களைக்கொல்லிகள் விவசாய நிலங்களில் வளரும் தேவையில்லாத பூண்டு, செடிகளை, கொடிகளை அழிப்பது மட்டுமல்லாமல் நமது உடல் ஆரோக்கியத்தையும் மண்ணையும் சேர்த்து மெல்ல அழிக்கிறது. அதிகமாக களைக்கொல்லிகளை பயன்படுத்த அதனால் மண், சுற்றுசூழல், நீர் என அனைத்தும் நஞ்சாக மாறுகிறது. இதனை நேரடியாகவோ அல்லது மறைமுகமாக நாம் தொடர்ந்து பயன்படுத்த பல உடல் உபாதைகள், நோய்கள் அதிலும் காரணம் தெரியாத நோய்கள் நம்மை தாக்குகிறது. இவை சாதாரண தலைவலி தொடங்கி மலட்டுத் தன்மை, புற்றுநோய்க்கும் காரணமாக உள்ளது. இவற்றை விவசாயம் செய்பவர்கள் தவிர்ப்பதும், இவற்றைக் கொண்டு விளைந்த உணவுகளை நாம் தவிர்ப்பதும் உலகின் ஒட்டு மொத்த சுழற்சிக்கும் உறுதுணையாக இருக்கும்.
இயற்கை முறையில் களை செடிகளை தவிர்க்க பல வழிகள் உள்ளன. அவற்றை மேற்கொள்வதும், இயற்கையாக களையை நீக்கும் சில கரைசல் தயாரித்தும் பயன்படுத்த நல்ல பலனைப் பெறலாம். அந்த வகையில் கடுக்காய் கரைசல் நல்ல பயன் தரக்கூடியது. அனைத்து விவசாய நிலத்திற்கும் இது ஏற்றது மட்டுமல்லாமல் நெல் வயலிலும் பயன்படுத்தலாம். கோரை, அருகம்புல் உட்பட அனைத்து களையையும் கட்டுப்படுத்தும் தன்மைக் கொண்டது.
கடுக்காய் கரைசல் தேவையான பொருட்கள்
- நாட்டுப் பசு சிறுநீர் – 5 லிட்டர்
- கடுக்காய் கொட்டை தூள் – 1 1/2 கிலோ
- எலுமிச்சை – 5
கடுக்காய் கரைசல் செய்முறை
முதலில் நாட்டுப் பசு சிறுநீர் / கோமூத்திரத்தை ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் வைத்து ஒரு துணி அல்லது சணல் சாக்கு கொண்டு வாயை நன்கு மூடி கட்டி நிழலில் ஒரு மாதம் வைக்க வேண்டும்.
பின் கடுக்காய் கொட்டை தூள் சேர்த்து நன்கு கலந்து எலுமிச்சை சாறு மற்றும் அதன் தோலையும் கோ மூத்திரத்தில் சேர்த்து நன்கு கலந்து பதினைந்து நாட்கள் தினமும் இரண்டு முறை கலந்து வைக்க பதினைந்து நாளில் கடுக்காய் கரைசல் தயாராகிவிடும். மூன்று மாதம் இதனை வைத்துப் பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை
ஒரு பங்கு கடுக்காய் கரைசலுக்கு முப்பது பங்கு நீர் சேர்த்து பயிர்கள் மீது படாமல் களைகள் மீது காலை நேரத்திலேயே தெளிக்க வேண்டும். இதனை பயன்படுத்துவதற்கு முதல் நாளே பயிர்களுக்கு நீர் பாய்ச்ச வேண்டும். கடுக்காய் கரைசல் தெளித்த பின் ஒரு ஐந்து நாட்கள் பயிர்களுக்கு நீர் பாய்ச்சக் கூடாது. இவ்வாறு செய்ய ஒரு வாரத்தில் களை கருக தொடங்கும்.