இயற்கை களைக் கொல்லி

செடி கொடி பயிர்களை வணீகரீதியாக விவசாயம் செய்பவர்களுக்குத் தான் தெரியும் களைகளினால் ஏற்படும் பாதிப்புகளும் தொந்தரவுகளும். களைகளால் பயிரிடப்படும் பயிர்களின் வளர்ச்சி குறைவது, மகசூல் குறைவது, சத்துப் பற்றாக்குறை ஏற்படுவது, பூச்சிகளின் தாக்குதல் என பல தொந்தரவுகள் ஏற்படும். அதனால் விவசாய நிலங்களில் பயிர்களுக்கு நடுவில் வளரும் களைகளை கட்டுப்படுத்துவது அதிக முக்கியத்துவம் பெறுவதாக உள்ளது.

களைகளைக் கட்டுப்படுத்த இன்று அதிக நச்சுக்களைக் கொண்ட விசக்கொல்லிகள் அதாவது களைக் கொல்லிகள் பயன்படுத்தப் படுகிறது. இதனால் களைகள் மட்டும் அழிவதில்லை, அந்த பயிர்களில் இருந்து கிடைக்கும் உணவு தானியங்கள், விளைபொருட்கள் ஆகியவற்றை உண்பதால் உண்பவர்களின் உடல் ஆரோக்கியம் சீர்கேடு அடையும், உள்ளுறுப்புகள் பழுதடையும், காரணம் தெரியாத பல நோய்கள் தோன்றும், மலட்டுத் தன்மை, ஹார்மோன் குறைபாடுகள் ஏற்படும். மேலும் வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் பல பிறப்பு நோய்களுக்கும் இது காரணமாக உள்ளது. அதனால் இரசாயனா களைக் கொல்லிகளை முற்றிலும் தவிர்ப்பது சிறந்தது.

உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் மண்ணையும் மலடாக மற்றும் திறன் கொண்டது இந்த களைக் கொல்லிகள். அதனால் இவற்றை தவிர்ப்பது மனிதர்களுக்கும், மண்ணிற்கும், சுற்றுசூழலுக்கும் அவசியமானது. அதனால் இதற்கு சிறந்த தீர்வாக இயற்கை களைக்கொல்லி அதாவது இயற்கையாக களையைக் கட்டுபடுத்தும் சில வழிகள் அவசியமாகிறது.

இயற்கையாக களையைக் கட்டுப்படுத்த சில வழிகள்

  • இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா களைகளைக் கட்டுபடுத்த அடிக்கடி ஒரு வழியைக் கூறுவார். அதாவது ‘விதைக்கும் இடத்தில் நடக்காதே; நடக்கும் இடத்தில் விதைக்காதே’ என்பார். மண்புழுக்கள் வேலை செய்யும் மண்ணில் நமது கால்களை வைக்காமல் பல பயிர் சாகுபடி செய்ய அங்கு களைச்செடி முளைக்காது, அதேப்போல் நடக்கும் இடத்தை நடைபாதையாகவே வைத்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு விவசாய நிலத்தை சீராக பிரித்து பயிரிட களைகள் முளைக்காது. இது Permaculture எனப்படும் நிரந்தர வேளாண்மையில் சாத்தியமாகும்.
  • மூடாக்கு களைகளை ஒழிக்க மிக சிறந்த வழி. விவசாய நிலத்தை மூடி பயிரிட மண் வளம் மேம்படும், களைகள் அழியும்.
  • ஊடுபயிர் சாகுபடி களைகளைக் கட்டுப்படுத்த சிறந்த வழி. இதனை பல பயிர் சாகுபடியாகவும் செய்ய களைகள் கட்டுப்படும், மகசூல் அதிகரிக்கும்.
  • நாட்டுப் பசுவின் நேரடி கோமூத்திரம் புதுதாக பெற்றது களைகளை கட்டுபடுத்தும் அதிக ஆற்றல் கொண்டது. அதனால் நீர் கலக்காத கோமூத்திரத்தை பயிர்கள் மீது படாமல் களைகள் மீது தெளிக்க ஓரிரு நாட்களில் களைகள் கருகிவிடும்.
  • கல் உப்பையும் நாட்டுப் பசு கோமூத்திரத்துடன் சேர்த்து தெளிக்கலாம். ஒரு லிட்டர் கோமூத்திரத்திற்கு இருநூறு கிராம் கல் உப்பு சேர்த்து தெளிக்க விரைவாக களைகள் கருகும், பயிர்களின் மீது படாமல் தெளிக்க வேண்டும்.
  • சிறிது சுண்ணாம்பு கல்லுடன், கல் உப்பையும் நாட்டுப் பசு கோமூத்திரத்துடன் சேர்த்தும் தெளிக்கலாம். ஒரு லிட்டர் கோமூத்திரத்திற்கு இருநூறு கிராம் கல் உப்பு சிறிது சுண்ணாம்பு சேர்த்து தெளிக்க விரைவாக களைகள் கருகும், பயிர்களின் மீது படாமல் தெளிக்க வேண்டும். இவற்றுடன் சிறிது எருக்கன் இலையையும் அரைத்து நன்கு கலந்து ஒரு வாரம் ஊறவைத்தும் சேர்க்கலாம்.
  • விவசாய நிலங்களில் அதிகமாக களைகள் வளர்ந்திருக்க அதற்கு ஒரு கரைசலை தயாரித்தும் களைகளைக் கட்டுப்படுத்தலாம். கோமூத்திரம், கடுக்காய் தோல், எலுமிச்சை சேர்த்த கடுக்காய் கரைசல் அதிக பலனையும் அளிக்கும்.
(1 vote)