வேப்பமரத்தின் பூக்கள் வேப்பம்பூ. இந்த மரத்தின் பூக்கள் பூக்கும் காலத்தை கொண்டாடவே சித்திரைத் திருநாளில் கட்டாயம் இந்த வேப்பம்பூவை இடம் பிடிக்கிறது. வாழ்க்கை இன்ப துன்பத்தை கொண்டிருப்பதைப் போல் நமது உணவிலும் அறுசுவைகள் கலந்திருக்க ஆரோக்கியம் மேம்படும் என்பதையே அது சுட்டிக்காட்டும்.
வேப்பம்பூ சிறந்த கிருமிநாசினி மட்டுமல்லாமல் உடலுக்கு பல நன்மைகளையும் அளிக்கிறது. எவ்வாறெல்லாம் வேப்பம்பூவை பயன்படுத்த எதற்கெல்லாம் அது உதவும் என பார்க்கலாம். வேப்பம்பூவை பறித்தவுடன் பயன்படுத்துவதுடன் காயவைத்து பயன்படுத்துவது சிறந்தது. பித்தம், வாதம், கபத்தை போக்கும். நெய்யில் வறுத்து அவ்வப்பொழுது உண்டுவர நல்ல பலனை அளிக்கும். வேப்பம்பூ ரசம், வேப்பம்பூ துவையல் செய்து அவ்வப் பொழுது உண்பது சிறந்தது.
வேப்பம்பூவின் தன்மை
வேப்பம்பூவின் தன்மை சீரண சக்தியை அதிகரிக்கும்: உடல் வெப்பத்தை ஏற்படுத்தும். பித்தத்தைக் கண்டிக்கும்.
சிறுவர்களுக்கு வயிற்று பூச்சி ஒழிக்க
வயிற்றில் பூச்சிக்கு வேறு எந்த ஆங்கில மருந்துகளை விடவும் சிறப்பாக வெளியேற்றும். வேப்பம்பூ வயிற்றுக்குத் தீங்கின்றி குடலிலுள்ள மலக்கிருமிகளை ஒழிக்கும். ஜங்க் உணவுகள், கடை உணவுகள், பொட்டல உணவுகள், அடைக்கப்பட்ட உணவுகள் என கண்டதையும் தின்னும் சிறுவர்களின் வயிற்றைச் சுத்தப்படுத்த வேப்பம்பூ கஷாயம் நல்ல மருந்து. வேப்பம் பூவை நீரிலிட்டு கசயமாக்கி கொடுக்க கிருமிகள் அழிந்து வெளியேறும்.
உடல் பருமனுக்கு
உடல் பருமனைக் குறைக்க நாள்தோறும் வேப்பம்பூவை ஊற வைத்து அந்த நீரை வேப்பம்பூ குடிநீரை அருந்த உடல் பருமன் குறைத்து மெலியலாம்.
காது தொந்தரவுகளுக்கு
காதில் சீழ் அல்லது இரணம் ஏற்பட்டிருந்தால் நல்ல கொதி நீரில் வேப்பம் பூவைப் போட ஆவி வரும். அந்த ஆவியைக் காதில் பிடித்தால் சீழ், இரணம் விரைவில் சரியாகும். தொண்டைப் புண்ணாக இருந்தால், வாயைத் திறந்து தொண்டைக்குள் ஆவி பிடிக்க தொண்டைப் புண் குணமாகும்.
வாந்தி, ஏப்பம் தீர
அடிக்கடி ஏப்பம், வாந்தி ஏற்படுவது அல்லது ஏற்படுவது போல் இருந்தால் வேப்பம் பூவை வறுத்துப் பொடி செய்து, பருப்பு ரசத்துடன் (வேப்பம் பூ ரசம்) கலந்து உண்ண வாந்தி, ஏப்பம் தீரும் அதனால் வரும் தொல்லைகளும் அறவே நீங்கும்.
கண்களுக்கு வேப்பம்பூ
கண் பார்வை பளிச்சிட உலர்ந்த வேப்பூவை நன்கு இடித்து, சம அளவு வெடியுப்புப் பொடியுடன் கலந்து காற்றுப் புகா குப்பியில் பத்திரப்படுத்தி, தேவைப்படும் பொழுது எடுத்துக் கண்களில் தீட்டி வர நல்ல பலன் பெறலாம். கண் பார்வை பளிச்சிடும்.
நோய்கள் அண்டாமல் இருக்க
எந்த நோயும் அணுகாதிருக்க வேப்பம்பூவைத் தேனில் ஊற வைத்து ரோஜாப்பூ குல்கந்து போல் வேப்பம்பூ குல்கந்து தயாரித்து ஒவ்வொருநாளும் இரவு படுக்கும் முன் கொட்டைப்பாக்கு அளவு உண்டுவர ஆரோக்கியம் பெருகும், எந்த நோயும் அணுகாது.