Azadirachta indica; வேப்ப மரம்
தமிழகத்தில் திரும்பும் இடமெல்லாம் பார்க்கக்கூடிய ஒரு மூலிகை மரம் வேம்பு. இந்த வேப்பமரம் சிறந்த ஒரு கிருமி நாசினியாக உள்ளது. வேப்ப மரம், நிம்பம், அறிட்டம்ம் பிசுமந்தம், வாதாரி, பாரிபத்திரம் என பல பெயர்களை கொண்டிருக்கக்கூடிய ஒரு மூலிகை மரம்கள் இந்த மூலிகை மரம் வேம்பிற்கு உள்ளது. சமஸ்கிருதத்தில் இதனை நிம்பா என்றும் அழைப்பதுண்டு.
ரம்பம் போன்ற இலைவிளும்புடைய, சிறகு போன்ற வடிவத்தில் கூட்டிலைகளை மாற்றிலை அடுக்கில் இருக்கும். கூடாக வெண்மை நிற மலர்கள் இலைக் கோணங்களில் காணப்படும். வேம்பின் காய்கள் நீள வட்ட வடிவத்தில் பச்சை நிறத்தில் காணப்படும். காய்கள் பழுத்த பின் மஞ்சள் நிறமாக இருக்கும்.
வேப்பமரத்தின் சமூலமே மருத்துவ பயன் கொண்டது. அதேப்போல் கசப்பு சுவையை கொண்டது இந்த மரம். வெப்பத்தை அதிகரிக்க கூடிய தன்மையையும் கார்ப்பு பிரிவையும் கொண்டது.
வேம்பின் விதையில் Azadirachtin எனும் கசப்பு வேதிப்பொருட்களும் பட்டையில் Tannin உள்ளன. இது புழு பூச்சிகளை கொள்வதற்கும், வெப்பத்தை உண்டாக்கவும், உரமுண்டாக்கியாகவும் உள்ளது. வேப்பமரம் வயிற்றுப்புழு, மாந்தம், அம்மை, சொறி சிரங்கு, காமாலை, கப நோய்கள், புழுவெட்டு, கட்டிகள், பலமின்மை, சுவையின்மை, வாந்தி, விஷம், காய்ச்சல், உடல் வலி என பல நோய்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது.
கட்டிகள் வீக்கம் நீங்க
வேப்பிலையை நீர்விட்டு அரைத்து கட்டி வர நாள்பட்ட புண்கள், பழுத்து உடையாத கட்டிகள், வீக்கம் முதலியன குணமாகும்.
வேப்பிலை குடிநீர்
வேப்பிலையைக் குடிநீர் செய்து பருகிவர பித்தப்பையில் உள்ள அதிக நீரை வெளியேற்றி காமாலையைக் குணப்படுத்தும்.
கப நோய் நீங்க
வேப்பிலையை ஏதேனும் ஒரு முறையில் தொடர்ந்து உண்டுவர புத்தி தெளிவடையும். சூட்டை அதிகப்படுத்தி கப நோய்களை நீக்கும். பொதுவாக நம் முன்னோர்கள் அதிகாலையும் வேப்பங்கோலுந்தையும் வேப்பங்குச்சியையும் பயன்படுத்தினர். காலை இரண்டு வேப்பங்கொலுந்தை பறித்து வாயில் மெல்வதால் பல விதங்களில் அது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.
தோல் நோய்களுக்கு
வேப்பம் விதைப் பொடியை தேன் கலந்துதொடர்ந்து உண்டு வர தோல் நோய், நரம்பு வலி, மூலம், குடல் புழுக்கள், சூதக ஜன்னி ஆகியன தீரும்.
வேப்பங்கொழுந்து
வேப்பங்கொழுந்துடன் சிறிது முதிர்ந்த இலை, ஓமம், உப்பு சேர்த்து பொடி தயாரித்து சாப்பிட்டு வர கண் படல மறைப்பு, கட்டிகள், புழுவெட்டு, மாலைக்கண், வெள்ளை, காமாலை, கழிச்சல் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் வேப்பங்கொழுந்து வயிற்றுப் பொருமல், அஜீரணம், குடல்புழு, மாந்தம், மலச்சிக்கல் அகிய தொந்தரவுகளையும் தீர்க்கும்.
பரு, கட்டி நீங்க
வேப்பிலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துக் கட்டி வர பித்தவெடிப்பு, அம்மைக் கொப்புளம், பொன்னுக்கு வீங்கி, பரு, கட்டி, புண்கள் நீங்கும்.
வேப்ப எண்ணெய்
வேப்ப விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வேப்ப எண்ணெய். இதனுடன் வேலிப்பருத்தி இலையை சேர்த்து இளம் சூட்டில் வதக்கி ஒற்றடமிட ஜன்னியினால் ஏற்படும் வலி, நரம்பு வலி, கீல்வாதம், சிரங்கு, கரப்பான் முதலியன தீரும்.
தொழுநோய் நீங்க
50 வருடங்களுக்கு மேலான வேப்ப மரப்பட்டையும் நாள்பட்ட பூவரசமரம் பட்டையையும் சம பங்கு பொடி செய்து 2 கிராம் வீதம் தினம் இரண்டு வேளை தேனுடன் தொடர்ந்து நீண்ட நாட்கள் உண்டுவர தொழுநோய் மற்றும் தோல் நோய் மறையும்.
வேப்பம் பூ குடிநீர்
வேப்பம் பூவை குடிநீர் செய்து தினமும் பருகி வர உடல் பலக்குறைவு நீங்கும். வயிற்று வலி, அஜீரணம் தீரும். மேலும் இந்த வேப்பம் பூவைக்கொண்டு வேப்பம்பூ ரசம் செய்தும் மற்ற உணவுகளை தயாரித்தும் உண்ணலாம்.
தலைவலி தீர வேப்பம் புண்ணாக்கு புகை
வேப்பம் புண்ணாக்கை பொடி செய்து அதை நெருப்பில் இட்டு முகர மூக்கிலிருந்து நீர் வடியும். தும்மல் உண்டாகும். தலைவலி மற்றும் வாத, பித்த, கப நோய்கள் தீரும். கொசுக்களும் ஒழியும்.