நீர்முள்ளி – நம் மூலிகை அறிவோம்

Hygrophila auriculata; நீர் முள்ளி

நீர் முள்ளி செடி நீர் நிலையை அடுத்து ஈரமான சதுப்பில் தானாக வளரக்கூடியது. இது சுமார் இரண்டு இரண்டரை அடி உயரம் வளரும். இது குச்சி போல கிளைகளை விட்டு அடர்த்தி இல்லாதபடி மாவிலை போன்ற வடிவத்தில் சிறிய அளவில் இலைகளைக் கொண்டிருக்கும். இதன் மலர்கள் கருஞ்சிவப்பு நிறத்தில் அழகாக பூத்திருக்கும். இலைகளை அடுத்து புஷ்பம் தோன்றி அது காயாகக் காய்க்கும். தமிழகமெங்கும் காணப்படக்கூடிய ஒரு வகை மருத்துவச் செடி இது. செடி முழுவதுமே மருத்துவப் பயனுடையது.

இதன் மேல் முள் படர்ந்து இருக்கும். இதன் காய்கள் முற்றி வெடிக்க உள்ளிருக்கும் விதைகள் நாலாபக்கமும் சிதறும். இதன் விதைகளும் அதிகளவில் மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படக்கூடியது.

சிறுநீரை பெருக்கி; தாதுக்கள் அழுகி விடுவதைத் தவிர்க்கும் மருந்தாகவும் இந்த நீர்முள்ளி செயல்படுகிறது. விதை காமத்தை பெருக்கக் கூடியதாகவும் உள்ளது. பொதுவாக நிறைய இடங்களில் ஆண்மையை அதிகரிக்கவும், குழந்தையின்மையை போக்கவும் இதன் விதைகள் மருந்தாகப் பயன்படுத்துவதுண்டு.

நீர்கடுப்பு குணமாக

சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் உண்டாவதையே நீர்க்கடுப்பு என்போம். உஷ்ணம் காரணமாகவே நீர்க்கடுப்பு ஏற்படும். இதைப் போக்க நீர்முள்ளி இலை பயன்படும். நீர்முள்ளி இலையை சுத்தம் செய்து உரலில் போட்டு நன்றாக இடித்து சாதம் கொதிக்கும் போது கிடைக்கும் வெந்நீரை சூட்டுடன் ஆழாக்களவு ஒரு பாத்திரத்தில் எடுத்து இந்த இடித்த இலையை அதில் போட்டுக் கலக்கி அப்படியே மூடி விட வேண்டும். ஒரு மணி நேரமான பின் அதை எடுத்து வடிகட்டி குடித்து விட வேண்டும். இந்த விதமாக காலை மாலையாக இரண்டே நாள் குடித்தால் போதும் நீர் கடுப்பு குணமாகும்.

நீர்கடுப்பு விதை

விதையைப் பொடித்து பாலில் கலந்து உண்டு வர வயிற்றுப் போக்கு, நீர்க்கோவை, இரைப்பிருமல் மாதிரியான பிரச்சனைகள் நீங்கும். அதுமட்டுமில்லாமல் இந்த நீர்முள்ளி விதை, நெருஞ்சில் விதை, தனியா விதை சேர்த்து நீரில் கொதிக்க வைத்து உட்கொள்ள வாத வீக்கம் தீரும், நீர்முள்ளி விதை, நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை சேர்த்து அருந்த உடல் தாது பலப்படும்.