மலட்டு விதையில் தொடங்கி, இரசாயனங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக் கொல்லிகள், அறுவடைக்கு பின் தெளிக்கும் நச்சுக்கள், காய்கள் கெடாமலும், தேவைக்கேற்றவாறு பழுக்கவும் ஏற்றவாறு நிறம், தன்மைக்கு ஏற்ப நச்சுக்கள் என உணவுப்பொருட்கள் நமது சமையலறைக்கு வருவதற்குள் ஒரு நச்சுக் கூடாரமாகவே உருமாறிவிடுகிறது.
இவற்றில் இருந்து நம்மையும் நமது குடும்பத்தையும் காக்க நாமே வீட்டில் தோட்டம் அமைத்து அதிலிருந்து நமக்கு தேவையானவற்றை பெறுவது தான் இன்றைய சூழலின் புத்திசாலித்தனமான ஒன்று.
வீட்டுத் தோட்டம் பல நகரங்களில் பிரபலமாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் வீட்டுதோட்டம் அமைக்க பல லட்சங்களாகும் என்ற எண்ணமும் பலரிடத்தில் மேலோங்கியுள்ளது.
- இதற்கு முதல் காரணம் பசுமைக் குடில்.
- அடுத்ததாக ஏதோ ஒரு ஆர்வத்தில் மற்றவரை அழைத்து தோட்டம் அமைக்கச் சொல்வது.
தோட்டம் அமைப்பது பலருக்கு பொழுதுபோக்காக இருந்தாலும் இன்றைய நிலையில் அவரவர் வீட்டில் அது அத்யாவசியமானதாக உள்ளது.
ஆடம்பர பொருட்களுக்கு அதிக செலவு செய்வது ஒரு பொருட்டல்ல, ஆனால் அத்தியாவசியம் என்றபோது அதற்கு பெரும் செலவு செய்ய நேர்ந்தால் காலப்போக்கில் அதனால் பெரிய பலன் இல்லாமல் போகும்.
வீட்டுத் தோட்டம் அமைப்பது என்பது வீட்டிலிருக்கும் நபர்கள் தங்களின் தேவைக்காக ஆரோக்கிய உணவைப் பெறுவது.. இதற்காக மற்றவரை நாடுவதும், பிரத்தியேகப்பொருட்களை நாடுவதும் ஏமாற்றத்தையே கொடுக்கும்.
இதற்கு முன் எளிதாக கிடைக்கும் பொருட்களை வைத்து எவ்வாறு புதினா செடியினை நாமே நடலாம், வளர்க்கலாம் என்று பார்த்தோம்.
இதில் எந்த செலவும் இல்லை, லாபம் வருடம் முழுவதும் தேவைக்கேற்ப சத்தான புதினா கீரைகள்.
இதனை விட்டுவிட்டு மற்றவரிடமோ அல்லது ஏதாவது மாடிதோட்டம் அமைக்கும் நிறுவனத்திடமோ புதினா கீரை செடியினை நமது வீட்டில் அமைத்து தருமாறு கேட்டல் அவர்கள் ஒரு செடிக்கு குறைந்தது இருநூற்று ஐம்பது ரூபாய் வசூலிப்பார்கள். இவ்வாறு பத்து செடிகளை வைத்து அதற்கான அறுவடை லாபத்தை என்று பெறுவது.
அத்தியாவசியமான வீட்டுத் தோட்டம் சாத்தியமாவது நமது ஆர்வத்தாலும், நமது குடும்பத்தின் மீதுள்ள அக்கறையாலும் தானே தவிர அதிக செலவு செய்து அமைப்பதாலும் அதனை வேறொருவர் பராமரிப்பதாலும் இல்லை.
அடுத்ததாக வீட்டுத் தோட்டத்தின் பெருமளவு முதலீட்டிற்கு காரணம் பசுமைக் குடில்.
இந்தியாவிலும், தமிழகத்திலும் உள்ள நமது உணவுகளில் நீர் காய்களுக்கு பதில் உருளைக்கிழங்கும், இட்லிக்கு பதில் பிஸ்சாவும் அரங்கேற காரணமாக இருந்த வெளிநாட்டு மோகம் நமது தோட்டங்களையும் விட்டுவைக்கவில்லை.
வீட்டின் மாடியில் குடிலமைத்து அதற்குள் செடிகளை வளர்ப்பது தான் பசுமைக் குடில்.
இது நமக்கு, நமது நாட்டிற்கு தேவையா? இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? போன்ற எதைப்பற்றியும் தெரியாமல் வலைதளங்களில் அதனைக் கண்டவுடன் அவ்வாறே நமது வீட்டிலும் தோட்டம் அமைக்க வேண்டும் என்ற விபரீத ஆசையாலும் பல லட்சங்களை வீட்டுத் தோட்டத்திற்காக செலவு செய்கின்றனர்.
