு வண்டியைக் கொண்டு நிற்கவும் நடக்கவும் பழகியவர்கள். நிற்கவும், நடக்கவும் மட்டுமா பனை நமக்கு உதவியது. என்ன உதவி செய்ய வில்லை நம் பனை?
நுங்கு, பதநீர், கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் என உடலை பாதுகாக்கும் சத்துள்ள உணவுப்பொருட்களையும், பனை ஓலையின் ஓலைசுவடியகவும், கூடைகள், சாப்பிட உதவும் தொன்னைகள், குதிர்கள், பெட்டிகள், பாய்கள், பனை விசிறி மற்றும் பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள் என அலங்காரப் பொருட்களாகவும் நொங்கு வண்டிகள், காத்தாடிகள், பனை விதைப் பொம்மைகள் என விளையாட்டு பொம்மைகளையும் நமக்கு அளிக்கிறது.
பெருமிதம், ஆடம்பரம், ஆரவாரம் எனப் பல தன்மைகள் நம்மை சுற்றி இருந்தாலும் அவற்றிற்கு நடுவில் என்றும் நிறை குடமாக அமைதியுடன் இருப்பது நம் பனை. எந்த செலவும், பராமரிப்பும், எதிர்பார்ப்பும் இல்லாமல் மனிதன் உட்பட பல உயிரினங்களுக்கு நன்மையை மட்டுமே தருகிறது. நெடுக்க தலை நிமிர்ந்து வளர்ந்து பலருக்கும் பயனளிக்கும் சிறந்த மரம் பனை மரம்.
கருணையின் வடிவமான பெண்கள் பல விதங்களில் இருந்தாலும், கருணை என்றதும் அனைவரின் நினைவிற்கு முதலில் வருவது தாய் மட்டுமே. தாய் கூட தன் பிள்ளைகளிடம் சில நேரங்களில் பராமரிப்பை எதிர்பார்கின்றனர். ஆனால் பனை எதையுமே யாரிடமும் என்றும் எதிர்பார்பதில்லை. பனை என்றுமே மற்றவர்களின் நலனுக்காக தன்னை அர்ப்பணிக்கிறது. அர்ப்பணிப்பு என்றதும் பலருக்கு மெழுகுவத்தி நினைவிற்கு வரும் காரணம் அது தன்னை உருக்கிக் கொண்டு பலருக்கு பிரகாசத்தை கொடுக்கிறது.
பனையோ மெழுகைவிட பலமடங்கு பிறருக்காக தன்னை அர்ப்பணிக்கிறது. மெழுகை ஒருவர் ஏற்றிவிட்டால் தான் தன்னை உருக்கி பலருக்கு வெளிச்சத்தைக் கொடுக்கும். ஆனால் பனையோ என்றுமே யாரையுமே எதிர்பார்க்காமல் தன் இனத்திற்கே ஆபத்து என்ற இன்றைய நிலையிலும் பலரின் வாழ்வாதாரத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக உள்ளது.
நோயும், ஆரோக்கியமின்மையும் தொடரும் இன்றைய சமூகத்திற்கு ஒரு கற்பகதருவாக உதவுவது பனையே.
பனை, புல் வகையைச் சேர்ந்த தாவரமானாலும் தமிழகத்தின் மாநில மரம். பாலைவனத்திலும் வளரக் கூடிய பனை எந்த பராமரிப்பும் தேவையில்லாதது. உலகிலேயே இந்தியாவில் தமிழகத்தில் அதிகம் காணப்படும் பனை உடலுக்கு பல சத்துக்களையும், குளிர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் கொடுப்பதுடன் ஒரு சிறந்த நோய் நிவாரணியாகவும் விளங்குகிறது.
உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் பனைக்கு என்றென்றும் கடமைப்பட்டவர்கள். பல இன்னல்களுக்கு நடுவில் இயற்கையாக வளர்ந்து தன்னை பெருக்கிக் கொண்டு பிறருக்கு ஆரோக்கியத்தை அளிப்பதில் சிறந்தது பனை. தமிழர்களின் மொழி, இலக்கணம், இலக்கியம், பாரம்பரியம், வரலாறு என்ற அனைத்தையுமே இத்தனை காலம் கடத்தி பாதுகாப்பாக நமக்கு அளித்தது பனையும் அதன் பனை ஓலையும் தான்.
பழைய சங்க கால நூல்கள் முதல் அனைத்துமே பனை ஓலையில் எழுதப்பட்டுள்ளது என்பதை வைத்தே பனையும் நம் மரபணுவும் எத்தனை ஆயிரம் வருடங்கள் தொடர்புள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். நம் மண்ணிற்கு சொந்தமான பனை நம் சூழல் அறிந்து நம் மக்களுக்கு தேவையான மகத்துவத்தை இயற்கையாகவே அடக்கியுள்ளது. எனவே, இன்றைய மரபணு சம்மந்தமான அனைத்து நோய்களுக்கும் மா மருந்தாக விளங்குவதும் பனைதான்.
அடைமழையும் வெள்ளமும் சமீபத்தில் நம்மை ஆட்டிவைத்தாலும் அவற்றின் சுவடுகள் மறைவதற்குள் வெப்பம் களைக்கட்ட தொடங்கிவிட்டது. இந்த வருட வெப்பம் பலவகையில் தன் பாதிப்பை தொடங்கி விட்டது. குழந்தைகளுக்கு அக்கி, வேர்க்குரு, கட்டிகள் மட்டுமல்லாமல் நீர்க் கடுப்பு, அம்மை, மஞ்சள் காமாலையின் தாக்கங்களும் அதிகரித்து வருகிறது.
இவ்வாறான உடல் சூட்டினால் உடலில் இருக்கும் நீரின் அளவு குறைந்து உடல் வறட்சியை ஏற்படுத்துகிறது. இதன் அறிகுறிகள் தலைவலி, வறட்சியான சருமம், வெப்பத்தில் இருப்பது போல் உணர்வது, வறட்சியான இருமல், எப்போதும் தாகமாக இருப்பது, பசியின்மை, மயக்கம், அமைதியின்மை, தூக்கக்கலக்கம், சிடுசிடுப்பு, குன்றிய உடற் சக்தி, காய்ந்த, ஒட்டும்தன்மையுடைய வாய் மற்றும்/ அல்லது நாக்கு, குறைந்த அளவான சிறுநீர், 8 முதல் 12 மணிநேரங்களுக்கு சிறுநீர் கழிக்காமை அல்லது மஞ்சள் நிற சிறுநீர் என பட்டியல் நீளும். இந்த வறட்சி உடலில் தொடருமானால் உடல் உறுப்புகளின் செயல் திறனும் நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும்.
வெப்பத்தால் அதிகரிக்கும் உடல் வறட்சி மட்டுமில்லாது இன்றைய உணவுகளில் சேர்க்கப்படும் சுவையூட்டிகளும், நிறமூட்டிகளும், பதப்படுத்திகள், இரசாயனங்கள் கலந்த குளிர்பானங்கள், ஐஸ் கிரீம்கள், நொறுக்கு தீனிகள் மற்றும் உணவுகளால் உடல் படும் அவதிகள் ஏராளம்.
இந்த வெப்பத்தை தணிக்க பலர் குளுகுளு ஐஸ் பெட்டி உணவுகளை கோடை தொடக்கம் முதல் பரவலாக விரும்பி உண்ணத் தொடங்கி விட்டனர். நாக்கிற்கு மட்டும் குளிர்ச்சியைத் தரும் இந்த உணவுகளால் உடல் எந்த அளவு பாடுபடுகிறது என்று சற்று சிந்திப்போம்.
