நித்திய கல்யாணி – நம் மூலிகை அறிவோம்

Neotea Nithyakalyani; Catharanthus Roseus; Madagascar Periwinkle; நித்ய கல்யாணி

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் தமிழ் மூலிகை வகைகளில் தலைசிறந்ததாக விளங்கும் மூலிகை நித்யகல்யாணி. இதற்கு சுடுகாட்டுப் பூச்செடி, காக்கா பூச்செடி, பீங்கான் பூச்செடி என பலவாறாக குறிப்பிடுவதும் உண்டு. நித்தியகல்யாணி செடியில் இரண்டு வகை உண்டு. செடியின் அமைப்பு ஒரே மாதிரியாக இருந்தாலும் சில வகை செடிகளின் வெள்ளைப்பூ பூக்கும். மற்றொரு வகை செடிகளில் பூக்கும் மலரின் மேற்புற இதழில் சற்று இளஞ்சிவப்பு நிறம் காணப்படும்.

இதன் காய்கள் முருங்கைக்காய் போன்ற அமைப்பில் சற்று தடித்த கம்பியின் பருமனில் ஓர் அங்குல நீளமே இருக்கும். இந்த செடிகள் வெகு சீக்கிரத்தில் முளைத்து வளரும் இயல்புடையவை. இதனை வளர்ப்பதற்கு பெரிய முயற்சி எதுவும் தேவையில்லை. தன்னிச்சையாகவே இது பெருகி வளர்ந்து விடும். பொதுவாக கிராமப்புறங்களிலும் நகரங்களிலும் சாலையோரங்களில் சதாரணமாக பார்க்கக்கூடிய ஒரு செடி தான் இந்த அற்புத மூலிகை நித்யகல்யாணி.

நித்யகல்யாணிச் செடியின் பயன்கள்

நித்யகல்யாணிச் செடியின் மருத்துவ குணம் மிகவும் சிறப்புடையது. பல நோய்களை குணமாக்கும் இயல்பு இதற்கு உண்டு. அதிமூத்திரம், களைப்பு, அதிதாகம் ஆகியவற்றை குணமாக்கும். சிறுநீரகம் தொடர்பான பல பிணிகளை அற்புதமாக குணமாக்கும் என்பதை நம் முன்னோர்கள் நெடுங்காலத்திற்கு முன்னரே கண்டுபிடித்து இந்த மூலிகையை பயன்படுத்தி வந்தனர்.

நீரழிவு நோய்க்கு நித்ய கல்யாணி

நீரழிவு நோய்க்கு இது நல்ல மூலிகை என்பதை இன்று ஆங்கில மருத்துவர்களும் ஒப்புக் கொள்கின்றனர். இந்த காரணத்தால் நித்தியகல்யாணி அயல்நாட்டிற்குப் பெரும் அளவில் ஏற்றுமதியாகிறது. அங்கு நித்தியகல்யாணி மூலிகையின் சத்துக்களைப் பிரித்தெடுத்து மாத்திரைகளாகவும் ஊசி மருந்தாகும் தயார் செய்து உலகம் முழுவதற்கும் அனுப்புகின்றனர்.

சிறுநீர் தொந்தரவுகளுக்கு

சிறுநீர் வழியாக உடலில் சத்து வெளியேறுவதை இந்த மூலிகை அற்புதமாக தடுத்து சரி செய்கிறது. அதிதாகம், நாவறட்சி, அடிக்கடி சிறுநீர் வெளியாதல், சிறுநீர் மூலம் சர்க்கரை சத்து வெளியாதல் போன்ற குறைபாடுகளுக்கு நித்தியகல்யாணிப் பூ நல்ல மருந்தாக பயன்படுகிறது. இந்த மருந்தை மிகவும் எளிதாக தயார் செய்யலாம்.

நித்ய கல்யாணி பூ கசாயம்

15 நித்தியகல்யாணி பூவை சேகரித்து 200 மில்லி நீரில் போட்டு பாதியாக சுண்டக் காய்ச்சவேண்டும். இந்த கஷாயத்தை வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் ஒரு நாளைக்கு 4 வேளை சாப்பிட வேண்டும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டால் சிறுநீரகக் கோளாறுகள் சிறுகச் சிறுகச் குணமாகும்.

நித்திய கல்யாணி மூலிகைப் பொடி

நித்தியகல்யாணிச் செடியின் வேரைச் சேகரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் முறுக உலர்த்தி இடித்துப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இந்த பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வாயிலிட்டு சிறிது வெந்நீர் குடித்துவிட வேண்டும்.

நோய்க்குத் தக்கபடி ஒரு நாளைக்கு இரண்டு வேளையோ அதற்கு அதிகமாகவோ சாப்பிட்டால் நீரிழிவு நோய் படிப்படியாக குணமாகும். இந்த சூரணத்தை சாப்பிட்டால் சில மணி நேரங்களிலேயே சிறுநீர் சர்க்கரை சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைவதைக் காணலாம்.

(16 votes)