பச்சிளம் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவு முறைகளை இந்த பதிவில் பார்க்கலாம். பிறந்த குழந்தைகளுக்கு ஒவ்வொரு கட்டமாக உணவை அறிமுகப்படுத்துவது அவைசியமனது. மேலும் ஒரு வயதிற்குள் இயற்கையான சுவையில் இருக்கும் அறுசுவை உணவுகளையும் அளிக்க வேண்டும்.
பிறந்தது முதல் 4 மாதங்கள் வரை
பிறந்தது முதல் நான்கு மாதங்கள் வரை குழந்தைகளுக்கு பிரதானமான ஒரே உணவு தாய்ப்பால் மட்டுமே. தாய்ப்பாலை 8 முதல் 12 முறை ஒவ்வொரு நாளும் புகட்டவேண்டும். சில பெண்களுக்கு தாய்ப்பால் குறைவாக சுரந்தால் அதற்கு அம்மான்பச்சரிசி பால், பூங்கார் அரிசி, பழங்கள், கீரை, காய்கறிகள், மாதுளம் பழம் ஆகியவற்றை உட்கொள்ள தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். மேலும் ஒவ்வொரு முறையும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் முன் தண்ணீர் அருந்திவிட்டு கொடுக்க வேண்டும்.
நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை
நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் முதன்மையான உணவு. அதனுடன் ஒரு வேளைக்கு லகுவான திட உணவுகளை (Semisolid) தானியங்களைச் சேர்க்க ஆரம்பிக்கலாம். தாய்ப்பாலுக்கு அடுத்து குழந்தைக்கு அளிக்கும் முதல் உணவு கேழ்வரகு கூழ். அதாவது கேழ்வரகை ஊறவைத்து பாலெடுத்து அதிலிருந்து தயாரிக்கப்படும் கேழ்வரகு பால் கூழ். ஒரு நேரத்திற்கு மட்டும் இதனை கொடுக்கலாம். அதேபோல் காய்கறி கூழ் செய்து கொடுக்கலாம்.
6 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரை
6 மாதத்திற்கு மேல் உணவுகளை ஒவ்வொன்றாக தொடங்கவேண்டும். தாய்ப்பால் குடிப்பது குறைந்து மூன்று முறை ஐந்து வேளை என இருக்க, ஒவ்வொரு நாளும் புரதச் சத்து, மாவுச் சத்து உள்ள உணவுகள் அன்றாடம் கொடுப்பது சிறந்தது. பட்டாணி, வாழைப்பழம், பழங்கள் காய்கறி, பாரம்பரிய சிகப்பரிசிகளால் தயாரிக்கப்பட்ட இட்லி, கேழ்வரகு, கம்பு போன்ற உணவுகளில் கூழ் கொடுப்பது சிறந்தது.
8 முதல் 12 மாதங்கள் வரை
8 முதல் 12 மாதங்கள் வரை உள்ள குழந்தைகளுக்கு புரதம், இரும்பு சத்துக்கள் நிறைந்த சாதம், பருப்பு, நெய் ஆகியவற்றை கொடுக்கவேண்டும். இதனுடன் கீரைகள், காய்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சாதத்தை நன்கு குழைய வேக வைத்துக் கொண்டு அதனுடன் பருப்பு, நெய் சேர்த்துக் கொடுக்க வேண்டும். ஒரு நேரத்திற்கு இட்லி கொடுக்கலாம்.
ஒன்று முதல் ஒன்றரை வயதுள்ள குழந்தைகளுக்கு
தாய்ப்பாலை குறைத்து புரதம், கொழுப்பு சத்துள்ள உணவுகளை கொடுக்க வேண்டும்.
1 முதல் 2 வரை உள்ள குழந்தைகளுக்கு
தாய்ப்பால் நிறுத்தாமல் கொழுப்பு உணவை குறைத்து கால்சியம், இரும்பு சத்துக்கள், வைட்டமின் ஏ, பி, ஈ போன்ற சத்துக்கள் உள்ள உணவுகளை கொடுக்க வேண்டும்.
பசியை தூண்ட கருவேப்பிலை துவையல், இஞ்சி துவையல் போன்றவற்றை அவ்வப்பொழுது கொடுப்பது சிறந்தது. சுண்ணாம்புச் சத்துக்களும், இரும்புச் சத்துக்களும் உள்ள உணவுகளையும் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அவ்வப்பொழுது முருங்கை இலை அடை, எள்ளுருண்டை, தானிய உருண்டை, கேழ்வரகு அடை, கேழ்வரகு புட்டு, பச்சைப்பயறு பாயாசம் போன்றவற்றையும் அவ்வப்போது தயாரித்த ஆறு மாதத்திற்குப் பின் கொடுப்பது சிறந்தது. அவல் உணவுகள், தினை உருண்டை, பொரி விளங்காய் உருண்டை, உளுந்து வடை, பருப்பு பாயாசம், கீரை மசியல் ஆகியவற்றையும் கொடுப்பது சிறந்தது.
குழந்தைகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட உணவை முறைப்படி சேர்க்க வேண்டும். உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் நிறுத்தி பத்து நாள் கழித்து பழகவேண்டும். ஒவ்வொரு உணவையும் வாரத்திற்கு ஒரு முறை என புதிதாக ஒரு உணவை அறிமுகப்படுத்த வேண்டும். ஒரு உணவை தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுக்க அவை உடலுக்கு ஏற்றுக் கொள்ளத் தொடங்கி விடும். இவ்வாறு ஐந்து மாதத்திலிருந்து ஒவ்வொரு உணவாக புதுப்புது உணவுகளை கொடுக்க வேண்டும். ஒரு வயதிற்குள் அனைத்துவிதமான சுவையான இயற்கை சுவையான உணவுகளையும் கொடுப்பது சிறந்தது.