உடலுக்கென்று ஒரு வெப்பநிலை உள்ளது, உடல் அதில் இயங்கிக் கொண்டிருகிறது. வெளியில் உள்ள தட்பவெப்பநிலையோ வெப்பத்தை அள்ளித் தெளிக்கிறது. அதிகப்படியான வெப்பமும் அதிகப்படியான குளிர்ச்சியும் உடலை சுற்றி இருந்தாலும் உடல் தன் வெப்ப நிலையை சமன்பாட்டில் வைக்க அதிக சக்தியை பிரயோகிக்கிறது. அவ்வாறு இருக்க மேலும் மேலும் குளிர்ச்சியுள்ள உணவுகளையும், குளிரூட்டிகளையும் உட்கொள்வதால் உடல் அதிக சக்தியை இழப்பதுடன் உடல் வறட்சியையும் அதிகரிக்கிறது.
என்ன தான் செய்வது இந்த வெப்பத்தில் உடலை குளிர்விக்க என்கிறீர்களா? அதுதான் இருக்கவே இருக்கே நம் பனை. வெப்பத்திலிருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் காக்க ஒரு சிறந்த இயற்கை உணவு என்றால் அது ஈடு இணையற்ற பன நுங்கும், பதநீரும் தான்.
நவீனமும் செயற்கையும் வளர்ந்துகொண்டே ஒரு பக்கம் இருக்கிறது என்று பெருமைப்படும் நாம் ஒன்றையும் மறந்து விடக்கூடாது. நோய்களும் அதற்கு ஏற்றவாறு பல்கிப்பெருகிக்கொண்டே இருக்கிறது. ஒரு குடும்பத்தில் நான்கு நபர்கள் என்றால் அவர்களில் இருவருக்காவதும் நோய் என்ற நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக செயற்கையின் மீது அதிக பயமும், இயற்கையின் மீது தேடலும் தொடங்கியுள்ளது.
பலாயிரம் ஆண்டுகள் முன் தோன்றி இன்றும் நம்முடன் உறவாடும் பனை மனிதனை விட அதிக காலம் வாழக்கூடியது. நவீனம் வளர்ந்த இந்த காலத்திலும் எந்த கலப்படமும், இரசாயனமும் இல்லாமல் கிடைக்கக் கூடிய ஒரே உணவு இயற்கையான பனையிலிருந்து கிடைக்கும் உணவுகள் தான்.
உஷ்ணம் காரணமாக கோடையில் பலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை சாப்பிட்டால், தாகம் உடனே அடங்குவதுடன் உடலுக்கு தேவையான சத்துக்களையும் அளிக்கிறது. நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்து. எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும்.
பார்க்க சாதராணமாக வருடம் முழுக்க வெயிலில் காயும் பனை மரம், நாம் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலில் காயும் போது நம் தாகத்தையும், உடல் சூட்டையும் தணிக்க தாய்க்கு இணையாக கருணையுடன் நமக்கு உதவுகிறது.
கோடை என்றதுமே திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் போன்ற தென்மாவட்டங்களில் பட்டையைக் கிளப்பும், நோய்தீர்க்கும், ஆரோக்கிய பானம் ‘பதநீர்’ அல்லது ‘நுங்கு பதநீர்”. தென் மாவட்டங்கள் மட்டுமல்லாது மற்ற மாவட்டங்களிலும் கோடை தொடங்கியவுடன் நுங்கு கிடைக்கத் தொடங்கிவிடும்.
கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்துக்களை வாரி வழங்கும் நுங்கு ஜெல்லியைப் போல வட்டமாக இருக்கிறது. ஒவ்வொரு நுங்கிலும் சிறிது நீர் இருக்கும். அந்த நீரை வீணாக்காமல் நுங்குடன் சேர்த்து உண்ண பல மடங்காகும் அதன் மருத்துவகுணங்கள்.
