நாயுருவி – நம் மூலிகை அறிவோம்

தமிழகத்தில் சாலையோரங்களில் அதிலும் கிராமப்புறங்களில் அதிகமாக பார்க்கப்படும் அதிலும் அனைவருக்கும் தெரிந்த ஒரு மூலிகை இந்த நாயுருவி. பொதுவாக ஏதேனும் ஒரு புதர்கள், சிறுசெடிகள் மண்டியிருக்கும் இடங்களில் நடந்து வந்தாலே சிறுசிறு முட்கள் கொண்ட விதைகள் நமது ஆடைகளில் ஒட்டிக்கொள்வதை பார்த்திருப்போம். அதுதான் இந்த நாயுருவி.

இது ஒரு சிறு செடி வகையைச் சேர்ந்தது. நீள் வட்ட வடிவமான இலைகளை எதிர் அடுக்குகளாக கொண்டிருக்கும் மூலிகை இது. நீண்ட கதிர்களையும் கொண்டது. விதைகள் அவற்றை சூழ்ந்துள்ள சிறு முட்களுடன் எளிதில் ஒட்டிக்கொண்டு பரவும் தன்மை உடையவை. இவற்றில் இலைகள் தண்டுகள் செந்நிறத்தில் இருக்க அவை செந்நாயுருவி.

கைப்பு சுவையையும் வெப்ப தன்மையையும் கார்ப்பு பிரிவையும் கொண்டிருக்கக்கூடிய ஒரு மூலிகை இந்த நாயுருவி. இலை, தண்டு, வேர் என அனைத்து பாகங்களும் மருத்துவ பயனுடையது.

இதனுடைய வேறுபெயர்கள் சனம், சிகிசிரம், அபமார்க்கி, காஞ்சரி, கதிரி, சரமஞ்சரி, நாய்குருவி, கிருஷ்ணபன்னி, செகரிகம், கேசரிகம், கொட்டாவி, நாயரஞ்சி, மாமுனி என பல பல பெயர்கள் உள்ளது,

சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும் தன்மை கொண்டது. சிறுநீர் பெருக்கியாகவும் இருக்கக்கூடியது. சிறுநீர் நோய்கள், நீர்க்கோவை, வியர்வை, ரத்த மூலம், கண் நோய், தோல் வியாதிகளை குணமாக்கக் கூடிய தன்மை கொண்டது. நோயை நீக்கி உடலைத் தேற்றும் சிறந்த மூலிகை. கழிச்சல், வெள்ளை, அதிக பசி, மலச்சிக்கல் நீங்கும். பல் வலி, காது வலி தீரும். முகத்திற்கு அழகு தரும்.

நாயுருவி பயன்கள்

மூல நோய்

நாயுருவி இலையை மையாக அரைத்து நல்லெண்ணையுடன் கலந்து தினமும் இரண்டு வேளை வீதம் 10 – 15 நாட்கள் கொடுக்க ரத்த மூலம் தீரும்.

நாயுருவி விதையை அரிசி கழுவிய நீருடன் கலந்து கொடுக்க மூலம் தீரும்.

நாயுருவி விதைச் சூரணத்தை துத்தி கீரை வதக்கலில் கலந்து உணவுடன் உட்கொள்ள அனைத்து வகை மூல நோய்களும் விலகும்.

பல் நோய்க்கு

இந்த நாயுருவி பச்சை வேரால் பல் துலக்கி வர பல் நோய் நீங்கி அழகு பெறும்.

நாயுருவி குடிநீர்

நாயுருவிச் செடியை குடிநீர் எடுத்து 20 முதல் 30 மில்லி வரை அருந்திவர நீர்க்கட்டு, சிறுநீர் எரிச்சல் நீங்கி சிறுநீர் பெருகும்.

நஞ்சுக்கடி

நாயுருவி இலையை நீர்விட்டு அரைத்து பூச சிறு நஞ்சுக்கடி தீரும்.

தோல் நோய்

நாயுருவி இலைச்சாறை உடம்பில் பூசி வர படை, தேமல் நீங்கும்.

நாயுருவி சாம்பலைக் கொண்டு மருந்து தயாரித்து கொடுக்க எட்டு வகையான குன்ம நோய்கள் குணமாகும்.

இருமல், சளி குணமாக

நாயுருவி வேர் பொடியுடன் சிறிது மிளகு பொடி, தேன் கலந்து கொடுக்க இருமல், சளி குணமாகும்.

விஷக்கடி நீங்க

நாயுருவி இலையை புதிதாக பறித்து நன்கு கசக்கி சாறுடன் தேள் கடித்த இடத்தில் தேய்க்க விஷம் நீங்கும்.

செந்நாயுருவி என்றொரு வகையும் உண்டு. இது படருருக்கி என்றும் அழைக்கப்படும்.நாயுருவியை விட செந்நாயுருவி சிறந்ததாகும். எனினும் இது கிடைப்பது அரிதாகும்.