பசுமைக் குடிலால் பாதிப்பா? என்கிறீர்களா…
பசுமைக் குடிலை பல குளிரான நாடுகளில் மக்கள் அமைத்து அதனுள் தங்களுக்கு தேவையான வீட்டு காய்களை வளர்க்கின்றனர். அந்த குளிரான நாடுகளில் அதாவது, இயற்கையாக வெப்பம் குறைவான நாடுகளில் இருப்பவர்கள் இந்த பசுமைக் குடிலின் மூலம் குடிலுக்குள் வரும் குறைந்த வெப்பத்தை தக்கவைத்துக்கொண்டு செயற்கையாக அதனை பராமரிக்கின்றனர். இதனால் புவிவெப்பம் அதிகரிப்பதோடு, சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைகிறது.
நமது நாட்டின் சீரான தட்பவெப்ப நிலையையும், அவர்களின் குளிரையும் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். குளிர் நாட்டில் இருப்பவர்கள் எந்த வளமும் இல்லாமல் தனக்கான இயற்கை காய்களையும், கீரையையும் வீட்டுதோட்டத்தின் மூலம் பெறுகிறார்.
ஆனால் நமது இந்தியாவில் உள்ள வளமான பருவ நிலையில் எந்த வளமும் இல்லை என்றும் இதெல்லாம் சாத்தியமா என்றும் கேள்விகளை மட்டும் எழுப்பிக்கொண்டிருக்கிறோம். அவர்களின் மன உறுதியும், விடாமுயற்சியும் கண்களுக்கு தெரிவதில்லை.
குளிர்நாட்டில் குளிருக்கு ஸ்வெட்டர் அணிவதும், அதனை மாடர்ன் என்ற நினைப்பில் இந்தியாவில் அணிவதற்கும் உள்ள கோமாளித்தன வேறுபாடு தான் இதிலும் உள்ளது.
குளிர்நாட்டில் குளிருக்கு ஸ்வெட்டர் அணிவதும், அதனை மாடர்ன் என்ற நினைப்பில் இந்தியாவில் அணிவதற்கும் உள்ள கோமாளித்தன வேறுபாடு தான் இதிலும் உள்ளது.
வருடம் முழுவதும் குளிரில் விளையும் காய்களையும், பழங்களையும் அன்றாடம் இயற்கைக்கு மாறாக உண்ணவேண்டும் என்பதால் பல விவசாய நிலங்களில் பசுமைக் குடில் அமைக்கப்படுகிறது. செயற்கையாக அதன் தட்பவெப்ப நிலையை பராமரித்து அதில் விவசாயம் செய்வார்கள்.
வருடம் முழுவதும் தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற உணவுகளை உண்ண அனைவருக்கும் ஆசைதான். ஆனால் அதன் பின்விளைவு உடல் நல சீர்கேடும், உடலின் உஷ்ணநிலையில் ஏற்படும் மாறுதல்களுமாகும்.
சாதாரணமாக உடலின் உஷ்ணம் சீர்கெட காலப்போக்கில் பல நோய்களுக்கும், தொந்தரவுகளுக்கும் அதுவே காரணமாகிறது. அந்தந்த பருவநிலைக்கும், மண்ணிற்கும் ஏற்ற உணவை உட்கொள்வதே சிறந்தது. இயற்கையும் அதற்கேற்றவாறு நமக்கு உதவுகிறது.
இன்னும் ஒரு வேடிக்கை என்னவென்றால் பலரிடம் வீட்டுமாடிதோட்டத்தில் வைத்திருக்கும் செடிகள் நேரடியாக வெயிலைத் தாங்குமா என்ற கேள்வியும் பயமும் தான்.
செடிகள் தங்களின் உணவினையும், தங்களுடைய காய், கனி முதலியவற்றையும் சூரியஒளியிலிருந்து ஒளிச்சேர்க்கை மூலம் பெறுகிறது என்று நாம் அனைவருக்கும் தெரியும், ஆக செடி வாடுவதற்கும் சூரியஒளிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
செடிகள் வாடுவதற்கு போதுமான நீரின்மை, நவீன விதைகள், புவி வெப்பமயமாக்கல், இறுக்கமான மண் என பல காரணங்கள் உள்ளது அவற்றை கண்டறிந்து எளிதாக செலவின்றி தீர்வு காண்பதே சிறந்தது.
அதனை விட்டு விட்டு செடிகளுக்கு கூடாரம் அமைப்பதால் அது புவி மற்றும் செடிகளின் வெப்பத்தை அதிகரிக்கும். மேலும் இதனால் செயற்கையாக பராமரிப்பு செலவும் அதிகரிக்கும்.
எளிமையாக நமது வீட்டிற்கு தேவையான, அதிகம் பயன்படுத்தும் சத்தான உணவைத் தரும் செடிகளை வளர்க்க தொடங்குவோம். நமக்கும் நமது சுற்றுச்சூழலுக்கும் எந்த பாதிப்பையும் அளிக்காத வகையில் தோட்டம் அமைப்போம்.