நுங்கில் 87 சதவீதம் நீர் சத்து, 0.8 சதவீதம் புரதம், 0.1 சதவீதம் கொழுப்பு, 10 சதவீதம் கார்போஹைட்ரேட், 1 சதவீதம் நார்சத்து மீதம் சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் சத்து, இரும்பு சத்து, தயாமின், பொட்டாசியம், ரைபோபிளேவின், நியாஸின் மற்றும் வைட்டமின் சி, எ, பி ஆகிய சத்துக்கள் உள்ளது.
சத்துக்கள் மட்டுமா? திருநெல்வேலி மாவட்டங்களில் பனை ஓலையில் நுங்கு பதநீரை ஒருமுறை சுவைக்க மீண்டும் மீண்டும் சுவைக்கத் தோன்றும். செயற்கை இரசாயன சுவையுட்டிகள் கொண்ட உணவை சுவைத்தவர்கள் (நாக்கை சாகடித்தவர்கள்) இயற்கையின் சுவையை ஒருமுறையேனும் சுவைத்து அதன் அற்புதத்தையும் மருத்துவத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். நுங்கு ஒரு உணவும் மருந்தும் மட்டுமல்ல, தமிழர்களின் உயிர் நாடி. எப்பேர்ப்பட்ட நோயின் தாக்கம் கொண்டவரையும் மீட்டுக்கும்.
பனை மரத்தில் நுங்கு பிஞ்சு உருவானதும் அந்த பிஞ்சின் ஓரத்தில் லேசாக கீறிவிட்டு ஒரு மண் பானையை சுண்ணாம்பு தடவி கட்டிவிட அதில் சொட்டுச் சொட்டாக சேரும் பாலையே பதநீர் என்கிறோம். பதநீரின் சுவைக்கு சத்திற்கும் எதுவும் மிஞ்சமுடியாது என்பது தான் நிதர்சனம். நுங்கைப்போலவே பதநீரும் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது.
பதநீரில் உள்ள உடனடி சத்து மெலிந்த, ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நல்ல போசாக்கையும் ஊட்டத்தையும் அளிக்கிறது. நீர்சத்தை வாரிவழங்கும் பதநீர் கருவுற்ற பெண்களுக்கும், மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. டைபாய்டு சுரம், நீர்க்கடுப்பு முதலிய வியாதிகளை போக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகிறது. இருதயம் வலுவடைகிறது.
பதநீரில் இருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது. பதநீரின் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட அனைத்து தோல் வியாதிகளையும் நீக்குகிறது. இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம், பசியின்மையை சீராக்குகிறது.
பணத்தை செலவு செய்து பல அலங்கார மரங்களை அசால்டாக பராமரித்து வளர்க்கும் முற்போக்கு சிந்தனையாளர்கள் பனை மரங்களையும் காத்து அதன் பலனை வரும் தலைமுறையினருக்கு எடுத்து சொல்ல அனைவரும் அழகு இளமையுடன் நோயின்றி, ஆரோக்கியமாக வாழலாம்.
மனிதனை விட அதிக நெருக்கடிகளுக்கு தற்போது ஆளாகியுள்ள பனைமரங்களை சாலை ஓரங்களில் பார்க்கும் போது வெறும் மரமாக மட்டும் பார்க்காமல் உண்மையான, எளிதான ஆரோக்கியத்தின் மாற்று வழியாகவும் இனி பார்க்கத் தொடங்குவோம்.
பனைமரம் வைத்த உடனே பலன் தராமல் வம்சத்தைக் காத்து அனைவருக்கும் பலனளிக்கும் பனையின் நுங்கு, பதநீரை இந்த கோடையில் பருகி நாமும் பனையைப் போல் தலைநிமிர்ந்து வாழ்வில் உயர நிற்போம். இந்த கோடையில் நுங்கை உண்டு பதநீரைப் பருகி அதன் சுவை, சத்துடன் உடலை பேணி உள்ளதை குளிர செய்வோம்.